புதுடில்லி : கணவர் வீட்டாரின் வரதட்சணை கோரிக்கையை நிறைவேற்ற முடியாததால், மனைவிக்கு 12 நாய்களை பராமரிக்கும் தண்டனை அளிக்கப்பட்டது. பேசித் தீர்க்க பெண்ணின் பெற்றோர் சென்ற போது, அவர்களை பார்க்க மறுத்ததோடு, நாய்களை ஏவி விட்டுள்ளார் கணவர்.
தில்ஷத் கார்டன் பகுதியில் வசிப்பவர் சரிதா குமார். இவருக்கும் ரவி குமார் என்பவருக்கும் 2006ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி திருமணம் நடந்தது. சீனியர் மேனேஜராக வேலை பார்க்கிறார் ரவி குமார். திருமணத்துக்கு சரிதாவின் வீட்டார் 10 லட்சம் ரூபாய் செலவு செய்தனர். முதலிரவன்று, "இந்த திருமணம் நடந்தால், எனது தந்தை இறந்து விடுவார் என்று ஜோதிடர் கூறியும், நான் இதை நடத்தி உள்ளேன்' என்றார் ரவி. பின்னர், தனக்கு ஹோண்டா சிட்டி கார் வாங்கி தர வேண்டும் என்று சரிதாவிடம் கேட்டுள்ளார். இந்த விவரம் சரிதாவின் வீட்டிற்கு தெரிந்த போது, பணம் இல்லாததால், அது முடியாத காரியம் என்று மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து, தனது வீட்டில் வளர்த்து வந்த 12 நாய்களை பராமரிக்கும் வேலை, அவற்றின் எச்சங் களை அகற்றுவது மற்றும் கடினமான வீட்டுவேலைக்கு ஆளாக்கப்பட்டார் சரிதா. இதனால், மூன்று மாதங்களிலேயே கணவர் வீட்டை விட்டு வெளியேறினார் சரிதா. சரிதாவின் வாழ்க்கை வீணாகிவிடக்கூடாது என்று கருதிய அவரது பெற்றோர் சமாதானத்துக்கு சென்றனர். ரவி கேட்ட படி ஹோண்டா கார் வாங்கித் தருவதாகவும், சிறிது காலம் பொறுத்துக் கொள்ளும் படியும் கெஞ்சிக் கேட்டனர். சரிதாவை வீட்டில் சேர்த்துக் கொண்ட ரவி, பழையபடியே வேலை வாங்கத் துவங்கினார். ரவியின் குடும்பத்தாரும் சரிதாவிடம் கடுமையாக நடந்து கொண்டனர். விஷயம் அறிந்த சரிதாவின் பெற்றோர் 2007 அக்டோபரில் மீண்டும் சமாதான பேச்சுக்காக ரவியின் வீடு தேடி சென்றனர். அவர்களை பார்க்கக்கூட மறுத்துவிட்டார் ரவி. கார் வந்தால் தான் அடுத்த பேச்சு என்று கடுமையாக கூறிய ரவியின் வீட்டார், சரிதாவின் பெற்றோர் மீது நாய்களை ஏவி விட்டனர். இதைத் தொடர்ந்து மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார் சரிதா. அக்டோபர் 2007ல் சீனிவாசபுரி போலீஸ் நிலையத்தில் எழுத்து மூலம் புகார் அளித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு பிரிவிலும், தேசிய மகளிர் கமிஷனிலும் புகார் செய்தார். இந்நிலையில், தனது பெண்ணின் வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்ற கடுமையான அதிர்ச்சியாலும், மன சோர் வாலும் கடந்த மாதம் சரிதாவின் தந்தை இறந்து போனார். இதனால் வெகுண்டு எழுந்த சரிதா, டில்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குடும்ப வன்முறை சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு மாதம் ரூ. 50 ஆயிரம் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் என்றும், மன உளைச்சலுக்காக ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.
Thinamalar
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment