- அகதித்தமிழன்
இலங்கையில் இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் கரிசனைகள் அதிகரித்துவரும் இவ் வேளையில் வௌ;வேறு விதமான பிரதிபலிப்புக்கள் புலிகளின் முகவர் ஊடகங்களாலும், அதிதீவிர சிங்கள மேலாதிக்கவாத சக்திகளாலும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்திய பிரதமருக்கு பாதுகாப்பாக இந்திய படைகள் வருகின்றன என்றவொரு செய்தியை வைத்துக் கொண்டு தமிழ் சிங்கள ஊடகங்கள் சர்ச்சைகளில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்கள் படும் துயரங்கள் தொடர்பாக இந்தியா மௌனமாக இருக்கிறது, பேசாமல் இருக்கிறது, இலங்கை படையினருக்கு பயிற்சி வழங்குகிறது என்றெல்லாம் எழுதி வருகிறார்கள். தொடர்ச்சியாக இந்த ஒப்பாரி பாடலை இசைத்துக் கொண்டு வருகிறார்கள்.
சரி. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நடைமுறை சாத்தியமான முயற்சிகளை இந்தியா முன்னெடுக்கும் போது இவர்கள் மறுவழமாக குய்யோ முறையோ என்று கூக்குரலிடுகிறார்கள்.
அதாவது இந்தியா இலங்கை இனப்பிரப்பிரச்சனை விடயத்தில் தலையிடுவதானால் முதலில் புலிகளுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுக்க வேண்டும். அவர்களை திருப்திப்படுத்த வேண்டும். இருந்தும் முகம் திருத்தி ஈரோடு பேண்வாங்க வேண்டும். இவ்வாறுதான் இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அண்மையில் புலிகளின் முக்கியஸ்தர் பாலகுமார் புலிகளின் முகவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்தியாதான் புலிகள் தொடர்பாக தாம் இழைத்த தவறுகள் என்னவென்பதை உணர்ந்து கொண்டு தம்மை திருத்திக் கொண்டு இலங்கையில் பிரச்சினை தீர்க்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். புலிகள் செய்த அழிச்சாட்டியங்கள், அட்டூழியங்கள் எவையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை இவை பேசுதற்குரிய விடயங்கள் அல்ல என்பது போல் அவரது பேட்டியின் சாரம்சம் அமைந்திருந்தது.
தமிழ் மக்களின் நலன்கள், அதிகாரப் பகிர்வு ஆகிய விடயங்களில் இந்தப் பிராந்தியத்துக்கும் இலங்கைக்கும் ஏற்புடையதான சிபாரிசுகளை செய்ய இந்தியா முன் வருமானால் அவர்கள் அதனை எதிர்ப்பார்கள். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினூடாக இணைந்த வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்ட அதிகார கட்டமைப்பையும் அவர்கள் அவ்வாறுதான் நிராகரித்தார்கள்.
புலிகளின் முகவர் அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தன் அவர்கள் 13வது திருத்தச் சட்டமூலத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு என்பதை தாம் 1988 இலேயே நிராகரித்து விட்டதாக அண்மையில் ஆங்கில தேசிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையிலான அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தி - இலங்கை ஒப்பந்தத்தின் கீழான அதிகாரப் பகிர்ந்தளிப்பு செயற்பாடு முழுமையாக நிகழ வேண்டுமென எதிர்பார்த்தது. அன்றைய அமிர்தலிங்கம் அவர்களின் அறிக்கைகளிலும் பாராளுமன்ற உரைகளிலும் இவற்றை நாம் அவதானிக்கலாம். எனினும் 13வது திருத்தச் சட்டத்திற்கப்பால் அதிகாரப்பகிர்வு நிகழ வேண்டுமென்ற கருத்து அவரிடமிருந்தது.
இந்தியா 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் முழுமை செய்வது, மேலும் புதிய யதார்த்தங்கள், சூழ்நிலைகளுக்கேற்ப 13வது திருத்தத்துக்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறது.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆக்கபூர்வமான தீர்வு யோசனைகளை விடுத்து அன்றாட பிழைப்புவாத அரசியலை புலிகளின் நிழலில் நிகழ்ச்சி நிரலில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
புலிகளோ சுத்த இராணுவவாத, ஏகபிரதிநிதித்துவ, அதிகார கற்பித போதையில் கிறங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் கோட்டை கனவுகளும் தற்போது தகர்ந்து வருகின்றன.
இந்த நிலையில்தான் புலிகளை பிணை எடுக்க அதில் தமது நலன்களை பாதுகாத்துக்கொள்ள புலிகளின் ஊடக பெருச்சாளிகளும், அவர்களின் நலன் சார்ந்து இயங்கும் சர்வதேச மாஃபியாக்களும், வேறு பினாமிகளும் இந்தியா உதவ வேண்டும் என்கிறார்கள்.
இந்தியா தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பாக எத்தகைய அதி உட்ச பட்ச தீர்வை முன்வைக்க முன்வந்தாலும் இவர்கள் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. புலிகளின் ஏகபாசிச அதிகாரத்துக்கு பங்கம் வரும் வகையிலான எந்தவொரு தீர்வையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இவர்கள் மனித உரிமை மீறல்களை பற்றி குரல் எழுப்புவதும் வெறும் பாசாங்கே.
புலிகளால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை இருட்டடிப்புச் செய்வதில், கொல்லப்பட்டவர்களை இழிவுபடுத்துவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான்.
இவர்களின் மொழியில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்பது புலிகளுக்கு முடிசூட்டுவது, மனித உரிமை மீறல் என்பது புலிகளால் கொல்லப்படுபவர், வெறுக்கப்படுபவர்கள் தவிர மற்றவர்களுக்கு நிகழ்பவையே. அது மிகவும் கபடத்தனமானது.
சமூகத்திற்கு எது தேவை, எது ஆக்கபூர்வமானது, எது யதார்த்தமானது என்பதெல்லாம் இவர்களுக்கு அநாவசியமானது. ஆக புலிகளின் விருப்புக்கும், வெறுப்புக்கும் ஏற்ப சர்வதேச சமூகமோ, இந்தியாவோ தாளம் போட வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த சிந்தனையின் செல்வாக்கு கணிசமான அளவில் தமிழர்களில் ஒருபகுதியினர் மத்தியில் காணப்படுகிறது. அவர்களுக்கு ஊட்டப்பட்டிருக்கும் கருத்து புலிகள் இல்லாவிட்டால் தமிழினம் அழிந்துவிடும். ஆனால் புலிகளின் சகோதரத்துவத்தை நிராகரிக்கும் பாசிச பயங்கரவாத போராட்டம் தான் ஏற்கனவே தமிழர்களின் கணிசமான தொகையினரை அழித்துவிட்டதென்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்று யாழ் குடாநாடு முதியோரின் சிறைகூடமாகவும், கிழக்கும் இளந்தலைமுறையினர் அரிதாகிவிட்ட பிரதேசமாகவும், இரண்டு தலைமுறையினரின் அழிவை பார்த்த பூமியாகவும் அகதிகளின் தேசமாகவும் மாறியிருப்பதில் புலிகளின் பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
புலிகள் ஒரு ஆக்க சக்தியல்ல. அவர்கள் ஒரு நாசகார சக்தி என்பதை நாம் அடிப்படையாக விளங்கி வைத்திருக்க வேண்டும்.
எனவே புலி வாலை பிடித்து எமது மக்களில் ஒரு பகுதியினர் தொங்கிக் கொண்டிருந்தால் அவர்கள் அதன் வன்முறை குணத்திற்கே இரையாக வேண்டிவரும். கடந்து வந்த 30 ஆண்டுகளில் எமது மக்களுக்கு இது பற்றி நல்ல பட்டறிவு இருக்க வேண்டும். ஆனால் தெரிந்தும் உடன்கட்டை ஏறும் பரிதாப நிலையே காணப்படுகிறது.
கிழக்கில் கணிசமான அளவில் மக்கள் தமது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். பேரழிவை சந்தித்த கிழக்கில் தமது பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் தொடர்பான மக்களின் அக்கறைகள் அதிகரித்திருக்கின்றன. அங்காவது முழுமையான அதிகாரப் பகிர்ந்தளிப்பு நிகழட்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.
இதேபோன்றதொரு நிலை வடக்கிலும் ஏற்பட வேண்டும்.
தமிழ் மக்களின் பிரதேசங்களை இணைத்து ஒரு பாதுகாப்பான பிரதேசத்தில் ஒரு அதிகாரப் பகிர்வு கட்டமைப்பை உருவாக்குவது படிப்படியாக ஏற்படுத்தப்பட வேண்டும்
இதேபோன்று முஸ்லீம் மக்கள், மலையக மக்களுக்கும் அதிகாரப்பகிர்வு கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆக்கபூர்வமான செயற்பாடுகளின் ஊடாகவே இதனை செய்ய முடியும்.
அதிகாரப் பகிர்வு முறையில் 60வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட இந்தியாவும் இத்தகைய நிலையொன்றைத்தான் எதிர்பார்க்கிறதென நாம் கருத முடியும்.
ஆனால் எமது இலக்கற்ற அராஜக சிந்தனை போக்கிற்கு உதவுவதற்கு அந்த மாபெரும் நாடு தனது சக்தியையும் உழைப்பையும் வீண்விரயம் செய்ய முன்வராது.
இலங்கை அரசை மிரட்டி வைப்பதற்கும், புலிகளுக்கு தடவி கொடுப்பதற்கும் இந்தியா ஒருபோதும் இங்கு தலையிடாது. இலங்கையில் அனைத்துத தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு இந்தியா உதவ முன்வரும்.
தமிழர்கள் தமக்கு எது வேண்டுமென நறுக்குத் தெறிக்க திட்டவட்டமாக தீர்மானிக்க வேண்டும். வைக்கோற்போர் நாயின் சிந்தனை போக்கிலிருந்து விடுபடுவதில்தான் எமது எதிர்காலம் தங்கியிருக்கிறதென்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மறுபுறம் பௌத்த சிங்கள பேரினவாத அதிதீவிரவாத சக்திகள் இன ரீதியான பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் வழங்க முடியாது. அப்படியானதொரு பிரச்சினை இல்லை அப்படியேதும் வழங்கினால் கூட அது நாட்டைப் பிரிக்கும் அபாயம் என்பது போல் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவே ஒரு சித்தரிப்பை செய்து வருகின்றன. நிலைமை விபரீதமாவதற்கு இவர்களுடைய பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல. இது சிங்களவர்களின் நாடு. மற்றவர்கள் வந்தேறு குடிகள் அடக்க ஒடுக்கமாக இரண்டாம் தர பிரஜைகளாக வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் குறைந்தபட்சம் கிழக்கில் முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான மாகாணசபைக்கோ அல்லது வடக்கின் அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான இடைக்கால ஏற்பாட்டுக்கோ ஏதாவது அதிகாரங்கள் வழங்கப்பட்டு விடுமோ, இந்தியா அதற்கு உதவிடுமோ என்று பதற்றமடைகிறார்கள். அவ்வாறு அதிகாரம் வழங்குவது பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என பிரச்சாரம் செய்கிறார்கள்.
தென்னாசியாவில் இலங்கை கல்வித் தரம் கூடிய நாடு என்பார்கள். என்னவோ இத்தகைய சிந்தனை போக்குள்ள தற்குறிகள்தான் எமது அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இதனால்தான் ஒருமித்தக் கருத்தை எட்டுவதென்பது சிரமமானதாக இருக்கிறது.
இலங்கை சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் போரும், மனித அழிவும் என்றாகிவிட்டது. இலங்கையின் அனைத்து மக்களுக்கும் சுதந்திரமானதும், கௌரவமானதுமான வாழ்வை பெற்றுக்கொடுப்பதில் இச் சக்திகள் பெரும் தாமதத்தையும் இடையூறையும் விளைவித்து வந்திருக்கின்றன.
'வினாசகாலே விபரீத புத்தி" என்பார்கள். இந்த விபரீத புத்தியின் ஆதிக்கம் நொருக்கப்பட்டு, முதுகெலும்பு முறிக்கப்பட்டு, இணக்கபபாடு, விட்டுக்கொடுப்பு, பரஸ்பர புரிந்துணர்வு இதற்கான உள்ளார்ந்த பொறிமுறை ஏற்படாமல் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியம்.
லட்சம் பேர்வரை உயிரிழந்து ஒரு மில்லியன் மக்கள் வரை அகதிகளான பின்னரும் ஞானம் பிறக்கவில்லை.
எமக்கு உதவி செய்ய வருபவர்கள் அவர்கள் தமது அனுபவங்களில் இருந்து சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுகையில் அதனை குழப்பியடிக்கும் செயற்பாடு இனியாவது சகல தரப்பிலிருந்தும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஆக்கபூர்வமான வழிகளில் சிந்தித்து செயற்பட தலைப்பட வேண்டும்.
எமது நாட்டுக்குள் இந்த மாற்றங்கள் நிகழாவிட்டால் எந்த வல்லமையும், புலமைத்துவம், ஆற்றலும் வாய்ந்த சக்திகள் செய்யவரும் உதவிகளும் புரிந்து கொள்ளாமல் போய்விடக்கூடும். விழலுக்கு இறைத்த நீராகி விடும்.
தமிழ்நியூஸ்வெப்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment