சென்னையில் விடுதலைப்புலிகளின் முகவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கு கடத்த முயன்ற தொலைதொடர்பு கருவிகளை காவற்துறையினர் அவரிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்று வருகிறன. இதனால் விடுதலைப்புலிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பொருட்களை கடத்தி செல்லாதவாறு தடுக்கும் பணியில் கியூ பிரிவு காவற்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் கடத்தல் முகவர்களை கியூ பிரிவினர் கைதுசெய்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து டீசல் மற்றும் அலுமினிய கட்டிகள் போன்ற பொருட்கள் விடுதலைப்புலிகளுக்கு அதிகமாக கடத்தி செலலப்படுகின்றன. இவ்வாறு பொருட்களை கடத்திச் செல்வதற்கு விடுதலைப்புலிகளே சில நேரம் தமிழகத்திற்கு நேரடியாக உள் நுழைவதாகவும் விடுதலைப்புலிகளின் கடத்தல் முகவர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர் எனவும் கியூ பிரிவினர் தெரிவித்துளளனர். கடந்த மாதம் 29 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் முக்கிய நபரான தம்பி அண்ணா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து பொருட்களை இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக புதிய வியூகம் வகுக்க அவர் சென்னை வந்த போது கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் நூற்றுக்கணக்கான கடத்தல் முகவர்களை தேடி அவர்களை கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கடத்தல் முகவர்கள் தங்கி இருப்பதாக கியு_ பிரிவினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த பகுதிகளை கண்காணிக்கும்படி தமிழக காவற்துறை ஆணையர். கே.பி.ஜெயின் உத்தரவிட்டார். இதனையடுத்து கியூ பிரிவினர் மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதிகளை மாறு வேடத்தில் கண்காணித்தனர். மடிப்பாக்கத்தில் உள்ள இலத்திரனியல் கடை ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு தேவையான தொலை தொடர்பு தகவல் கருவிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை கண்காணிப்பில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவற்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது, செல்போன் மூலம் மோட்டார்களை இயக்கும் ஸ்டார்ட்டர் கருவியும், 50 கிலோ மீட்டர் தூரம் பேசக்கூடிய சக்திவாய்ந்த டெலிபோன் இணைப்பு கருவிகள் 10 (பவர் ஸ்டேசன், நானோ ஸ்டேசன்), இன்டர்நெட் போன் அடாப்டர் 9 போன்ற கருவிகள் கைப்பற்றப்பட்டன.
இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பொருட்கள் பிரான்சில் இருந்து கொண்டு செல்லப்பட்டு இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை வாங்கி இலங்கைக்கு கடத்தி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் முகவரான 31 வயதான செல்வம் என்ற செல்வக்குமாரையும் கியூ பிரிவு காவற்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. அவரது கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது அவரிடம் இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளின் உளவு பிரிவு தலைவர் ஜீவன் என்ற இனியன் அடிக்கடி பேசி இருப்பது தெரிய வந்ததுள்ளது. இலங்கையில் கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த தனக்கு விடுதலைப்புலி இயக்கத்தோடு எனக்கு தொடர்பு இல்லை எனினும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களோடு பழக்கம் இருந்தது எனவும் செல்வம் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் உளவு பிரிவைச் சேர்ந்த இனியன் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அவர்; தமது ஊரைச் சேர்ந்தவர் என்ற முறையில் அவர் தனக்கு நண்பராக விளங்கினார் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் இருந்து பேசிய இனியவன் விடுதலைப்புலிகளுக்காக தொலைதொடர்பு தகவல் சாதனங்கள் பிரான்சில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதை சென்னை மடிப்பாக்கத்தில் இலத்திரனியல் கடை ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாகவும், அவற்றை வாங்கி இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படியும் இனியவன் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் செல்வம் கூறியுள்ளார். கிளிநொச்சியில் தனது பெற்றோர் உள்ளதாகவும் சில காரணங்களுக்காக தான் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வேலையை செய்து முடித்தால் தனக்கு பெரிய அளவில் பணம் தருவதாகவும் இனியவன் கூறி இருந்தாகவும் எனினும் பொருட்களை அனுப்புவதற்கு முன்னர் காவற்துறையினர் தன்னை கைது செய்து விட்டனர் என செல்வம் என்ற செல்வக்குமார் காவற்துறையினரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment