தனிநாடு தேவையென்ற தருணமொன்று இருந்ததுவே..
தருவிக்க எழுந்ததுவே, தமிழினம் முழுவதுமே..
இயக்கம் என்றார், அமைப்பு என்றார்,
ஆளாளுக்கு ராஜா என்றார்.
தெருச்சண்டை பிடித்தார்கள்,
தேடித் தேடி அடித்தார்கள்,
குண்டுவைத்து வெடித்தார்கள்,
கொடூரமாக இறந்தார்கள்..
எதிரியல்ல, எம்மவர் தான்
காரணம் புலிகள் தான்..
எம்மினமே என்றாலும், எதிரியேதான் என்றனரே,
புலிகள் மட்டுமே தான் தமிழீழ புதல்வர்கள் என்றனரே,
மாற்றுத் தமிழ் கட்சியெல்லாம் மண்டியிட வேண்டினரே,
தரங்கெட்ட செய்கைகளால் தண்டித்தும் பார்த்தனரே,
தமிழன் என்றல்ல, மனிதன் என்றுகூடப் பாராமல்
பாடைகள் பல கட்டினரே,
பாருலகே பார்த்து நிற்க பரிவின்றிக் கொன்றனரே,
எதிரியை அல்ல, எம்மவரை.. சுத்தத் தமிழரினை.
தமிழர் தோல் போர்த்திய புலிகள்
தரங்கெட்டுப் போயினரே, தம்மினத்தவரையே
தட்டிக் கழித்தனரே, தள்ளியும் வைத்தனரே,
ஆதிக்க வெறி பிடித்தனரே, அடக்குமுறை கையாண்டனரே…
கதிகலங்கியது, பீதி பிடித்தது, பயமும் கொழுத்தியது
எதிரிக்கல்ல, எம்மவர்க்கு, தூய தமிழருக்கு.
உழைப்பை பறித்தனர், இளம் பிள்ளைகளைக் கடத்தினர்.
விதவைகளை நிறைத்தனர், உண்மை வீரர்களை தாட்டினர்.
எதிரியில் அல்ல, எம்மவரில், தூய தமிழர்களில்.
ஜனநாயகம் தெரியாது, ஜன உரிமைகளும் புரியாது,
எதிரிக்கும் சரி, எம் பெயர் கூறும் புலிக்கும் சரி.
அழிவது நம்மினமே என்றாலும் ஆனந்தம் கொள்வர்,
அவர்கள் வெற்றிக்காக எதையும் செய்வர்..
பெற்றதுகள், விட்டதுகள், பெரிசுகள், சிறிசுகள் எல்லாம்
பெரும் செல்லில் மாண்டாலும்,
துன்பமில்லை, துளி துயருமில்லை,
துடுக்காய் அறிவித்தல் விட
துணுக்குக் கிடைத்த இன்பம் தவிர.
இவர்கள் தானய்யா, எம்மவர்கள்
தமிழீழ புதல்வர் என்று கூறும் புலியவர்கள்..
காலம் மாறிவிட்டது, கடவுள் விழித்தும் கொண்டது.
கற்பனைகள் கடந்து விட்டது,
கற்ற சமூகம் களிப்பும் கொண்டது.
இனி பொய் கூறமுடியாது, புகழ் தேட முடியாது,
கொல்லவும் முடியாது, நின்று வெல்லவும் முடியாது.
உண்மைத் தமிழன் அரசியலில் இறங்கி விட்டான்,
நல்ல புரிதல்கள் தெரிந்து கொண்டான்..
புலிகள் தேவையில்லை, பொய்ப் புழுகுகளும் தேவையில்லை.
வேண்டும்… வேண்டும்… பெரும் வாக்குகள் வேண்டும்.
போதும்… போதும்… அதுவொன்றே போதும்.
ஆயுதம் இன்றி, ஒரு ஆட்சி செய்ய
பெரும் வாக்குகள் வேண்டும்.
தமிழர் வாக்குகள் வேண்டும்.
புலிகளுக்கல்ல, புத்திகொண்ட தமிழருக்கு.
எதிரிகளுக்குமல்ல, எம் தமிழ் தலைமைகட்கு..
கட்சி வேண்டும், நல்ல கட்சி வேண்டும்,
தமிழர்க்கென்று ஒரு கட்சிதான் வேண்டும்,
அது பெருங் கட்சியாய் வேண்டும்.
தேடவேண்டாம் ஒரு பெருங் கட்சி, கிடையவே கிடையாது,
இணைய வேண்டும் சிறுசிறு கட்சி, கிடைத்துவிடும் பெருங்கட்சி,
ஆள்வதும் நாமாகும், ஆட்சியும் நமதாகும்.
இதுதானே நம் தேட்சி, இத்தனை கால நம் தேட்சி.
“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்குமாம்”..
பகவத் கீதை சொல்கிறது.
“எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை.
எது நடந்து கொண்டிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்”..
பட்டுத்தேறியவர் சொல்கிறார்.
தீக்குளிப்பு வேண்டாம்…. வீண் உயிரிழப்பும் வேண்டாம்.
இந்தியாவிலே முத்துக்குமார், சுவிஸிலே முருகதாசு
ஆனால், இலங்கையிலே!? ஆனால், இலங்கையிலே!?
இல்லை, ஒருவருமே இல்லை. ஏனெனில்
இது புலம்பெயர் புலிகளின் வேலை.
இளைஞனே, தமிழ் இளைஞனே…
உன்மூளையை நீயே கழுவு,
கைவைக்க விடாதே உன் மூளையில்
புலிகளைக் கைவைக்க விடாதே,
விட்டாயோ, முடிந்திடுமே உன்கதை..
இளைஞனே,
உணர்ச்சி வசப்படுவார், உன்னை
உலக மாவீரனாய் நினைப்பாய்,
உபயோகமேயின்றி உன் உயிர் பிரிப்பாய்,
உலகைவிட்டு மறைந்தே செல்வாய்,
வாழவந்த நீ வீணாய் வாழ்வை முடிப்பாய்,
சாகவந்த புலிகள், நன்றாய் வாழ்ந்து முடிப்பர்.
மற்றவர் சாக அவர்கள் நன்றாக வாழ்ந்தே முடிப்பர்.
ஆதலால், இளைஞனே!
உன் அடுத்த சந்ததிக்கு
தன்னம்பிக்கையைக் கற்றுக்கொடு,
உன் உயிரையே மாய்க்கும்
மடமையினைக் கற்றுக் கொடுக்காதே,
அறிவியல் உலகில் வாழ வந்தவர்கள் நாம்,
நாம் அறிவோடு வாழவேண்டுமே தவிர
ஆயுதத்தோடு வாழக் கூடாது, அது நிலைத்தும் நிற்காது,
ஆதலால், அரசியல் செய், அழகாய் செய், அன்பாய் செய்.
பெறுவாய் நாடும் பெறுவாய், இவ்வுலகும் பெறுவாய்.
நாடு பெற்றுக் கொடுத்த காந்தியைப் பார்,
காடும் பெற்றுக் கொடுக்காத
பிரபாகரனைப் பின்பற்றாதே..
பின்பற்றாதே… தயவுசெய்து.. பின்பற்றாதே.
**** பாலமுருகன் -திருமலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment