இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் சண்டையில் இலங்கையின் தேவைக்காக ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களை அனுப்ப பாகிஸ்தான் தயாராகியுள்ளது.
வரும் மாதங்களில், 10 நாட்களுக்கு ஒரு முறை கப்பலில் ஆயுதங்களை அனுப்ப பாகிஸ்தான் உறுதி தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "தி சண்டே லீடர்' என்ற வாராந்திர பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளிடமிருந்து வன்னிப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இலங்கை அரசு கடைசி கட்டமாக தீவிர சண்டையிட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் இலங்கை ராணுவத்துக்கு தற்போது ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனினும் விடுதலைப் புலிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதால் ஆயுதத் தேவைக்கு பாகிஸ்தானை நாடியது.
இலங்கை ராணுவ ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அஷ்ஃபக் பர்வீஸ் கயானி ஆகியோர் இடையே நடந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாகவும், தேவையான அளவுக்கு ஆயுத உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தான் உறுதி தெரிவித்ததாக இலங்கை ராணுவச் செயலர் கோட்டபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி வரும் மாதங்களில் கப்பல்களில் ஆயுதங்களை அனுப்ப பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. பத்து நாட்களுக்கு ஒருமுறை கப்பலில் ஆயுதங்கள் அனுப்பப்படும் என்று ஒப்புக்கொண்ட பாகிஸ்தான், இவ்வாறு எத்தனை முறை அனுப்பப்படும் என்பதை தெரிவிக்கவில்லை. இருப்பினும் தங்கள் தேவைக்கான ஆயுதங்கள் குறைவதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
கடந்த 2000-ம் ஆண்டு 30 ஆயிரம் ராணுவ வீரர்களை, விடுதலைப் புலிகள் சுற்றிவளைத்தபோது, செய்வதறியாது திகைத்த இலங்கை, பாகிஸ்தானின் உதவியை நாடியது. உடனடியாக ராக்கெட் செலுத்து வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான போர்த் தளவாடங்களை இலங்கை அனுப்பி உதவியது பாகிஸ்தான்.
Monday, August 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment