மூன்று வயது பெண்குழந்தையை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் கண்ட எதிரிக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் பதினொரு வருடங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கந்தளாய்க் கோவில் கிராமத்தில் 2003 ஆம் ஆண்டு இக்குற்றம் இழைக்கப்பட்டதாக எதிரி மீது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கு திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பாதிக்கப்பட்ட சிறுமி சாட்சியமளித்தார். சாட்சியமளித்த சிறுமிக்கு ஏழுவயது என்று தெரிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் பற்றி கேட்டபோது தனக்கு என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை என்று சிறுமி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சிறுமியின் தாயார் சாட்சியமளித்த போது ""சம்பவதினம் இரவு 12 மணி இருக்கும். வீதியால் வந்து கொண்டிருந்த சுவாமியின் ஊர்வலத்தைப்பார்க்க வீதிக்கு வந்தேன். வீட்டினுள் எனது நான்கு வயது மகனும் மூன்று வயது மகளும் உறங்கிக்கொண்டிருந்தனர். சுவாமி தரிசனம் முடித்து பிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்பிய போது வீட்டினுள் இருந்து குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டது. வீட்டினுள் சென்றபோது எதிரி வீட்டினுள் இருந்து வெளியே வந்து அருகில் இருந்த காட்டுப்பக்கமாக ஓடியதைக் கண்டேன். மகளைப் பார்த்த போது அவளின் மலவாசல் பக்கம் ஒரு கிழிவுக்காயம் காணப்பட்டது. குழந்தை வலியால் அலறியது என்று சாட்சியமளித்தார். வைத்திய அறிக்கையும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மலவாசல் பக்கம் கிழிசல்காயம் இருந்ததாகத் தெரிவித்தது.
விசாரணை முடிவில் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எதிரியை குற்றவாளியாகக் கண்டார். சந்தர்ப்ப சூழ்நிலை, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் ஆகியன எதிரி மீதான குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நீருபித்துள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
எதிரிக்கு பத்து வருட கடுங்காவல் சிறைத்தண்டனையும் ஐயாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நட்டஈடாக வழங்கும்படியும் எதிரிக்கு உத்தரவிடப்பட்டது. அபராதமும் நட்டஈடும் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருடகடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்கும்படி எதிரிக்கு நீதிபதி உத்தரவிட்டார். அரச வழக்கறிஞர் செல்வி சுகந்தி கந்தசாமி வழக்கை நெறிப்படுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment