Monday, August 11, 2008

வன்னியை மீட்ட வெற்றிச் செய்திக்காக காத்திருக்கையில் சில அமைச்சர்கள் எதிராக செயற்பாடு

வன்னிப்பகுதியை புலிகளிடமிருந்து படையினர் மீட்டு விட்டனரென்ற வெற்றிச் செய்திக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கையில் சில அமைச்சர்கள் அதற்கெதிராக செயற்படுவதாக ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன் கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

பிரிவினை வாதத்தை யுத்த ரீதியாக மட்டும் தோற்கடிப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. கருத்தியில் ரீதியாகவும் நாம் தோற்கடிக்க வேண்டும்.

இன்று வன்னியில் ஏற்பட்டுள்ள யுத்தம் தொடர்பாக நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். படையினரின் வெற்றிச் செய்திக்காக காத்திருக்கின்றனர். ஆனால், சில அமைச்சர்கள் கூட பயங்கரவாதத்தை போஷிக்கின்றனர்.

கிழக்கு மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் வழங்கப் போவதாகக் கூறுகின்றனர். ஒரு அமைச்சர், பிரபாகரனுக்கு வடக்கை கொடுக்கப் போவதாகவும் பொலிஸ், காணி அதிகாரத்தைக் கொடுக்கப் போவதாகவும் கூறுகின்றார்.

அரசு 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல் படுத்தப் பார்க்கின்றது. இதற்கான பெரும் அழுத்தத்தை இந்திய அரசும் கொடுத்து வருகின்றது. இதனை அரசின் நடவடிக்கைகள் மூலம் அவதானிக்க முடிகின்றது.

இலங்கை விடயத்தில் இந்தியா தலையிட்ட பல வரலாறுகள் உண்டு. அந்த வரலாறுகளையே இன்றும் இந்தியா தொடர்கிறது. புலிகள் என்ற விதையை வளர்த்து விட்டதே இந்த இந்தியா தான்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்படுத்தி புலிகளுக்கான கோட்பாடொன்றை இந்தியா கொண்டு வந்தது. இந்த உடன்படிக்கை ஒரு மிக மோசமான மோசடி உடன்படிக்கை. புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேச்சுக்களை நடத்தி வடக்கு, கிழக்கு இணைப்பை ஏற்படுத்த முன்னின்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தான் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு இரு தடவைகள் வந்திருந்தார்.

சார்க் மாநாட்டுக்கு ஒரு தடவை வந்தார். அதற்கு முன்னர் ஒரு தடவை வந்தார். பாதுகாப்பு விடயங்களை ஆராயவென எமது அரசு கூறியது. ஆனால், அவர்கள் வந்தது அதற்காகவல்ல.

பலாலி விமானத்தள ஓடு பாதையை புனரமைக்க இந்தியா முன் வந்தது. ஆனால், அதற்கு மூன்று நிபந்தனைகளை முன் வைத்தது. ஒன்று, பலாலி விமான ஓடு பாதைத் தளத்தை இம்முறை மட்டுமல்ல தொடர்ந்தும் இந்தியாவே புனரமைக்க வேண்டும். இரண்டாவது, பலாலி விமானத் தளத்தை மூன்றாம் நாட்டுக்குப் பயன்படுத்தக் கொடுப்பதானால் இந்தியாவின் அனுமதி கோரப்பட வேண்டும். மூன்றாவதாக, இந்தியா தான் நினைத்த நேரத்தில் பலாலி விமானத்தளத்தைப் பயன்படுத்த முடியும்.

இவ்வாறு இலங்கை விடயத்தில் இந்தியா எதைச் செய்தாலும் அது இலங்கையின் இறைமையை பாதிக்கக்கூடியதாகவேயுள்ளது. அதனால் தான் நாம் இந்தியாவின் அனுகுமுறை தொடர்பில் அச்சமடைகின்றோம்.

சீனன் குடா பௌத்த விகாரையிலுள்ள பௌத்த பிக்குவை சுட்டுக்கொன்ற இந்திய சிப்பாய்களுக்குப் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நினைவுத்தூபி அமைக்கப்படுவதையிட்டு நாம் மிகவும் வேதனைப் படுகின்றோம்.

பாதுகாப்புத் தரப்பில் செய்யப்படும் வீண் விரயங்கள் முக்கியமானவை. இவை தொடர்பில் ஊடகங்கள் தகவல்களை வெளியிடும் போது அதனை அடக்குவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் கிளர்ந்தெழுகின்றனர். அரசு திருடர்களைப் பாதுகாக்க முற்படுகின்றது.

பி.பீ. ஜயசுந்தர மீது அரசு நடவடிக்கையெடுக்குமென நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அவரை ஒலிம்பிக் போட்டிக்கு ஜனாதிபதி அழைத்துச் செல்கின்றார். நீதிமன்றம் தண்டனைவிதித்த ஒருவருடன் பீஜிங் போனால் மக்கள் என்ன நினைப்பார்கள்?

நாம் அவசரகால சட்டத்துக்கு ஆதரவு வழங்குவது புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே. மாணவர்கள், பிக்குகளின் போராட்டங்களை அடக்கவோ ஊடகங்களை மிரட்டவோ அல்ல. அரசியல் தேவைகளுக்காக அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது.

நேரடியாக சில இடங்களில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களில் இவற்றை நன்கு அவதானிக்க முடிகின்றது.

தேர்தல்களில் வெற்றி பெற மறைமுக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்களே தமது ஆளுகைக்குள் வரும் திணைக்களங்கள். நிறுவனங்களுக்கு பணிப்புரைகளை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் நாம் நீடித்துக் கொள்ளும் இந்த அவசரகாலச் சட்டத்தை புலிகளை ஒடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மக்களின் நேர்மையான உரிமைகளை மறுக்கக் கூடாது. அவ்வாறு நடந்தால் மக்கள் அரசுக்கெதிராக கிளர்ந்தெழுவதை யாராலும் தடுக்க முடியாது.

No comments: