Sunday, August 3, 2008

ராஜீவை கொன்ற புலிகள் இயக்கத்தின் முன்னைய போராளியை இந்தியப்பிரதமர் சந்திப்பாரா?

பிள்ளையானைச் சந்திக்காததில் ஆச்சரியம் இல்லை!

- வித்தி

அண்மைக்காலமாக புலிகள் இந்தியாவிற்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துவருகின்றனர்.புலிகள் தொடர்பான இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்று கடந்த வாரம் கூட புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நம்பிக்கை தெரிவித்தார்.புலிகளுக்கு தமிழகத்தில் 54 வீதமான மக்கள் ஆதரவு தெரிவிப்பதாக அண்மையில் ஆனந்தவிகடன் நடாத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்ததாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

ஆனந்தவிகடன் நடாத்திய கருத்துக்கணிப்பு குறித்து விரிவாக பின்னர் ஒருதடவை பார்க்கலாம்.ஆனால் இந்தக் கருத்துக்கணிப்பு தமிழகத்தில் மாத்திரம் நடாத்தப்பட்டதல்ல.அது இணையத்தளத்தினுடாகவும் நடாத்தப்பட்டது. இணையத்தளம் ஊடாக 2130 பேரும், நேரடி விசிட்டில் 2065 பேரும் இந்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டனர்.இணையத்தளம் ஊடாக கலந்துகொண்டவர்கள் யார்? இவர்களில் பெரும்பாலானவர்கள் ஈழத்தமிழர்கள். இந்த உண்மையை இலகுவாக கணக்கில் எடுக்காமல் ஆனந்தவிகடன் தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கின்றது.அதற்காக ஈழத்தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. இதுபோன்ற விடயங்களில் புலிகளின் பினாமிகள் அசகாய சூரர்கள். அந்த கருத்துக்கணிப்பு பற்றியதல்ல இந்த சிறு குறிப்பு.

கொழும்புக்கு வந்திருந்த இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையானைச் சந்திக்கவில்லை என்பதை ஏதோ பெரிய வெற்றிபோல புலிகளின் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருப்பதைப் பார்த்தபோது அவர்களின் அரசியல் அறிவை புரிந்துகொள்ளமுடிந்தது.பிள்ளையானை ஏன் இந்தியப்பிரதமர் சந்திக்கவில்லை.தமது கட்சித் தலைவரை படுகொலை செய்த கொடிய இயக்கம் ஒன்றில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ஒருவரை இந்தியப்பிரதமரால் எப்படிச் சந்திக்கமுடியும்? ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது பிள்ளையான் புலிகள் இயக்கத்தில் ஒரு முக்கிய போராளி. அவரது கட்சியின் தலைவர் கருணா அப்போது புலிகளின் முக்கிய தளபதி.கருணாவையோ அல்லது அவரின் கட்சியினரையோ சந்திப்பது என்பது இந்தியப்பிரதமரால் நினைத்துக்கூடப்பார்க்கமுடியாதது.ராஜீவ் கொலையில் எந்த தொடர்பும் இல்லாதபோதும் அப்போது அந்த இயக்கத்தில் அங்கத்தவம் வகித்த ஒருவரையே சந்திக்க இந்தியா தயாராக இல்லலாதபோது,புலிகள் விடயத்தில் இந்தியாவின் நிலையில் விரைவில் மாற்றம் வரும் என்று நடேசன் நம்பிக்கொண்டிருப்பதுதான் வேடிக்கையானது.

இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் விடுத்த வேண்டுகோள் நிராகரிப்பு

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டபோதும், கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதுடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனனுடன் சந்திப்பை நடத்தமாறு இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு அனுமதிகோரி பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தபோதும், அனைத்துக்கும் எதிர்மறையான பதிலே வழங்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடவேண்டி உள்ள நிலையில், சந்திப்புக்கான அனுமதி நிராகரிக்கப்பட்டமையானது கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார். அனுமதி நிராகரிக்கப்பட்டமைக்கான எந்தக் காரணமும் கூறப்படவில்லையென பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

எனினும், கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சார்பில் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் முதலமைச்சரை ஏன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கவில்லை என்பது குறித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் பேச்சாளர் டின்கார் அஸ்தான் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.முன்னாள் சிறுவர் போராளியாகவிருந்தவர் தற்பொழுது கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதாக 15வது சார்க் மாநாட்டின் ஆரம்ப உரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேணி இணையம்

No comments: