Tuesday, August 5, 2008

நாங்கள் பிடித்துவிட்டோம் நாங்கள் துரத்திவிட்டோம் அப்படியானால் அகதிகள் எப்படி???

மாங்குளத்திற்கு மேற்கே வவுனிக்குளம் பாலையடி பகுதியில் மல்லாவியை நோக்கி மூன்று முனைகளில் வெள்ளிக்கிழமை காலை முன்னேற முயன்ற இராணுவத்தினரை எதிர்த்து தாங்கள் நடத்திய தாக்குதல்களில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இதேவேளை, வெள்ளாங்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 10 புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப் பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக் கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. அத்துடன் வவுனியா பாலமோட்டை மற்றும் வெலிஓயா பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற வௌ;வேறு மோதல் சம்பவங்களில் மேலும் 17 புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது. எனினும் இதுகுறித்து புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. 'பத்தாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்தன'- கிளிநொச்சி அரசாங்க அதிபர் இடம்பெயரும் மக்கள் அண்மைக்காலமாக வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 10 ஆயிரம் குடும்பங்கள் புதிதாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்திருக்கின்றார். மன்னார் மாவட்டத்தின் மடு மற்றும் மாந்தை மேற்குப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள 7000 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்குப் பிரதேசகங்களில் இருந்து 1500 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் இருந்து மேலும் 1550 குடும்பங்களுமாக 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்திருக்கின்றார். கிளிநொச்சி மாவட்டத்தின் வடமேற்கே உள்ள பூநகரி பிரதேச செயலகப் பிரதேசத்திலிருந்து மக்கள் ஏறக்குறைய அனைவருமே பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார். இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள மல்லாவி, துணுக்காய் பிரதேசங்களின் தென்பகுதியில் இராணு வத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கடும் மோதல்களில் 9 புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப் பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இந்தப் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு மோதலில் மேலும் ஒரு இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது. கேந்திர முக்கியத்துவம் மிக்க மல்லாவி மற்றும் துணுக்காய் நகரங்களை நோக்கி இராணுவத்தின் 57ஆம் படைப்பிரிவினர் நகர்ந்தபோது, நூற்றுக்கணக்கான மோர்டார் குண்டுகளை புலிகள் ஏவியதாகவும், எனினும் நிலைமையை படையினர் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது எனினும் முழங்காவில் பகுதிகளை நோக்கித் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணை வீச்சுக்கள் காரணமாக அப்பகுதி மக்கள் வெளியேறியுள்ள நிலையில் முழங்காவில் மகாவித்தியாலயம், பூநகரி முழங்காவில் அபிவிருத்தி நிறுவனம், தனியார் மருத்துவ நிலையங்கள், வணிகநிலையங்கள் என்பன வேறு பகுதிகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முழங்காவில் பகுதியில் இயங்கிவந்த பூநகரி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் மூன்று கிளைகள் தற்போது வன்னேரிக்குளத்திலும், ஜெயபுரத்திலும் இயங்கி வருகின்றன. இதேவேளை ஜெயபுரத்தில் தற்காலிகமாக இயங்கிவந்த மடுக்கல்விப் பணிமனை தற்போது வன்னேரிக்குளம் மகாவித்தியாலயத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. வணிக நிலையங்கள் ஒரு சில வேறு இடங்களில் இயங்கத் தொடங்கியுள்ள போதிலும் பெரும்பாலான வணிக நிலையங்கள் இயங்காத நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: