யோ.நிமல்ராஜ்
மூதூரில் 2006 ஆகஸ்ட் இரண்டாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை தமது வீட்டினை விடுதலைப் புலிகள் சுற்றி நின்றபோது தானும் தனது குழந்தைகள் உட்பட சிலரும் மரண பயத்துடன் வீட்டிற்குள் இருந்ததாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பெண் பொலிஸ் அதிகாரி அக்ஷன் பாம் படுகொலை வழக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.
மூதூரில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் அக்ஷன் பாம் அலுவலக ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஜனாதிபதி ஆணைக்குழுவால் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மேலும் தெரிவிக்கையில்; நானும் எனது கணவனும் பொலிஸ் திணைக்களத்திலேயே பணிபுரிகின்றோம். எனது கணவர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்றார். நான் மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வருகின்றேன்.
எனக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. நான் மூதூரிலேயே தற்காலிகமாக வீடொன்றில் வசித்து வருகின்றேன்.
இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதியன்றும் வீட்டில் இருந்தோம்.
அன்றைய தினம் நானும் எனது இரு குழந்தைகளும் மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரியும் புஸ்பலதாவும் மகனும் சிசிர என்ற பொலிஸ் அதிகாரியும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் என்னுடைய வீட்டில் இருந்தனர்.
2006 ஆகஸ்ட் முதலாம் திகதியன்றே மூதூரில் வெடிச்சத்தங்களும் துவக்குச் சூட்டுச் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தது.
அன்றைய தினம் முதல் ஐந்தாம் திகதி வரை நாம் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.
இந்நிலையில் இரண்டாம் திகதியன்று மூதூர் நகரத்தின் அனைத்து பகுதிகளிலுமிருந்து வெடிச்சத்தங்கள் கேட்கத்தொடங்கின.
சத்தம் எந்தத் திசையிலிருந்து கேட்கின்றதென்பதை அவதானிக்க முடியாதளவிற்கு மிகவும் மோசமாக வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கின.
அப்போதும் நாம் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. வீட்டிற்கு உள்ளேயே இருந்தோம்.
அப்போது எம்மிடம் கையடக்கத் தொலைபேசி ஒன்று இருந்தது. ஆனாலும் மூதூர் பொலிஸ் நிலையத்திற்குத் தொடர்பினை ஏற்படுத்தி எமது நிலைமையை தெரியப்படுத்த முடியவில்லை.
நேரம் செல்லச் செல்ல சத்தங்கள் மேலும் உக்கிரமடைந்து கொண்டே சென்றது. இந்நிலையில் அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணியளவில் சிலர் தமிழில் உரையாடுவதை அவதானிக்க முடிந்தது.
நாம் வீட்டிற்கு வெளியில் வரவில்லை. உள்ளே இருந்தவாறே அவர்களின் குரலை அவதானித்தோம்.
அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை தாதி புஸ்பலதா என்பவர்தான் சிங்களத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.
அன்று புஸ்பலதா மொழியெர்த்துக் கூறும்போது அவர்கள் தூரத்திலிருந்து பேசுவதால் தனக்கு சரியாக விளங்கவில்லையென்றும் அவர்களுடைய தமிழ் உரையாடலும் மூதூர் பகுதி பேச்சுத் தமிழைவிட வித்தியாசமாக இருப்பதாகவும் சுடு, கொல் என்று பேசுவது மட்டும்தான் விளங்குவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் எமது வீட்டிற்கு பின்புறமுள்ள வீதியில் இவர்களின் உரையாடலை கேட்க முடிந்தது.
எனது வீட்டின் முன்னாலுள்ள முற்றத்தில் கிணறு ஒன்று உள்ளது. அதனைச் சுற்றி தடுப்புச் சுவர்களும் உள்ளது. அதேபோல் வீட்டைச் சுற்றியும் தடுப்புச் சுவர் உள்ளது.
இக் கிணற்றடியில் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பேச்சை எம்மால் அவதானிக்க முடிந்த அதேநேரம் அவர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஆனால், நாம் எவரும் வீட்டைவிட்டு வெளியில் செல்லவில்லை. எமது வீட்டின் கதவுகளும் யன்னல்களும் மூடப்பட்டே இருந்தன.
முதலாம் திகதியிலிருந்து ஐந்தாம் திகதிவரை நாம் எவரும் வெளியில் செல்லவுமில்லை. எமது வீட்டின் கதவுகளும் ஐந்து தினங்களும் மூடப்பட்டேதான் இருந்தது.
இரண்டாம் திகதி ஆரம்பித்த மோதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது. இந்நிலையில் மூதூர் பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டு எமது நிலைமையை தெரிவித்தோம். ஆனால், அவர்களும் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுப்பதாகக் கூறினார்கள்.
மூன்றாம் திகதி நடைபெற்ற மோதல்களின்போது எமது வீட்டின் சுவர்களில் துளைகள் ஏற்பட்டிருந்தன.
அத்துளைகளூடாக வெளியில் பார்த்தபோது ரீசேட், சாரம் அணிந்தவாறு ஆயுதங்கள் தாங்கிய வண்ணம் விடுதலைப் புலிகள் வீதியில் நின்றதைக் கண்டேன்.
நான்காம் திகதியும் இவ்வாறான நிலைமையிலேயே இருந்தது.
இந்நிலையில் ஐந்தாம் திகதியன்று காலையிலும் விடுதலைப் புலிகள் எமது வீட்டிற்கு முன்னாலுள்ள வீதியில் நின்றிருந்தனர்.
மூன்றாம் திகதியன்றும் தொலைபேசி மூலம் எமது நிலைமையை கூறியிருந்தும் மூதூர் பொலிஸ் நிலையத்திலிருந்து எம்மை மீட்பதற்கு எவரும் வரவில்லை.
இந்நிலையில் குழந்தைகளுக்கு பிஸ்கட்டை மட்டுமே உண்பதற்கு கொடுத்தோம். வெடிச்சத்தங்கள் உக்கிரமடையும் நிலையில்தான் காஸ் அடுப்பை பற்றவைத்து சமைத்து உண்டோம்.
இவ்வாறாக எமது வீட்டினைச் சுற்றி விடுதலைப் புலி உறுப்பினர்கள் நிற்க மரண பயத்துடனேயே நாம் உள்ளே இருந்தோம். விடுதலைப் புலிகள் அங்கிருந்தபோது இராணுவத்தினரோ அல்லது பொலிஸாரோ, பொதுமக்களோ அப்பகுதிக்கு வரவில்லை.
இதேவேளை, இவ்வாறான காலகட்டத்தில் எம்மைப்போல் வேறு எவராவது வீட்டிற்குள் பதுங்கி இருந்தார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது.
இந்நிலையில் 5 ஆம் திகதி மாலையில் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பிரசன்னம் இல்லாத நிலையில் மாலை 2.30 மணியளவில் எனது கணவரும் பொலிஸாரும் இராணுவத்தினரும் எமது வீட்டிற்கு வந்திருந்தனர். எனது கணவர் வீட்டின் கதவைத் தட்டியவாறு என்பெயரைச் சொல்லி அழைத்தபோதே அவரின் குரலை அடையாளம் கண்டு கதவைத் திறந்தேன்.
பின்னர் அங்கிருந்து அனைவரும் மூதூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றோம்.
மூதூர் நீதிமன்ற எல்லைக்குள்ளால் சென்று மூதூர் பொலிஸ் நிலையத்தின் நான்காம் இலக்க காவலரண் ஊடாக பொலிஸ் நிலையத்திற்கு சென்றோம்.
எம்மை மீட்க வந்த பொலிஸாரையோ இராணுவத்தினரையோ எனக்கு அடையாளம் தெரியாது. அவர்கள் முகங்களை கறுப்புத் துணியால் மூடிக்கட்டியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மூதூர் பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினம் இரவு தங்கிவிட்டு மறுநாள் ஆறாம் திகதி இறங்குதுறைக்குச் சென்று அங்கிருந்து அனைவரும் திருகோணமலைக்குச் சென்றோம்.
இதன்பின்னர் ஹொரவப்பத்தானைக்குச் சென்றபின்னர் வானொலி, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலமாகத்தான் அக்ஷன்பாம் ஊழியர்களின் படுகொலை தொடர்பாக அறிந்து கொண்டேன்.
மூதூரில் அக்ஷன் பாம் அலுவலகம் அமைந்துள்ள இடம் எனக்குத் தெரியாது. அத்துடன் இப்படுகொலைகள் தொடர்பாக வேறு விடயங்களும் எனக்குத் தெரியாது.
எமது வீட்டிலிருந்து மூதூர் பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும்வரை நாம் வீதியில் பொதுமக்களையோ அல்லது விடுதலைப் புலிகளையோ காணவில்லை. இச் சம்பவங்கள் நடைபெற்றபின் 2006 செப்டெம்பர் 15 ஆம் திகதியே திரும்பவும் கடமைக்குச் சென்றோம் என்று தனது சாட்சியத்தில் அவர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment