"ஹே ராம்...ராம், ராம்...ஆஹ்...!' கடந்த 1948 ம் ஆண்டு ஜனவரி 30 ம் தேதி மாலை 5.10 மணிக்கு, டில்லி பிர்லா பவனில் நாதுராம் கோட்சே சுட்டபோது, மார்பில் குண்டு பாய்ந்து சரிந்தபடி, மகாத்மா காந்தி சொன்னது, இவற்றில் எந்த வார்த்தை என்ற சர்ச்சை இன்னும் நீடிக்கிறது.
நாதுராம் சுட்டபோது, "ஹே ராம்' என்று சொல்லி ரத்த வெள்ளத்தில் காந்தி சரிந்தார் என்று தான் இதுவரை கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில், காந்தி பற்றிய வெளிவந்துள்ள ஒரு புத்தகத்தில், அவர் "ராம்...ராம்' என்று தான் சொன்னார் என்று எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. காந்தியின் தனிச்செயலராக இருந்தவர் கல்யாணம்; வயது 84. சென்னையில் இவர் வசித்து வருகிறார். காந்தி சுடப்பட்டபோது, அவருக்கு பின்னால் கல்யாணம் நின்றிருந்தார்.
காந்தியை சுட்டபோது , அந்த இடத்தில் நடந்த விஷயங்கள் குறித்து கல்யாணம் கூறியதாவது:காந்தியின் இரு பக்கத்திலும், வழக்கம் போல, மனு மற்றும் அபா காந்தி உடன் வந்தனர். அவருக்கு பின்னால், இடதுபக்கம், அவருக்கு அருகில் நான் வந்து கொண்டிருந்தேன். காந்தியை நாதுராம் , துப்பாக்கியால் அடுத்தடுத்து சுட்டான். மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த காந்தியால் பேச முடியவில்லை. அவர் எந்த வார்த்தையையும் சொல்லவில்லை. அவரை பார்க்க கூடியிருந்த கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் தான், "ஹே ராம்' என்று கத்தியிருக்க வேண்டும். ஆனால், காந்தி வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. நாதுராம் கோட்சே, துப்பாக்கியை நீட்டியபடி காந்திக்கு முன்னால் வெகு அருகில் நின்று நேரடியாக அவர் மார்பில் சுட்டார். காந்தி மார்பில் குண்டுகள் பாய்ந்தன. அவர் இடது பக்கம் நின்று சுட்டிருந்தால், காந்தியை துளைத்த குண்டுகள், என்னையும் துளைத்து நானும் இறந்திருப்பேன்.
பிர்லா அரங்கில், வழக்கமான பிரார்த்தனையை முடித்துக்கொண்டு, தன் பேரப்பிள்ளைகளுடன் வெளியே வந்தார் காந்தி. அரங்கின் வெளியே வளாகத்தில், அவரை பார்க்க 200 பேர் கூடியிருந்தனர். அவர்களில் ஒருவராக கோட்சே இருந்தார். காந்திக்கு பணிவது போல தலையை குனிந்து, அடுத்த தொடியே, காந்தியை நோக்கி சுட்டார்.ஆனால், காந்தி கொலை தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், அவர் அருகே இருந்த யாரையும் அழைத்து பேச அக்கறை காட்டவே இல்லை. காந்தி சுடப்பட்ட நாளில் இருந்து ,இன்று வரை, யாரை பார்த்தாலும், இந்த விஷயம் குறித்து பேச்சு வந்தால், "காந்தி, ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை' என்பதை சொல்லி வருகிறேன். ஆனால், இது பற்றி தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது.
நான் சொன்னதை யாரும் கேட்பதாக இல்லை. தன் தாத்தாவை துஷார் காந்தி பார்த்தது கூட இல்லை. அப்படியிருக்க, காந்தி சுட்டுக்கொல்லப்படும் தறுவாயில், ஹே ராம் என்று சொன்னார் என்று எப்படி சொல்ல முடியும்? "நான் இறக்கும் தறுவாயில் ராமபிரான் பெயரைச் சொல்லி இறக்க வேண்டும்' என்று காந்தி அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால், அவர் சுட்டுக்கொல்லப்படும் போது ராமபிரான் பெயரை சொல்லவில்லை. துப்பாக்கி குண்டுகள், மார்பை துளைக்கும் போது, அவர் எந்த வார்த்தையையும் சொல்ல முடியாத நிலையில் தான் இருந்தார்.இவ்வாறு கல்யாணம் கூறினார்.
பேத்தி கூறியது
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்த தேசப்பிதா காந்தி, நாதுராம் கோட்சேயால் 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். டெல்லியில், அவருடைய ஆசிரமத்திலேயே இந்த கொலை நடந்தது. மார்பு மற்றும் வயிற்றில் மூன்று குண்டுகள் பாய்ந்ததும், `ஹே ராம்' என்று கூறிக் கொண்டே காந்தி உயிர் துறந்ததாக கருதப்படுகிறது.
காந்தி சுடப்பட்டபோது அருகில் இருந்த அவருடைய பேத்தி மானு, `ஹே ரா...' என்று காந்தி உச்சரித்ததாக கூறினார். அதன் அடிப்படையிலேயே `ஹே ராம்' என்று கூறியதாக இதுவரை நம்பப்பட்டு வருகிறது. தற்போது காந்தி இறந்து 60 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், அவர் `ஹே ராம்' என்று கூறவில்லை என்ற புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
கோட்சே கேட்டது
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து வெளியாகும் ஒரு பிரபல இந்தி நாளிதழ் ஆசிரியரான தயாசங்கர் சுக்லா என்ற பத்திரிகையாளர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். `மகாத்மா காந்தி: பிரம்மச்சரியத்துடன் சுய பரிசோதனை' என்ற தலைப்பில் வெளியாக உள்ள அந்த புத்தகத்தில் புதிய தகவல் இடம் பெற்றுள்ளது.
அதில், காந்தியை மிக நெருக்கமாக 3 அடி தூரத்துக்குள் நின்ற படி சுட்டுக் கொன்ற கோட்சேயின் கருத்து குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதில் கோட்சே, `ஆ... ஆ...' என்று கூறியபடியே காந்தி இறந்ததாக` தெரிவித்து இருக்கிறார். இந்த வார்த்தைகள்தான், `ஹே ராம்` என்று தவறாக புரிந்து கொள்ளப் பட்டதாக தயாசங்கர், தனது புத்தகத்தில் கூறி இருக்கிறார்.
இது தவிர, பிரம்மச்சரிய விரதத்தை கடைப் பிடிப்பதற்காக காந்தியடிகள் மேற்கொண்ட சுய பரிசோதனைகள் மற்றும் சுதந்திரப் போராட்டம் தொடர்பாக காந்தியடிகள் தெரிவித்த கருத்துகளால் ஏற்பட்ட விளைவுகள் போன்றவை குறித்தும் அந்த புத்தகத்தில் பல்வேறு தகவல்களை தயாசங்கர் தெரிவித்து இருக்கிறார்.
குற்றப்பத்திரிகை தகவல்
இதற்கிடையே, வேறு ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கை டெல்லி துக்ளக் ரோடு போலீசார் விசாரித்தனர். அப்போது காந்தி கொலையை நேரில் பார்த்த சாட்சியான நந்த லால் மேத்தா என்பவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது குற்றப் பத்திரிகையில் இடம் பெற்று இருக்கிறது.
உருது மொழியில் உள்ள குற்றப்பத்திரிகையில், `பிரார்த்தனை கூடத்துக்கு செல்வதற்காக பூங்காவில் இருந்து கான்கிரீட் தளத்துக்கு காந்தி ஏறும்போது, ஒருவன் (அவனது பெயர் கோட்சே என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்) அவரை துப்பாக்கியால் மூன்று முறை சுட்டான். ஆறு அல்லது ஏழு அடிகளை எடுத்து வைத்தபடியே காந்தியடிகள் சரிந்தார். அப்போது அவர், `ராம்... ராம்...' என்ற வார்த்தைகளை உச்சரித்தார்' என்று மேத்தா தெரிவித்து இருக்கிறார்.
கிரண்பேடி இணையதளம்
இதையடுத்து, உயிர் பிரியும்போது காந்தி உச்சரித்தாக குறிப்பிடும் வார்த்தைகள் பற்றி மூன்றுவித தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், துக்ளக் ரோடு போலீஸ் நிலையத்தில் உள்ள குற்றப் பத்திரிகையை போலீஸ் அதிகாரி கிரண் பேடி பார்த்து இருக்கிறார். அதை தன்னுடைய இணைய தளத்திலும் பதிவு செய்து வைத்துள்ளார்.
இது குறித்து கிரண்பேடி கூறுகையில், `ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஆவணத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். எனவே, என்னுடைய இணைய தளத்தில் காந்தி கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை சேர்க்க முடிவு செய்தேன்' என்றார்.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment