Monday, August 4, 2008

மாற்று ஆபரேஷன் மூலம் இரண்டு முழு கைகளை பொருத்தி சாதனை


உலகிலேயே முதல் முறையாக, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு முழு கைகளும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த 54 வயது ஆண் விவசாயி, ஆறு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி தனது இரண்டு கைகளையும் இழந்தார். செயற்கை கைகளை பொருத்துவதற்கு இரண்டு முறை சிகிச்சை பெற்றும், அது சரிவரவில்லை.

இதையடுத்து, முனிச் நகரில் உள்ள தொழில்நுட்பப் பல்கலையின் ரெச்டஸ் டெர் இசார் மருத்துவமனை டாக்டர்களை அவர் சந்தித்தார். 40 நிபுணர்கள் அவரை பரிசோதித்தனர். கடந்த டிசம்பர் மாதம் இந்த மருத்துவமனையின் இயக்குனராக பொறுப்பேற்ற பேராசிரியர் ஹன்ஸ் குயின்டென் என்பவர் அந்த விவசாயிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம், கைகளை பொருத்த முடிவு செய்தார்.

இதில் இரண்டு முக்கியமான பிரச்னைகள் இருந்தன. மாற்று கைகளை நிராகரிக்க முடியாதபடி, விவசாயியின் உடல், நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல, விவசாயியின் பாலினம், வயது, நிறம், அளவு, ரத்த வகையை ஒத்த மாற்று உறுப்பு கிடைக்க வேண்டும். மாற்று உறுப்பு கிடைத்ததை அடுத்து, அறுவை சிகிச்சைக்கு டாக்டர்கள் தயாராயினர். கடந்த ஜூலை 25ம் திகதி ஆரம்பமாகிய இந்த அறுவை சிகிச்சை, 15 மணி நேரத்துக்கு பிறகு, மறுநாள் முடிந்தது. நோயாளிக்கு எந்த நேரத்திலும் பிரச்சினை ஏற்படலாம் என்பதால், அருகிலேயே டாக்டர்கள் இருந்து கவனித்து வந்தனர். தற்போது, விவசாயியின் உடல், மாற்று உறுப்பை ஏற்றுக் கொண்டு, இயல்பாக செயல்படத் ஆரம்பித்துள்ளது.

No comments: