Monday, August 11, 2008

வாராது வந்துற்ற சந்தர்ப்பங்களை எல்லாம் புறந்தள்ளி சீர்குலைத்து தற்போது பட்டு வேட்டிக் கனவில் கட்டிய கோவணத்தையும் காற்றில் பறக்கவிட்டு நிற்கிறார்கள்...

ஒரு நீதியான நேர்மையான போராட்டத்தை அறம் சார் தத்துவங்களின் அரசியல் கொள்கைகளே வழிநடத்தும்.


தற்போதைய நிலவரங்கள் பற்றி புலிகளின் அரசியல் துறைப்பேச்சாளர் நடேசன்; இராணுவ முன்னேற்றத்தை தடுப்பதற்கான சகல தந்திரோபாயங்களையும் பாவித்தாயிற்று, புதிய தந்திரோயங்களை பாவிக்கவேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்தார். சில சில நாட்களுக்கு முன்னர் புலிகளின் இணையமொன்றில் அவரின் அறிக்கை பிரசுரமாகியிருந்தது. படையினர் கம்பளம் விரித்தது போல் வருகிறார்கள் என்று அதற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பத்திரிகையின் ஆசிரியர் சு. ரவி குறிப்பிட்டிருந்தார். அவர்கள் அரச படையினர் நூல் பந்திலிருந்து நூல் வருவது போல் வருவார்கள் என எதிர்பார்த்திருந்தனர் போலும். உலக நாடுகளிலிருந்து நவீன ஆயுதங்களை வாங்கி குவித்துத் தான் தமக்கெதிராக வெற்றிகரமாக தாக்குதல் நடத்துகிறார்கள் என்று புலிகள் அரற்றுகிறார்கள். ஆனால் பிரதான உண்மை அதுவல்ல. கடந்த 30 வருடங்களில் படையினர் புலிகளிடமிருந்து கற்றிருக்கிறார்கள். புலிகளே அவர்களின் பிரதான ஆசான்களாக இருந்திருக்கிறார்கள். இன்று படையினர் பாவிக்கும் சாம,பேத,தான, தண்ட முறைமைகள் எல்லாம் புலிகளிடம் இருந்து கசடற கற்றறிந்தவை. இந்த அனுபவ பாடத்துடன் அவர்கள் புலிகளை விஞ்சி பல படி மேலேயே நிற்கிறார்கள்.

ஒரு நீதியான நேர்மையான போராட்டத்தை அறம் சார் தத்துவங்களின் அரசியல் கொள்கைகளே வழிநடத்தும். புலிகளை வழி நடத்தியது பாசிசம். மனித குலத்தின் சிறந்த விடயங்கள் எல்லாம் எமக்கு உவப்பாக இல்லையென்றால் அழித்து விடுதல் என்பதே அது. இந்த வரலாற்றுத் தவறின் முட்டு சந்தில் அவர்கள் இன்று நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 1986 இல் எப்போது ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்து மாற்று தமிழ் அமைப்புக்களின் இருப்புக்கெதிரான அழிச்சாட்டியத்தை தொடக்கி வைத்தார்களோ அன்றே ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு கொள்ளி சொருகப்பட்டது.இந்த கொள்ளி சொருகலை மெத்தப்படித்த மேதாவிகள் உட்பட தமிழர்களில் ஒரு கணிசமான பகுதியினர் ஆதரித்தனர். நெஞ்சில் மனிதாபிமான ஈரம் கசிந்த ஒரு சில தமிழர்களே குற்றுயிரும் குறை உயிருமாக ரெலோ உறுப்பினர்கள் கொல்லப்பட்டபோது இந்த மிலேச்சத்தனத்திற்கெதிராக முணுமுணுத்தனர். தொடர்ந்து புளொட் ,ஈபிஆhஎல்எப் சாதாரண முஸ்லீகள் ,சிங்களவர் என வாழ்வு இருப்பு எல்லாமே கேள்விக்குறியாக்கப்பட்டபோது தமிழ் அரசியல் தலைவர்கள், தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் ,இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி என படுகொலைகள் தொடர்ந்த போது விடுதலை வேள்வியின் ஒரு பகுதி, நெருப்பாற்றை நீந்திக் கடத்தல் என்னும் பெரும் பணி என புலி ஆதரவுத்தமிழர்கள் இறுமாந்திருந்தார்கள் .பிரபாகரன் ஒரு அவதாரபுருசன் 'கடவுள் முருகனுக்கே அவன் நிகரானவன்" என பதிகம் பாடினார்கள் . பதிகம் மட்டுமல்ல போர்ப்பரணியும் பாடினார்கள்.இப்போதென்னவென்றால் யாராவது பலம் கொண்ட மனிதன் கன்னத்தை பொத்தி அறைந்தால் தலைகிறுகிறுகிறுத்து நிற்பார்களே அப்படி தலை கிறுகிறுத்து நிற்கிறார்கள,; இந்த முட்டாள் தமிழர்கள் .ஒன்றும் தெரியாதா பாப்பாக்கள் போல் என்ன நடந்தது, ஏன் நடந்தது என விம்மி வெடிக்கிறார்கள் .பாழாய்பபோன இந்த தமிழர்கள் தமது வடஅமெரிக்க, ஜரோப்பிய இருப்புக்காகவும் வேறு சௌகரியங்களுக்காகவும் புலிகளை உசுப்பேத்தி பாசிசத்தை போசித்து வளர்த்தவர்கள், தாம் தான் என்பதை ஏனோ அடிக்கடி மறந்து விடுகிறார்கள். இவர்கள் சிங்கள படைகளின் மரணங்களில் மாத்திரமல்ல, வெடித்துச் சிதறும் தமிழ் சிறார்களின் மரணங்களிலும் கிறங்கிப் போய்கிடந்தவர்கள்.

'துள்ளித் திரியும் பருவத்திலே துடுக்கடக்கி பள்ளிக்கனுப்பாத தந்தையாகிய பாதகனே" என்று வயது வந்த பிள்ளை தனது தந்தையை நொந்து கொள்வதைப்போல இந்த பொறுப்பில்லாத தமிழரையும் நாளைய சந்ததி நொந்துகொள்ளும். கொலைகளை தமிழர்கள் கூச்சநாச்சமின்றி ஆதரிப்பதை கோயிலடியிலும் ,தேவலாயத்திலும் ,சாப்பாட்டு கடைகளிலும் காதில் நாராசமாக சர்வசாதாரணமாக கேட்கலாம்.இவர்களில் பலர் வெள்ளை வேட்டி திருநூற்று பூச்சுடன் இருப்பார்கள்.நீலன் திருச்செல்வம் சாகவேண்டிய ஆள்த்தான் என்று தேவாலய ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையிலிருந்து வெளியில் வந்து கூடும் போது சிலாகிப்பார்கள். வெள்ளிக்கிழமை கதிரேசன் கோயிலுக்குள்ளேயே மகேஸ்வரி சாகவேண்டிய ஆள்தான் என்று அளவளாவுவார்கள் . நெஞ்சில் உரனுமின்றி நேர்மை சிறிதுமின்றி வஞ்சனை செய்யும் இந்த வாய்ச்சொல் வீரர்கள் பஞ்சமா பாதகம் பற்றிய வேதாகம நூல்களையெல்லாம் வீட்டில் அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள் .

நல்லூர் கோயிலில் திருவிழாவிற்கு 25 நாள் விரதம். ஆனால் பூங்கவனத்தல் அன்று சாகவைக்கப்படும் ஆட்டுக்கு இந்த 25 நாழும் முள்முருக்கங்குழை உட்பட நல்ல சாப்பாடுகிடைக்கும்.

அறநிலை சாராத தமிழர்களின் கசாப்புக்கடைசிந்தனை தான் இங்கு பிரச்சனை. இந்த தமிழர்கள் எது பற்றி பெருமையடைந்தார்கள்? 30 ஆயிரம்பேருக்கு மாவீரர் சுடலை அமைத்ததைப் பற்றி பெருமை அடைந்தார்கள். ஆனால் முக்கியமான விடயம் இவர்களின் பிள்ளைகள் உற்றசுற்றம் யாரும் இச்சுடலைகளில் புதைக்கப்பட்டிருக்கிறார்களா என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த கொலைவெறி புரையேறிய தமிழர்கள் பிரபாகரன் ஆச்சரியங்களை நிகழ்த்துவார் எனக்காத்து கிடக்கிறார்கள். பாவம் வாய்பிழந்தே பழக்கப்பட்டுப் போனவர்கள். இவர்களுக்கு இங்கு நிகழும் மனிதப்பேரவலம் ஒரு பொருட்டல்ல. பல்லாயிரக்கணக்கான மக்கள் மனையிழந்து.. வாழ்விழந்து.. பீரங்கிக்குண்டுகளால் பின்னப்பட்ட வலையின் கீழ்...... வானமிடிந்து விழும் பேரோசை.... அதனையும் விஞ்சிய மனிதபேரவலக்குரல்...... இருளைப்பகலாக்கும் பீரங்கிக் குண்டுகளின் வெளிச்சத்தில்...... மரணமும் வாழ்வுமாக....... இருப்பவர்களை பற்றி சிந்திக்கவில்லை. இந்த பிரகிருதிகளுக்கு இந்த சபிக்கப்பட்ட மக்களை பிடிப்பதுமில்லை. இந்த மக்கள் தமது பாதுகாப்பு கருதி அரச கட்டுபாட்டு பகுதிக்குள் சென்று விட்டால் அடியோடு வெறுத்துவிடுவார்கள். இன்று நொந்து,கெட்டு தாம் உண்டு தம்பாடுண்டு என்று வாழும் கிழக்கின் மக்களையும் இவர்கள் அவ்வாறுதான் வெறுக்கிறார்கள்.மக்கள் பிரபாகரனுக்கு பதிவிரதைகளான பெண்டிராக இருக்கவேண்டும் என்று பாசிசம் தலைக்கேறிய பத்தாம் பசலிகள் கருதுகிறார்கள் .புலிகளின் பினாமிகளான ஊது குழல் ஊடகக்காரர்கள் பாசிசம் ஈடாட்டம் கண்டுவருவதையிட்டு பதட்டமடைந்திருக்கிறார்கள். சர்வதேச கப்பவசூல்காரருக்கும் வேதனைதான.; ஆனால் இதில் கிடைப்பதை சுருட்டிக்கொள்ளலாம் என்றும் பலர் காத்திருக்கிறார்கள். புலிகள் சார் கோயில் ,தமிழ் பள்ளிக் கூடம் உள்ளிட்ட மாபியாத்தொழில் காரர்களுக்கோ பெருங்கவலை. ஆனால் இலங்கையில் ஒரு உருப்படியான தீர்வு ஏற்பட்டு தமிழர்களும் சக சமூகங்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்று எத்தனை பேர் கருதினார்கள். தமிழர்கள் வாழ்கிறார்களோ இல்லையோ புலிப்பாசிசம் வாழ வேண்டும் என்பதே இவர்களில் பெருப்பாலானோரின் அங்கலாய்ப்பாகும் .ஆனால் வரலாற்றில் மனித குலத்திற்கு தீங்கிளைக்கும் ஒன்று தற்காலிகமாக வெற்றி பெறினும் நிரந்தராமாக தோலிவியுறும் என்ற விதி அவர்களுக்கு புரிவதில்லை புரிந்த கொள்ளவும் மாட்டார்கள்.

முல்லைத்தீவு நகரத்தில் குண்டு விழுந்து மாவட்டதின் சம்பிருதாய முதற்பிரசையான அரச அதிபர் உட்பட 18 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததும், குழந்தையொன்று மரணித்ததும் அவலமானதும் துயரமானதுமே. இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான அவலங்கள் கடந்து வந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்து விட்டன. சராசரி இராணுவ ஆட்சியை விஞ்சிய வன்முறை சூழலில் தான் மக்கள் வாழ்ந்து மரணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பேரினவாத அரசுகள் மாத்திரம் பாத்திரவாழிகளாக இருக்கவில்லை. பாசிசப்புலிகளும் தான் பாத்திர வாழிகள். மக்கள் கௌரவமாக வாழ்வதற்கு இந்தியாவின் அனுசரணையுடன,; நாட்டின் உள்ளார்ந்த ரீதியலேயே சர்வதேச அனுசரணையுடன் எத்தனை சந்தர்ப்பங்கள் கிடைத்தன. எல்லாவற்றையும் புலிகள் நிராகரித்தபோது, சீர்குலைத்தபோது கைகொட்டி ஆரவாரித்து வரவேற்றவர்கள் போதை தலைக்கேறிய சமூகப்பிரக்ஞை அற்ற மந்தை ரகத் தமிழர்கள். புலிகள் இந்திய படையுடன் மோதியபோது ,பிரேமதாச வடக்கு-கிழக்கு மாகாணசபையைக் கலைத்தபோது ,வடக்கு-கிழக்கு மாகாண சபை உருவாகுவதற்கு முன்னின்றுளைத்த தோழர் பத்மநபாவும் தோழர்களும் படுகொலை செய்யப்பட்டபோது, தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டபோது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக இலங்கையில் அதிகாரப் பகிர்விற்காக தம்மை அர்ப்பணித்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி புலிகளின் தற்கொலை குண்டுதாரியினால் படுகொலைசெய்யப்பட்டபோது ,அதிகாரப் பகிர்ந்தளிப்பிற்கான அரசியல் யாப்பை உருவாக்குவதில் பங்களித்த நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்;டபோது, சந்திரிகாவினால் முன்மொழியப்பட்ட அதிகாரப்பகிர்வு யோசனைகள் பாராளுமன்ற மேசையிலேயே தீயிட்டு எரிக்கப்பட்டபோது, இறுதியாக நோர்வேயின் முன்முயற்சியில் இனப்பிரச்சனை தீர்வாக சர்வதேச அனுசணையுடன் முன்வைக்கப்பட்ட சமஸ்டிமுறையை நிராகரித்தபோது எல்லாவற்றையும் தமிழீப்போராட்டத்திற்கு உரமேற்றும் அம்சங்கள் ,அதி புத்திசாலித்தனம் என இந்த தற்குறிகள் கூறியும் ,பிரசாரம் செய்தும் வந்தன.

இந்த ஜென்மங்கள் உலகம் முழுவதும் பரந்திருந்தாலும் இவை கிணற்று தவளைகளாகவும் இருந்தன.

புலிகளின் பங்கர்கள் பபிலோனிய தொங்கு தோட்டங்களை விஞ்சிய உலக அதிசயமானவை.

நாலு படையையும் நிர்வாகத்தையும் வைத்திருக்கும், அரசாக இருக்கும் ஒரே விடுதலை இயக்கம் அதுதான்.

உலகத்திலேயே பெரிய பத்திரிகையாளர் மாநாடு வன்னியில் பிரபாரன் கலந்து கொண்டது தான்;.

பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை விட உலகில் நனிசிறந்ததெதுவும் கிடையாது

அதிகூடிய தற்கொலை குணடுகளை வைத்திருப்பவர்கள் நாங்களே.

உலகத்தில் தலை சிறந்த தத்துவ ஆசிரியர் அன்ரன்பாலசிங்கம் மாத்திரமே. .

பெண்விடுலை பற்ற பேசுவதற்கு தகுதியானவர் அடேல் ஒருவரே.

அரசபடையினரிடமோ பொலிசாரிடமோ பிடிபட்டால் உடனடியாவே உயிரை மாய்த்துக் கொள்ளும் ஒரே இயக்கம் .

கட்டுபாடும் ஒழுங்கும் கொண்ட ஒரே ஒரு இயக்கம்

சிங்களவர்கள் முட்டாள்கள் தமிழர்கள் கெட்டிக்காரர்கள்

மிகப்பிரமாண்டமான சுடலைகளும் எமதே.

எங்களை விட கெட்டிக்காரர்கள் உலகில் எவரும் இல்லை

இப்படியான வானம் கிணற்றின் வாயளவு என்று எல்லாவற்றையும் வன்னி பங்கரில் போட்டு உரசிப்பார்க்கும் மனோபாவம் பாரிய அளவில் வளாந்துள்ளதனால் இன்றைய நிலைமை புலிகளின் அடியார் திருக் கூட்டதிற்கு பேரதிர்ச்சியையும் மனச் சஞ்சலத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ' குளிச்சா குற்றாலம் கும்பிட்டா பரமசிவம்" என்ற மூடத்தனம் இந்த தமிழர்களை உடுக்கடித்து எங்கெல்லாமோ அலைக்கழித்து அழைத்துச் சென்றிருக்கிறது. அது கடைசியில் ரோமாபுரிக்கு அழைத்து செல்லவில்லை. உடுக்கடித்தவர்கள் தமிழர்வாழ்வை சுடுகாட்டுக்கு இட்டுச்சென்றிருக்கிறார்கள் .என்றாலும் போதைபுரையேறிய தமிழர்கள் இன்னும் உடுக்கடி, வேப்பிலை, கற்பூரச்சட்டி, குங்குமம் பூசப்பட்டு கத்தி முனையில் காட்சியளிக்கும் எலுமிசிங்காய் மனநிலையிலிருந்து மீளவில்லை.

ஆனால் ஒரு சமூகம் பிரமாண்டமான அளவில் அழிக்கப்பட்டிருகிறது. பௌத்த சிங்கள் பேரினவாதத்தை போசித்து வளர்த்ததில் தமிழ் பாசிசம் வகித்த பங்களிப்பு என்ற வெள்ளிடைமலையான உண்மையை இவர்கள் காண மறுக்கிறார்கள். போதாக்குறைக்கு புலித்தேவன் வேறு ஸ்ரீலங்கா அரசு ஜெனிவா ஒப்பந்தத்தின் விதிகளை அடிக்கடி மீறிவருவதாக குற்றம் சாட்டுகிறார். புலிகள் ஜெனிவா ஒப்பந்தத்திற்கு கட்டுபட்டவர்கள் இல்லை. நாம் பாசிசப்பயங்கரவாதிகள் என்று கூறவருகிறார் போலும். சிவிலியன் பஸ்களுக்கு- ரயில்களுக்கு குண்டுவைப்பது, ஊரோடு மக்களை துரத்துவது அரசியல் தலைவர்கள் மனித உரிமைவாதிகளை படுகொலைசெய்வதெல்லாம் ஜெனிவா உடன் படிக்கைக்கு உடன்பாடானவை என்று கூற வருகிறாரா. நாலுபடை வைத்திருப்பவர்கள், தமக்கென நிர்வாகம் -அரசு வைத்திருப்பவர்கள் ,உலக அதிசயம் நிகழ்த்துபவர்கள் நீங்கள் மக்களை மரங்களின கீழ் வாழவைப்பது தகுமா, மக்கள் குடியிருப்புக்கள் மேல் குண்டு வீச அனுமதிப்பது எந்தளவு நியாயம், உங்களை பாதுகாக்க மக்களை அரணாகப்பாவிப்பது எந்தளவிற்கு தார்மீகமானது. மக்களின் உணவு ,குடிநீர் ,சுகாதாரம் ,எரிபொருள் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும். மக்கள் வாழும் பிரதேசங்கள் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம்செய்யப்படவேண்டும் .இவற்றுக்காக ஜனநாயக அரசியல் கட்சிகளும் ,மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச உள்ளளுர் மனிதாபிமானப் பணியாளர்களும் குரல்கொடுக்கலாம.; ஆனால் புலிகள் குரல்கொடுக்கமுடியுமா . அவ்வாறு குரல் கொடுத்தால் அது அளவுக்கு மிஞ்சிய பாசாங்கல்லவா. தனக்கென ஒரு நிர்வாகத்தையும், நாற்படைகளையும், சர்வதேச ஆதரவையும் உலகத்தமிழர்களின ஆதரவையும் கொண்டிருப்பதாக கூறும் புலிகள் இவற்றுக்காக ஸ்ரீலங்கா அரசிடம் கையேந்துவானேன்? அவர்களின் தூதரகங்களுடாக(?) உதவியைப்பெற்று தமது துறைமுகங்களில் இறக்கி கொடுக்க வேண்டியது தானே. முட்டாள்த் தனமாககேள்வி எழுப்புகிறேன் என்று கருதவேண்டாம். எவ்வளவு தூரம் சனங்களை மடையர்கள் ஆக்கியிருக்கிறார்கள் என்பதற்காகவே இந்தகேள்வி இங்கு எழுப்பபடுகிறது.

இந்த பாசிச போதையின் மத்தியில், சமூக அவலங்களின் நடுவில் தமிழ் ஜனநாயக சத்திகள் தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை பாதுகாப்பதற்கான பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளன. ஊரை எரிப்பவர்கள் மத்தியில் வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக ஒரு கைவிளக்கையாவது ஏற்றிவைக்க முனைகிறார்கள். அண்மையில் பாரதப்பிரதமர் இலங்கை வந்த போது அனைத்து ஜனநாயகத் தமிழர்தரப்பினருமே ஐக்கிய இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியில் தீர்வு ஏற்பட வழிசமைக்க வலியுறுத்தியதோடு வன்னியில் மக்கள் எதிர் நோக்கி நிற்கும் பேரலத்தையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. பாரதப்பிரதமர் தமிழர் அரசியல் அரங்கில் ஜனநாயக அரசியல் சத்திகள் பலப்படவேண்டியதன் அவசியதை வலியுறுத்தியிருந்தார்.வன்முறை மயப்பட்ட எமது சமூகச்சூழலில் பாரதப் பிரதமரின் கருத்து மிக முக்கியமானது . 'கத்தியின்றி; ரத்தமின்றி" சுதந்திரப்போராட்மொன்றை மாபெரும் மக்களியக்கத்தை நடத்திய மாபெரும் நாட்டின் தலைவரின் இக் கூற்று எம்மைப்பொறுத்தவரையில் மிகமுக்கிமானது.பல்லுக்குப் பல் கண்ணுக்கு கண் இலக்கற்ற தறிகெட்ட வன்முறை மனிதவாழ்வு கெடுபிடியானதாகவும், ஈவிரக்கமற்றதாகவும,; காட்டு மிராண்டித்தனமாகவும் மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வார்த்தைகள் முக்கியமானவை. நாம் மனிதர்களாக நடந்து கொண்டு உரிமைகளுக்காகப் போராடவேண்டும்.யாரையும் புண்படுத்துவதற்காக இதனை எழுதவில்லை. நாம் உண்மைகளையும், மானிட சமூக நியதிகளையும் புரிந்து கொள்ள முயல்வோம் . ஏனெனில் ஒரு சமூகம் அழிந்துகொண்டிருக்கிறது. மன்னியுங்கள்! இது அகதித் தமிழனின் சமூக வேதனை.

அகதித் தமிழன்

No comments: