Sunday, August 3, 2008

விடுதலைப்புலிகளின் இதயப்பகுதியில் எதிர்வரும் நாட்களில் பாரிய மோதல்கள் என்கிறார்; - இக்பால் அத்தாஸ்

விடுதலைப்புலிகள் ‘சார்க்’ மாநாட்டை முன்னிட்டு அறிவித்திருந்த ஒருதலைப்பட்ச போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவுக்கு வருகிறது. இந்தநிலையில் இலங்கைப்படையினர் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ள ‘சண்டே டைம்ஸின்’ பாதுகாப்பு ஆய்வாளர் ‘இக்பால் அத்தாஸ்’ விடுதலைப்புலிகளின் இதயப்பகுதிகளில் வரும் நாட்களில் பாரிய மோதல்கள் இடம்பெறுவதை தடுக்கமுடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். படையினர் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க திடசங்கற்பம் கொண்டுள்ளமை இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார். ‘சார்க்’ மாநாட்டின் போது ‘ட்ரான்ஸ் ஏசியா’ ஹோட்டலில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக அமைச்சர் கேலிஹ ரம்புக்வெல, வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்க முற்பட்டார். அவருக்கு உதவியாக இராணுவ விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகள், விளக்கங்களை வழங்கினர். எனினும் இந்த நிகழ்வுக்கு சுமார் 200 ஊடகவியலாளர்களை எதிர்ப்பார்த்தபோதும் 30 பேரே சென்றிருந்தனர். இதேவேளை துருப்பினர் மல்லாவியை கைப்பற்ற முனைந்த போதும் துணுக்காயை கைப்பற்றியபோதும் பாரிய எதிர்த்தாக்குதல்களை சந்திக்கவேண்டியிருந்தது. எனினும் அதனைப்பற்றி மேலதிகமாக தெரிவிக்கமுடியாத சூழ்நிலை உள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். ‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதமரின் விமானத்தின் பயணங்களை இந்திய மைசூரில் உள்ள கண்காணிப்பகம் முழுமையாக கண்காணித்து வந்தது. அதேபோல, மன்மோகன்சிங் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்புக்கு செல்லும் போதும் இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் தங்கியுள்ள இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக, இரண்டு இந்திய போர் கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்கு பிரவேசித்துள்ளன. 6700 தொன் நிiறையை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை பொருத்திய கப்பலும் கடலுக்கு அடியில் தாக்குதல்களை கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் நீண்டதூர ஏவுகனைகளை பொருத்திய கப்பல்களுமே இலங்கை கடற்பரப்பில் தரித்து நிற்கின்றன. இவற்றில் 35 அதிகாரிகளும் 320 படைவீரர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கல்கிஸ்ஸையில் உள்ள ஹோட்டலில் விருந்தினர்களை தங்கவைக்க முயற்சிகள் இடம்பெற்ற போதும், ஏற்கனவே அந்த பிரதேசத்தில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களை கருத்திற்கொண்டு அந்த திட்டம் கைவிடப்பட்டது. கொழும்பில் மாத்திரம், 12 ஆயிரம் இலங்கை காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சுமார் 7 ஆயிரம் துருப்பினரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா.

No comments: