Thursday, July 31, 2008

புலிகளின் கோட்டையை இராணுவம் முற்றுகையிடும்போது மோசமடையும் பொருள் பற்றாக்குறையும் பாதுகாப்பின்மையும்

பைஸல் சமத்

இலங்கையின் வடக்கே தமிழீழ விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கும் வன்னியை இலங்கை இராணுவம் நெருங்கவே போருக்குள் சிக்கியுள்ள குடிமக்கள் பொருள் தட்டுப்பாட்டால் அவதியுறுவது மாத்திரமன்றி தங்கள் உயிர் உடைமைகளுக்கும் பாதுகாப்பின்றி பெரும் அவலத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று தொடர்ந்தும் அப்பிரதேசத்தில் தங்கியிருக்கும் மனித நேய அமைப்புகள் தெரிவிக்கின்றன.

வன்னிப் பிராந்தியத்தில் கிழக்குக் கரையோரமாக கிளிநொச்சியும் முல்லைத்தீவும் வடமேற்கு கரையோரமாக வவுனியாவினதும் மன்னாரினதும் சில பகுதிகளும் அடங்கியிருக்கின்றன.

அரசாங்க துருப்புகள் கடும் தாக்குதல்களை நடத்தி மன்னார் , வவுனியா மாவட்டங்களின் 90 சதவீதமான நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டு வந்துள்ளன. இதேவேளை , ஏனைய இரண்டு மாவட்டங்களான கிளிநொச்சியும் முல்லைத்தீவும் தொடர்ந்தும் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன. கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் துறைமுக நகரான திருகோணமலை உட்பட பல பகுதிகளை விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் இழந்தனர்.

விடுதலைப் புலிகளுக்கெதிரான தமது யுத்தத்தில் தமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென்றபோது செய்தி நிருபர்கள் மத்தியில் உரையாற்றிய போது தற்போது விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என்றும், ஆனால் அதற்கு அவர்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நான் தயார். ஆனால், அவர்கள் ஆயுதங்களைக் கிழே போடவேண்டும். ஏனெனில், அவர்கள் பலவீனமடையும் போதெல்லாம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுவது வழக்கம் என்று குறிப்பிட்டு ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்த அறிக்கை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டது.

ஆனால், விடுதலைப் புலிகள் வெளியிட்ட தகவலில் 2006 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக பெரும் மனிதநேய அவலங்களை மக்கள் எதிர்நோக்குகிறார்கள் என்றும் வன்னியில் 100,000 க்கும் அதிகமானோர் அவர்களது வீடு, வாசல்களை விட்டு வெளியேறி அகதிகளானார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தவர்களில் பெரும் தொகையானோர் திறந்தவெளிகளிலேயே வாழ்ந்து வருகிறார்கள் என்று விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்களப் பெரும்பான்மையினரால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு பாரபட்சம் காண்பிக்கப்படுகிறதெனக் குற்றம் சாட்டி விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கென தனியான தாயகம் ஒன்றை உருவாக்குவதற்கென 1980 களிலிருந்து போராடி வருகின்றார்கள்.

2001 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் நோர்வேயின் மத்தியஸ்தத்தில் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையை ராஜபக்ஷவின் தேசியவாத கூட்டரசாங்கம் இரத்துச் செய்து கொண்டது.

ஜெனீவாவிலும் ஒஸ்லோவிலும் இடம்பெற்ற இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து தமிழர் ஆதிக்கம் செலுத்திவரும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவம் தொடர் தாக்குதல்களை ஆரம்பித்தது.

விடுதலைப் புலிகள் தலைமைக் காரியாலயத்தை வைத்திருக்கும் கிளிநொச்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள் மோட்டார் சைக்கிள்களையும் சில கார்களையும் ஒட்டுவதற்கு பெற்றோல் கிடைக்காததால் மண்ணெண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள் என்று மனிதநேய அமைப்புகள் தெரிவிக்கின்றன. நகரில் அரசாங்க விமானங்கள் புலிகளின் நிலைகளை இலக்கு வைத்து வகைதொகையின்றி குண்டுகளை வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிவிடுகிறார்கள். மக்கள் அங்கிருந்து தப்பி வெளியேறாமல் புலிகள் தடுத்து விடுகிறார்கள்.

உணவுப் பொருட்கள் , எரிபொருட்கள் , ஏனைய பொருட்கள் ஆகியன அப்பகுதிகளுக்கு சென்றடையாதமை குறித்து தாங்கள் கவலையடைவதாக மனிதநேய அமைப்புகள் தெரிவிக்கின்றன. பலர் பல்வேறு தடவைகளில் சொந்த வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளார்கள் என்று தமது பெயரை வெளியிட விரும்பாத ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரி ஒருவர் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.

சிறுபராயத்தினர் கட்டாயமாக இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவது, பாடசாலைகள் இயங்காமை, வெளி இடங்களிலிருந்து வன்னிக்குச் செல்வோர் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்படுவது போன்ற ஏனைய பிரச்சினைகளும் உண்டென்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், உணவுப் பிரச்சினையிலும் பார்க்க மோசமான மனிதநேயப் பிரச்சினை பாதுகாப்பின்மையும் உயிர் வாழ்வின் நிச்சயமற்ற தன்மையுமே ஆகும் என்று ஒரு தொழிலாளி கூறினார்.

வன்னி பிராந்தியத்திற்கும் நாட்டின் ஏனைய பகுதிக்குமிடையில் போக்குவரத்துப் பாதையான ஏ9 வீதியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பயன்படுத்தி வந்த இரண்டு பாதைகளுக்கு அருகில் அரசாங்கத்தினதும் புலிகளினதும் கூட்டு அனுமதியுடன் அது அமைத்திருந்த வீதித் தடைகளுக்கருகில் அரச விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறி செஞ்சிலுவைச் சங்கம் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து வீதி மூடப்பட்டதால் இந்த மாத முற்பகுதியில் வன்னியில் நிலைமை மேலும் மோசமடைந்தது.

யுத்தசூனியப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படமாட்டாதென இரு தரப்பினரும் உறுதியளித்ததையடுத்து ஜூலை மாதம் 7 ஆம் திகதி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீண்டும் அங்கு சென்று வீதியைத் திறந்துள்ளது. ஏ9 வீதி மூடப்பட்டதால் சுமார் 500,000 பேர் வசித்துவந்த வன்னிக்கு விநியோகங்கள் தடைப்பட்டு அம்மக்கள் பெரும் அவலங்களுக்கு உள்ளானார்கள்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியாற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவரத்ன தகவல் தெரிவிக்கையில்;

தேவைகளின் அடிப்படையில் பிராந்தியத்திலுள்ள சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட சகல உணவுப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.

கடந்த மாதம் பொருட்களை ஏற்றி அனுப்புவதில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், தற்போது உணவு லொறிகள் அங்கு செல்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், கிளிநொச்சியில் பணியாற்றும் தமது பெயரை வெளியிட விரும்பாத அரசாங்க அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலம் தகவல் தருகையில்;

இடம்பெயர்ந்த மக்கள் உணவு மற்றும் எரிபொருள் இருப்புகள் பற்றாக்குறை காரணமாக பெரும் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று கூறினார். இனந்தெரியாத நபர்களால் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கிளைமோர் கண்ணிவெடிகளால் ஆபத்துகள் மேலும் அதிகரித்துள்ளன என்றும் இதனால், தங்கள் உத்தியோகத்தர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல தயங்குகிறார்கள் என்றும் அவர் கூறினார். ஜூன் மாதம் 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற அதிகாரி ஒருவர் கண்ணிவெடி ஒன்றில் சிக்கி உயிரிழந்தமையும் அவர் நினைவு கூர்ந்தார்.

தங்கள் பிரதேசத்தினுள் இலங்கை இராணுவம் ஆழ ஊடுருவும் விசேட படையை அனுப்பி குண்டுத் தாக்குதல்களை நடத்துகிறது என்று விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த விசேட கொரில்லா பாணியிலான படை தங்களிடம் இருப்பதை ஒப்புக் கொண்ட இராணுவம் தங்கள் இலக்கு விடுதலைப் புலிகளே அல்லாமல் சிவிலியன்களோ அல்லது அரசாங்க உத்தியோகத்தர்களோ அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

வன்னியில் பணியாற்றும் ஐக்கிய நாடுகள் மற்றும் உள்ளூர், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒருங்கிணைந்து கிரமமாகத் தயாரித்த தரவுகளின்படி 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்த வருடம் ஜூலை மாதம் 3 ஆம் திகதி வரை வன்னியிலுள்ள 3 மாவட்டங்களிலிருந்து சுமார் 170,736 பேர் இடம்பெயர்ந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் விமானக் குண்டு வீச்சுகள் அதிகரித்து வருவதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் நிலவுவதுடன் எப்பொழுது என்ன நடக்குமென எதிர்வுகூற முடியாத நிலை இருந்து வருவதாக நிறுவனங்களுக்கிடையிலான நிலையியற் குழு தெரிவித்துள்ளது. தீவிர யுத்தம் காரணமாக பொருட்கள் எதுவும் இருப்பில் இல்லாததால் மனிதநேய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஆற்றல் அற்றுப் போய்விட்டது என்றும் இக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளை சிரேஷ்ட ஐக்கிய நாடுகள் மனிதநேய பணியாளர் ஒருவர் ஊர்ஜிதம் செய்தார். சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும் இராணுவத்திற்கும் ஊடாக பல்வேறுபட்ட பணிகளைச் செய்யலாம். ஆனால், திடீர் மாற்றங்களும் இடம்பெறலாம். ஜூலை மாதம் 2 ஆம் திகதி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வன்னியில் பணியாற்றும் 8 ஐக்கியநாடுகள் நிறுவனங்களுக்கென 24,800 லீற்றர் டீசல், 1,030 லீற்றர் பெற்றோல் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கினார். ஆனால், இந்தத் தொகை மிகவும் குறைவானதே.

பிரதேசவாசிகளைப் பொறுத்த வரையில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு வாசிகளுக்கு மிக நெருக்கடியான காலமாகும். விடுதலைப் புலிகளினாலும், இராணுவம் புதைத்திருக்கும் கிளைமோர் கண்ணிவெடிகளாலும் இம்மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அப்பிரதேச செய்தியாளர் ஒருவர் ஐ.பி.எஸ்.ஸிற்குத் தெரிவித்தார்.

பிராந்தியத்தில் செய்தி எழுதுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தமது பெயரை வெளியிட மறுத்த இந்த செய்தியாளர் மண்ணெண்ணெய் , மின் விநியோகமின்மை ஆகியன காரணமாக வீடுகளின் விளக்குகளை எரிக்க முடியாத மக்கள் சகல வேலைகளையும் மாலை 6 மணிக்குள் முடித்து விடுவார்கள் என்று கூறினார். மாணவர்கள் இரவில் தங்கள் பாடங்களைப் படிக்க முடியாது. எப்போது விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்று ஏங்கியவாறே அவர்கள் இருக்கிறார்கள்.

மக்களின் கஷ்டங்களைத் தணிப்பதற்காக அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து தாங்கள் பணியாற்றுவதாகத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் பணியாளர் ஒருவர் சில அரச அதிகாரிகள் மிக்க உதவியாகவும் நிலைமையைப் புரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள் . ஆனால், விநியோகங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் அவர்களது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்றும் கூறினார்.

ஐ.பி.எஸ்


Thinakural

No comments: