Wednesday, April 9, 2008

3 நிமிடங்களில் முடிந்தது 2 மனைவிகளுக்கு விவாகரத்து

கோலாலம்பூர்:கோர்ட்டில் எஸ்.எம்.எஸ்., மூலம், "தலாக்' கூறி, மூன்றே நிமிடங்களில், இரண்டு மனைவிகளுக்கு விவகாரத்து அளித்தார் கணவர். மலேசிய கோர்ட்டில் இச்சம்பவம் நடந்தது. ரோஸ்லன் நாக் (44) என்பவருக்கு 1986ம் ஆண்டு நுõர்ஹயாத்தி இஸ்மாயில் (46) என்ற பெண்ணுடன் திருமணமானது. இவர்களுக்கு 9 வயது முதல் 19 வயது வரையில் நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். பின்னர் 1995ம் ஆண்டு, மஸ்துரா( 35) என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார் ரோஸ்லன். இவர்களுக்கு 6 வயது, 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ரோஸ்லனின் மனைவிகள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகினர். ரோஸ்லனும் மனைவிகளை தோழமையுடன் நடத்தி வந்தார். 2004ம் ஆண்டு இன்னொரு பெண்ணை, ரோஸ்லன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த திருமணம் தான், மூத்த தாரங்களை ரோஸ்லனிடம் இருந்து பிரியும் முடிவுக்கு கொண்டு வந்தது. தற்போது, மூன்றாவது மனைவியை ரோஸ்லன் பிரிந்து வாழ்ந்தாலும், தங்களுக்கு விவகாரத்து வேண்டும் என்று மூத்த மனைவிகள் இருவரும் வலியுறுத்தி வந்தனர். கோலாடெர்ரெங்கானுவில் உள்ள ஷரியத் கோர்ட்டில் விவாகரத்து மனு செய்யப்பட்டது.

நீதிபதி முன்னிலையில் ரோஸ்லனும், அவரது மனைவிகளும் ஆஜராயினர். நீதிபதி முன்னிலையில் எஸ்.எம்.எஸ்., மூலம், முதலில் இரண்டாவது மனைவிக்கும், அடுத்ததாக முதல் மனைவிக்கும் "தலாக்' என்று மெசேஜ் அனுப்பினார் ரோஸ்லன். அவர்களுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். மூன்றே நிமிடங்களில், விவாகரத்து முடிந்து விட்டது. ஒரே கோர்ட்டில், அடுத்தடுத்த இரண்டு மனைவிகளுக்கும் ஒரே சமயத்தில் விவாகரத்து அளித்தது இதுவே முதல் முறை.

No comments: