Friday, April 18, 2008

மக்கள் ஓசை தினசரிக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பது குறித்து செய்தி ஆசிரியர் துரைராஜ் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட பேட்டி


மலேசியாவில் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் மக்கள் ஓசை தினசரி தமிழ் நாளிதழுக்கு மலேசிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. சமீப காலங்களில் மலேசிய அரசு தமிழகமக்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றா எனும் சந்தேகம் அனைவரிடையே எழுந்துள்ளது. இது பற்றி முன்னாள் மலேசிய தமிழ் எழுத்தாளரும், சங்கத் தலைவரும் செய்தி ஆசிரியருமான திரு. துரைராஜ் அவர்கள் வீரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ""மக்களோசை திரு. ஆதிகுமணன் அவர்களால் தொடங்கப்பட்டது. இது வாரப் பத்திரிக்கையாக பதினைந்து ஆண்டுகளாக சிறப்பாக வெளிவந்து கொண்டிருந்தது. அவரது திடீர் மறைவின் காரணமாக, அவரது சகோதரர் திரு. இராஜகுமாரர் அவர்களின் முயற்சியால் தினசரி நாளிதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்ற மக்களோசை நாளிதழுக்கு திடீரென தடைவிதிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விடயமாக உள்ளது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏசுநாதர் படத்தை அவதூறாக வெளியிடப்பட்டதாகக் கூறி, மலேசிய அரசு அதற்கு தடை விதித்தது. இது குறித்து மலேசிய நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன் பின் மூன்று மாத காலமாக வெளிவந்து கொண்டிருந்தது. தற்போது அதன் மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டு விட்டது எனக்கூறி மலேசிய அரசு அதற்க்கு மீண்டும் தடைவிதித்துள்ளது.

இந்த அதிரடியான நடவடிக்கைக்கு சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்பதால் . மீண்டும் மக்களோசை சார்பாக மலேசிய நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கருத்துக்கூற இயலாது. விரைவில் சுமூகமான சூழல் ஏற்படும் என நம்புகிறோம்'' எனக் கூறினார்.

மலேசிய இலங்கை காங்கிரஸ் தலைவர் டத்தோ டாக்டர் தர்மசீலன் வீரகேசரி இணைத்தளத்துக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில்

மக்கள் ஓசைக்கு எதிராக மலேசிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்ட போது ?

மலேசியாவில் மூன்று தமிழ் தினசரி நாளிதழ்கள் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றான மக்கள் ஓசைக்கு எதிரான இந்த நடவடிக்கை அனைவருக்கும் வருத்தத்தை தந்துள்ளது. மலேசியாவில் சமீபத்திய தேர்தல் ஆளுங்கட்சிக்கு எதிர்பாராத திருப்புமுனையாக அமைந்தது. எதிர்கட்சிகள் மெஜாரிட்டி பலத்துடன் இருப்பது ஆளுங்கட்சிக்குச சவாலாக உள்ளது. அதில் தமிழர்களும் அதிகம் இடம் பெற்றுள்ளனர். மக்கள் ஓசைக்கு எதிரான இந்த நடவடிக்கையை பார்க்கும்போது தற்போதைய அரசியல் ஒரு காரணமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

மக்கள் ஓசை அரசுக்கு எதிராக எப்போதும் செயல்பட்டதில்லை. ஆனால் மற்ற பத்திரிகைகளைக் காட்டிலும் மக்கள் ஓசை எதிர்கட்சிகளின் நடவடிக் கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நாட்டின் மக்களின் கருத்தைத்தான் மக்கள் ஓசை வெளியிட்டார்கள். மற்றபடி அரசுக்கு எதிராக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால் அரசு அவர்கள் நீதி மன்ற நடைமுறையை மீறியிருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.

சென்ற ஆண்டு ஓகஸ்ட் மாதம் மக்கள் ஓசைக்கு முதல் முறையாக அரசு தடை விதித்தது என குறிப்பிட்ட அவர் அது சரியானது தானா கேட்கப்பட்ட போது ?

அப்போது அவர்களே தவறை ஒப்புக்கொண்டு ஆசிரியர் மன்னிப்பு கோரி கடிதம் வெளியிட்டார். அதாவது இயேசுநாதர் படத்தை அவமரியாதைக்குரியதாக அச்சிடப்பட்டதை தவறுதலாக வெளியிடப்பட்டதாக அவர்களே ஒப்புக்கொண்டார்கள். இப்பிரச்சனைக்குப் பின் மூன்று மாதகாலமாக மக்கள் ஓசை வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த திடீர் நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறலாமா என கேட்கப்பட்டதற்கு?

இதனை ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறமுடியாது. நடைமுறையில் சில அதிருப்திகள் இருந்தாலும் பல, சலுகைகளை தமிழர்கள் அனுபவித்துக் கொண்டுதான் உள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு பெரிதாக எவ்விதப் பிரச்சனையும் இல்லை. முன்னாள் அமைச்சர் தத்தோ சாமிவேல் அவர்கள் மக்கள் ஓசைக்கு எதிராக இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார். அவர்களை மலேசிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு கூறியுள்ளார். மேலும் இம்மாதிரியான நடவடிக்கைகள் அரசுக்கு தமிழர்களின் ஆதரவை குறைக்கும் என எச்சரித்துள்ளார். கடந்த தேர்தலில் ஆளுங்கட்சியின் பின்னடைவுக்கு கோயில்களை இடித்ததே பெரிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மலேசியாவிலிருந்து வாசு கண்ணன் 4/18/2008

No comments: