முல்லைத்தீவு நகரப்பகுதியை நோக்கி நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் இராணுவத்தினர் நடத்திய கடுமையான எறிகணை தாக்குதலில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய அதிகாரி ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும், குழந்தையொன்று உடல் சிதறி மரணமாகியுள்ளதாகவும் முல்லை தீவு செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு வைத்தியசாலை உட்பட முக்கிய கட்டிடங்கள் பலவும், வீடுகள், பொது கட்டிடங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளதாகவும் புலிகளின் குரல் வானொலி இன்ற காலை தெரிவித்துள்ளது, முல்லைத்தீவு வைத்தியசாலை சேதமடைந்திருப்பதனால், காயமடைந்தவர்களுக்கான உடனடி, அவசர முதலுதவி வைத்திய சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை வரையில் காயமடைந்தவர்கள் எவரும் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படவில்லை என வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, காயமடைந்தவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்ற விபரத்தையும் புலிகளின் குரல் வானொலி வெளியிடவில்லை. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளை, நடத்தப்பட்ட இந்த எறிகணை தாக்குதல்களினால் நிலைகுலைந்து போன பொதுமக்கள் அல்லோலகல்லோலப்பட்டு போக்கிடமின்றி சிதறியோடி அவலப்பட்டதாகவும் புலிகளின் குரல்; வானொலி தெரிவித்துள்ளது.
இந்தச்சம்பவம் பற்றிய முழுமையான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
வெலிஓயா சிலோன் தியேட்டர் பண்ணைப் பகுதியில் இருந்து நேற்றுக்காலை ஐந்து முனைகளில் முன்னேறுவதற்கு இராணுவத்தினர் முயற்சிகள் மேற்கொண்டதாகவும், இந்த முன்னேற்ற முயற்சியை எதிர்த்து விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதல்களில் இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், இறந்தவர்களின் 4 உடல்களையும் இராணுவ தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
வெலிஓயா பகுதியில் இருந்து முல்லைத்தீவு பிரதேசத்தை நோக்கிய முன்னேற்ற முயற்சியை இராணுவத்தினர் சிலோன் தியேட்டர் பண்ணைப் பகுதியில் இருந்தும் நேற்று ஆரம்பித்துள்ள வேளையிலேயே முல்லைத்தீவு நகரை நோக்கிய இந்த நள்ளிரவு நேர எறிகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வெலிஓயா பிரதேசத்தின் ஜனகபுர, கிரிஇப்பன்வௌ ஆகிய பகுதிகளில் இருந்தும் முல்லைத்தீவை நோக்கி இராணுவத்தினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும், இந்த முனையில் காட்டுப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க தொலைவிற்கு முன்னேறியிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment