முல்லைத்தீவு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் படையினர் மேற்கொண்டு வரும் விமானத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
முல்லைத்தீவு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளில் தாக்குதல்கள் நடத்தப்படும் அதேநேரம், இராணுவ முகாம்களிலிருந்து பல்குழல் ரொக்கட் தாக்குதல்களும் நடத்தப்படுகிறது.
இத்தாக்குதல்களில் பெருமளவு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் அதேநேரம், பலர் காயமடைகின்றனர். சொத்துகளும் சேதமாக்கப்படுகின்றன.
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு மக்கள் நாளாந்தம் இடம் பெயர்ந்து கொண்டிருப்பதுடன், அம்மக்கள் பல்வேறு அவலங்களையும் எதிர் நோக்குகின்றனர்.
பொதுமக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலும் அரச மருத்துவமனை, மாவட்ட செயலகம் மற்றும் ஏனைய முக்கிய அரச அலுவலகங்கள் உள்ள பிரதேசங்களில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு பகுதிக்கான தொலைத் தொடர்பு சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்ட நிலையில், அப்பிரதேசத்தில் உண்மையாக என்ன நடைபெறுகின்றதென்பதை எம்மால் அறிந்து கொள்ள முடியாதுள்ளது.
ஆனால், இத்தாக்குதல்களினால் 2 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இவ்வாறான துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. (உயர்தரப்) பரீட்சையில் மாணவர்கள் எவ்வாறு தமது திறமைகளை வெளிப்படுத்த முடியும்.
இதனால், இவ்வாறான தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கும் அதேநேரம், இது தொடர்பாக சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா.வின் மனிதநேய அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான உணவு, உடை, மருந்து போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சர்வதேச சமூகத்திற்கும் ஐ.நா. உதவி அமைப்புகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment