Thursday, April 17, 2008

அங்கங்கள் இயங்காத நிலையிலிருக்கும் மருத்துவ மாணவிக்கு உருகும் உள்ளங்கள் உதவலாம்


பிலியந்தலையைச் சேர்ந்த கோவின்னகே டொன் சமித்தா சமன்மல்லி என்ற மாணவி டாக்டராக வேண்டும். நோயாளருக்குச் சிகிச்சையளிக்க வேண்டும். நோயாளரைச் சுகதேகிகளாக்க வேண்டும். என்ற உயரிய குறிக்கோளுடன், 2004 ஆம் ஆண்டின் க.பொ.த.(உயர்தரம்) பரீட்சை மூலம், கொழும்பு மருத்துவக் கல்லூரியினுள் பிரவேசித்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த மாணவி விபத்து ஒன்றில் சிக்கி இடுப்புக்குக் கீழேயிருக்கும் அங்கங்கள் அனைத்தும் இயக்கமிழந்த நிலையில் அவதிப்படுகின்றார். இவர் மருத்துவக்கல்வி கற்ற வேளையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சிகிச்சை வாட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை அவதானித்துத் தனது மருத்துவக் கல்வியைக் கற்றுக்கொண்டிருந்தார். இவர் மருத்துவக்கல்வி கற்றுக்கொண்டிருந்த அதே வைத்தியசாலையில் அதேவாட்டில் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட வேளையில் அவரது அவல நிலைகண்டு தேசிய வைத்தியசாலை முழுவதுமே கண்கலங்கியது.

சுதுமலையைச் சேர்ந்த இதே அணியைச் சேர்ந்த மருத்துவ மாணவன் ஒருவனின் தகப்பனார் சில மாதங்களுக்கு முன்னர் மின்தூக்கி விபத்தொன்றில் படுகாயமடைந்து அகால மரணமடைந்தார். கொழும்பில் இருக்கின்ற ஓர் மாடிக் கட்டிடத்தின் மின்தூக்கி இயங்கும் போது அந்த மின்தூக்கியில் பொருத்தப்பட்டிருந்த கேபிள் அறுந்து விட்டது. அந்த மின்தூக்கி கீழே வீழ்ந்தபோது அதனுடன் வீழ்ந்து படுகாயமடைந்து இறந்துவிட்டார். இந்தச் சம்பவத்தினால் மருத்துவ மாணவர்களுக்கு ஏற்பட்ட சோகம் நீங்குவதற்கு முன்னர் இப்பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டிருக்கும் மாணவிக்கு உதவுவதற்காக இவ் விடயம் தொடர்பாக மருத்துவ மாணவர்கள் தெரிவித்த தகவல்களை அடிப்படையாக வைத்து இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

சமித்தா சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தந்தை இறக்கும் போது இவர் கொழும்பு கோத்தமி மகளிர் வித்தியாலயத்தில் 5ஆம் வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற இவர் மருத்துவக் கல்வி கற்க வேண்டும் என்ற திடமான குறிக்கோளுடன் கல்வி கற்றவர். க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைக்குத் தோற்றி அடுத்தடுத்து இரண்டு அமர்வுகளில் உயிரியல் வீஞ்ஞான பாடநெறிக்குத் தெரிவு செய்யப்பட்டபோதிலும், அப்பாடநெறியில் இணையாது துணிவுடன் அத் தெரிவை நிராகரித்தவர், இவரது தாயார் புற்றுநோய்க்கு ஆளாகியிருந்தார். அவர்களது குடும்பம் கஷ்டமான பொருளாதார நிலையில் இருந்தது. அந்த நிலையிலும், "நீ மருத்துவக் கல்வியைத்தான் கற்க வேண்டும். நீ நிச்சயமாக மருத்துவத்துறைக்குத் தெரிவுசெய்யப்படுவாய்." கடவுள் உனக்கு உதவுவார் என்று அவர் சமித்தாவை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.

தாயாரின் உற்சாகப்படுத்தலும் தளராத மனங்கொண்ட இவரது விடாமுயற்சியும் 3ஆவது தடவை க.பொ.த.(உயர் தரம்) பரீட்சையில் இவர் தேசிய ரீதியாக 52 ஆவது இடத்தையும் கொழும்பு மாவட்டத்தில் 27 ஆவது இடத்தையும் பெற்று மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்ய வழிவகுத்தன. மருத்துவ மாணவர்கள் தாங்கள் மருத்துவக் கல்வி பெறுவதுடன் நின்றுவிடாது, மருத்துவக் கண்காட்சிகளை நடாத்திப் பொதுமக்களுக்கு ஆரோக்கிய அறிவூட்டவும் விரும்புவர் பொதுமக்களுக்கு ஆரோக்கிய அறிவூட்டுவதற்காக கொழும்பு மருத்துவபீடம் நடத்திவந்த மருத்துவப் பொருட்காட்சி கடந்த 26 ஆண்டுகளாக இடம்பெறாது தடைப்பட்டிருந்தது. சமித்தா உட்பட தற்போதைய மருத்துவ மாணவர்கள் தடைப்பட்டிருந்த மருத்துவப் பொருட்காட்சியை இவ்வருடம் எப்படியும் நடத்தியேயாக வேண்டும் என்று தீர்மானித்தனர். பொருட்காட்சி நடாத்தும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

மார்ச் 21 தொடக்கம் ஏப்ரல் 1 வரை பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் "மொடெக்ஸ் 2008" என்ற பெயருடன் மருத்துவப் பொருட் காட்சியைச் சிறப்பாக நடத்தினர். கால் நூற்றாண்டு இடைவெளிக்குப் பின் நடத்தப்பட்ட இந்த மருத்துவப் பொருட்காட்சி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ அறிவூட்டியது. நாட்டு மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பெரும் பாராட்டைப் பெற்றது.

இந்தப் பொருட்காட்சிக்கான பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்வதற்காக 2004 ஆம் ஆண்டின் க.பொ.த.(உயர் தரம்) பரீட்சை மூலம் கொழும்பு மருத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்திற்குச் செனிறிருந்த வேளையிலேயே சமித்தா விபத்தில் சிக்கினார். மறுநாள் பிறந்த தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடவிருந்த சமித்தாவும் இந்த மாணவர் குழுவில் இணைந்து பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்திற்குச் சென்றிருந்தார். அவரது விதி அவரை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது என்று தான் கூற வேண்டும்.

மாணவர்கள் அங்கே சென்று சிறிமாவோ பண்டாரநாயக்கா காட்சி மண்டபத்தைப் பார்வையிட்ட பின்னர் வெளியே வரும் போது மழை கொட்டியது. பலத்த காற்றும் வீசியது. அண்மையில் நடைபெற்று முடிந்த "ஜயற்ற கிறுல" பொருட்காட்சிக்காக பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டப வளவினுள் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான தற்காலிக தகரக் கூடாரம் ஒன்று அருகில் இருந்தது. சமித்தாவும் சில மாணவர்களும் மழையில் நனையாதிருப்பதற்காக அந்தக் கூடாரத்தினுள் சென்றனர். பல வாகனங்கள் நிறுத்தப்பட்ட அந்தக் கூடாரம் கடுமையாக வீசிய காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது சிதைந்து வீழ்ந்தது. சமித்தாவின்மேல் கூடாரத்தின் நீளமான இரும்பின் கடைசி முனை வீழ்ந்து அவரது நெஞ்சறைப்பகுதிக்குரிய முதுகெலும்பை நொருக்கி விட்டது. அவரது முண்நாணைச் சிதைத்துவிட்டது.

கூரை சரிகின்ற சத்தத்தைக் கேட்டு சமித்தாவுடன் நின்றிருந்த ஏனைய மாணவர்கள் ஒருவாறு வெளியே ஓடித் தப்பிவிட்டனர். சமித்தாவும் ஓடினார் ஆனால் அவர் ஓடிய வேகம் கூடாரத்தைவிட்டு அவர் வெளியேறித் தப்புவதற்குப் போதவில்லை. விழுந்து கொண்டிருந்த கூடாரத்தின் இரும்பு ஒன்றின் பெரும்பகுதியை அவர் கடந்துவிட்டபோதிலும் அந்த இரும்பின் இறுதிமுனையைக் கடப்பதற்கு அவர் ஓடிய வேகம் சிறிதளவு போதாமலிருந்துவிட்டது. அந்த இரும்பு சமித்தாவின் மேல் வீழ்ந்து அவரது முதுகெலும்பைச் சிதைத்து விட்டது. ஏனைய மாணவர்கள் ஓடித் தப்புவதற்கு அவகாசமளித்த அந்தக் கூடாரம் சமித்தா ஓடித் தப்புவதற்கு இடமளிக்காமல் அவர் மீது வீழ்ந்தது.

சமித்தா உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிரபல்யமான ஐந்து சத்திரசிகிச்சை நிபுணர்களால் சமித்தாவிற்கு பல மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. சத்திர சிகிச்சை நிபுணர்கள் நொருங்கிய முதுகெலும்புக்கு வலுவூட்டிவிட்டார்கள். ஆனால் மருத்துவ நிபுணர்களால் நரம்பு இழையங்களை உருவாக்க முடிவதில்லை. நரம்பு இழையங்கள் மீள உருவாவதுமில்லை. முண்நாண் சிதைந்து விட்டதால் இடுப்புக்குக் கீழேயிருக்கும் அங்கங்கள் அனைத்தும் இயக்கமிழந்த நிலையில், நோயாளியாகவே சமித்தா இன்னமும் இருந்து வருகிறார்.

கடவுள் கருணை கூர்ந்தால் நித்தம் நித்தம் புதிய கண்டுபிடிப்புகள் இடம் பெறும் மருத்துவத்துறையில் நரம்பு இழையங்கள் மீள உருவாக்கும் மருத்துவத் தொழில் நுட்பமும் கண்டுபிடிக்கப்படலாம். சமித்தாவின் நரம்புக்கலங்கள் புத்துயிர் பெறவழி பிறக்கலாம். சமித்தாவின் இயக்கமற்றிருக்கும் அங்கங்கள் மீண்டும் இயங்கலாம் என்ற நம்பிக்கையில் அவரது அணியிலிருக்கும் (196) மாணவர்கள் அனைவரும் இன மத பேதமின்றி அவரவர் சமய நம்பிக்கைக்கு அமைவாக இறைவனைப் பிரார்த்தித்து வருகிறார்கள்.

இதே வேளை சமித்தாவின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது. நிமிர்ந்து உட்காரும் நிலைக்கு அவரது நிலை முன்னேறியுள்ளது. இன்றுள்ள மருத்துவக் கண்டுபிடிப்புகள் அவருக்குப் புனர்வாழ்வளித்துச் சக்கரக் கதிரையில் நடமாடி அவரது மருத்துவக் கல்வியைப் பூர்த்திசெய்யவும் அவர் வைத்தியராகி எம் நாட்டுமக்களுக்குச் சிகிச்சையளிக்கவும் இடமளிக்கலாம். ஆனால் அத்தகைய நவீன புனர்வாழ்வுச் சிகிச்சை வசதிகள் எங்கள் நாட்டில் இல்லை. வேறு நாட்டிற்குச் சென்று சிகிச்சை பெறுவதற்கு பெருந்தொகைப் பணம் செலவாகும். இவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார் இவரது நிதிவளமும் நலிந்த நிலையிலேயே உள்ளது.

பலவீனமான நிதிவளமுடைய அவரது குடும்பத்திற்கு, சமித்தாவிற்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்கும் விடயம் எட்டாக் கனியாகவே காணப்படுகின்றது. ஆனால் மருத்துவ மாணவர்கள் "தனி ஒருவரால் தேர் இழுக்க முடியாது. ஊர் கூடினால் தேர் இழுக்கலாம்" என்ற பழமொழியை நினைவில் கொண்டு மாணவர் புனர்வாழ்வு நிதியம் ஒன்றை ஆரம்பித்து இதற்கென இலங்கை வங்கியின் றீஜன்ற் ஸ்ற்றீற் கிளையில் (bank of ceylon-regent street branch) 7620252 இலக்க கணக்கை ஆரம்பித்துள்ளனர். இந்த மாணவியின் புனர்வாழ்வுக்கு உதவ விரும்புபவர்கள் இந்தக் கணக்கிற்கு இயன்ற அளவு பணத்தை அனுப்பி இக் கைங்கரியத்தை நிறைவேற்ற உதவுமாறு வேண்டுகிறார்கள்.."சிறுதுளி பெரு வெள்ளம்" என்ற கூற்று நினைவுகூரத்தக்கது. இவ் விடயம் தொடர்பாக மேலதிக தகவல் பெற விரும்புவர்களை 0716631315 தொலைபேசி இலக்கத்தில் கொழும்பு மருத்துவபீடத்தின் 4ஆம் ஆண்டு மாணவன் கோ.றஜீவ் உடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுள்ளார்கள்.

ச.ஆ.கோபாலமூர்த்தி 17 - April - 2008

No comments: