இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு கடந்த சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வாயிலில் பெரும் அதிர்ச்சி காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிலவிய த வறே இதற்குக் காரணமாகும்.
சார்க் மா நாடு முடிவடைந்த கையோடு, தெற்காசிய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதிகளைச் சென்றடைந்து விட்டனர்.
இருந்தபோதிலும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மாத்திரம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்ட வாசலில் காத்து நின்றுள்ளார்.
தனது காருக்கும் அதற்குப் பாதுகாப்பாக வரும் வாகன தொடரணிக்குமாகவே அவர் அங்கு காத்து நின்றுள்ளார். எனினும் எதுவுமே வந்து சேரவில்லை.
இந்நிலையில் "தாஜ்சமுத்திரா' என்ற இலட்சினையுடன்கூடிய வாடகைக் கார் ஒன்று அங்கு ஓடித்திரிவதைக் கண்டு அந்த சாரதியை அணுகி தன்னை ஹோட்டல் விடுதியில் கொண்டு சென்று சேர்க்குமாறு கேட்டுள்ளார்.
இதேவேளை, வீதிகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்த போதிலும் குறித்த காரில் "தாஜ்சமுத்திரா' இலட்சினை பதித்திருந்ததன் காரணமாக ஒருவாறு அது ஹோட்டலை சென்றடையக்கூடியதாக இருந்தது.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இறுதியில் எந்தவிதப் பாதுகாப்புமின்றி வாடகைக் காரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட தவறு இந்திய அதிகாரிகளை மிகவும் அதிருப்தி அடையச் செய்திருக்கும் என்பதை கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட இந்த தவறு தொடர்பில் எம்.கே.நாராயணனிடம் குறித்த பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரி நேரில் சென்று மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்றதோர் நிலை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தும் பொருட்டு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்திருந்தார்.
பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததும் தனது விடுதிக்குத் திரும்ப ஆயத்தமானார். இந்நிலையில் அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலரை காணவில்லை.
உடனே இந்திய பிரதமரின் விஷேட பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் பாய்ந்து பிரதமரின் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
இதை அடுத்து இந்திய பிரதமரின் வாகனம் விடுதியை சென்றடைந்தது.
இந்திய பிரதமர் சென்ற பின்னரே பிரதமருக்கு பாதுகாப்பாக நியமிக்கப்பட்ட குறித்த மெய்பாதுகாவலர் அவ்விடத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது குறித்து பூரண விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment