Friday, April 18, 2008

அம்மாவை பார்ப்பேனா என்றுதெரியாது...


மக்கள் தொலைக் காட்சியில் ஈழத்து தமிழில் தாலாட்டுப் பாடுவதைப் போல இனிமையாக செய்தி வாசிப்பவர் சுகந்தா. இலங்கையின் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர். தினமும் செய்தி சொல்லும் இவருடைய வாழ்க்கை நெஞ்சைப் பிழியும் உருக்கமான டாக்குமெண்டரி படம்.


‘‘என்னுடைய உறவுகளையெல்லாம் இலங்கையில விட்டுட்டு வந்திருக்கேன். என்னால அவங்களைப் பார்க்க முடியலை. ஆனா, தினமும் என்னுடைய அம்மா அங்கிருந்து என்னை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து சந்தோஷப்படறாங்க. செய்தி வாசிப்பதே, நான் நல்லா இருக்கேங்கிற செய்தியை அவங்களுக்குச் சொல்லத்தான். ஒருநாள் செய்தி வாசிக்கலைனாலும் எனக்கு ஏதோ உடம்புக்கு முடியலைன்னு எங்கம்மா பதறிடுவாங்க. என்னால ஊருக்குத் திரும்பிப் போகமுடியாது. அவங்களால இங்கே வரமுடியலை. இனி என் அம்மாவைப் பார்ப்பேன்ற நம்பிக்கை இல்லை. அவங்களுக்காக இந்தச் சின்ன சந்தோஷம் கொடுத்திட்டே இருக்கணும்’’ என்று நெகிழ்ச்சியாகப் பேசும் சுகந்தாவின் தந்தை இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர். தந்தை இறந்தபிறகு கணவருடன் சென்னைக்கு வந்திருக்கிறார் சுகந்தா. ஒரு வருடமாக சென்னையில் வசிக்கிறார்.


‘‘எங்க ஊர்ல அப்பா சின்னதா டிராவல்ஸ் பிஸினஸ் பண்ணிட்டிருந்தார். ராணுவத்துக்கு வண்டி தரமாட்டேன்னு சொன்னதால சுட்டுட்டாங்க. நெத்தியில சுட்டுட்டாங்க. என் கணவரையும் ரெண்டு மூணு தடவை சுடப் பார்த்தாங்க. கடவுள் புண்ணியத்துல அவர் தப்பிச்சிட்டார். அங்கே எப்படின்னா யாரு, என்னன்னு பார்க்கமாட்டாங்க. தமிழன்னாலே சுடுவாங்க. அதிர்ஷ்டம் இருந்தால் உயிர் தப்பிக்கலாம். ஒரு தடவை ராணுவத்தினர் இவரைப் பிடிச்சு உலுக்கிட்டிருந்தாங்க, நான் போய்தான் காப்பாற்றி கூட்டி வந்தேன். இலங்கை ராணுவத்தோட முதல் குறி தமிழ் இளைஞர்கள்தாம். சின்னப்பையனா இருந்தா சுட்டுடுறாங்க’’ என்று பேசிய படியே கணவரைப் பார்க்கிறார்.

‘‘எப்போ சென்னைக்கு வரணும்னு முடிவு பண்ணீங்க?’’

‘‘ஒரு நாள் சுகந்தா வெடிகுண்டுக்கு பயந்து தெருவில் தவழ்ந்து போனதைப் பார்த்தேன். இனியும் இப்படி பயத்துல செத்துப் பிழைக்க வேண்டாம்னு முடிவு பண்ணி சென்னைக்குப் புறப்பட்டோம். எங்ககிட்டே கொஞ்சம் பணம் இருந்ததால விமானத்துல வந்துட்டோம், இல்லாதவங்க கப்பலில் வராங்க’’ என்கிறார் சுகந்தாவின் கணவர் துசிதர்.

‘‘சென்னை வாழ்க்கை எப்படி இருக்கு?’’

‘‘மொழி ஒண்ணா இருப்பதால ஆசையா விருப்பப்பட்டு சென்னைக்கு வரோம். இங்கே ஸ்ரீலங்கான்னா ஐய்யோன்னு பயந்துகிட்டு வீடுகூட தரமாட்டேங்குறாங்க. இப்போ இருக்கிற வீட்டுக்கு ஐந்தாயிரம்தான் வாடகை. நாங்க பதினோராயிரம் கொடுக்கறோம். இலங்கைத் தமிழர்னாலே இங்கே வித்தியாசமாதான் பார்க்கிறாங்க. எங்க ஊர்ல சொந்த வீடுலாம் இருக்கு ஆனால் வாழ முடியலை. குண்டு விழுந்துட்டே இருக்கும். ராத்திரி வீட்டுல லைட் எரிந்தால் என்ன லைட் எரியுதுன்னு ராணுவத்தினர் விசாரணைக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்க. இதுக்கு மத்தியில் எங்களுடைய ஒரே சந்தோஷம் காதல்!’’ என்கிறார் துசிதர். இவர்களது காதல் திருமணம்.

‘‘பக்கத்து ஊர்தான். ஆனால் ஏழு வருஷம் பார்க்காமல் காதலை மனசுல சுமந்துகிட்டிருந்தோம். நாங்க பேசிக்கிட்டதே கிடையாது. காதலர்களாக எங்கியும் சந்திச்சதே இல்லை. நான் எழுதற லெட்டர் அவருக்கு ரெண்டு மாசத்துக்குப் பிறகு போய்ச் சேரும். ரெண்டு ஊருக்கும் போக்குவரத்துக் கிடையாது. கடல் போக்குவரத்து மூலம் லெட்டர் போய்ச் சேர மாசக்கணக்கில் ஆகிடும். மனப்பூர்வமாக இவர்தான் கணவன்னு முடிவு பண்ணதால எந்தப் பேச்சுக்களும் அப்போது தேவைப்படலை. கல்யாணமாகி இப்போது சென்னையில் சந்தோஷமா இருக்கோம்’’ என்கிறார் சுகந்தா.

இலங்கையில் தமிழர்களுக்கு காதலாவது மிச்சமிருக்கிறதே..

_ ஜனனி

குமுதம்

No comments: