Wednesday, April 16, 2008

நளினி கூறிய பொய்

சந்திப்பு மர்மம் என்ன?
வேலூர் சிறையில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினியை, பிரியங்கா வதேதரா சந்தித்ததின் மர்மம் என்ன? என்று பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனிடையே இந்த சந்திப்பில் சிறை விதிகள் மீறப்பட்டிருப்ப தாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

விடுதலைப்புலிகளுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று பிரியங்காவிடம் நளினி கூறியது உண்மை இல்லை என்று விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த மாதம் 19ந் தேதி வேலூர் சென்ற பிரியங்கா, அங்கு தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி முருகனை சந்தித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது முதலில் அவர்கள் இத்தகைய சந்திப்பு எதுவுமே நடைபெறவில்லை என்று கூறி வந்தனர். ஆனால் தான் நளினியை சந்தித்தது உண்மை என்று பிரியங்காவே கூறியதை தொடர்ந்து சிறை அதிகாரிகள் வேறு வழியின்றி இந்த சந்திப்பை உறுதி செய்துள்ளனர்.

ஆனால் இந்த சந்திப்பின் போது சிறை விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. பொதுவாக பார்வையாளர்கள் அறையில்தான் சந்திப்பு நடைபெற வேண்டும். ஆனால் பிரியங்காநளினி சந்திப்பு சிறையின் நிர்வாகப் பிரிவின் முதல் மாடியில் உள்ள சிறைத்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

சுமார் 90 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றபோது சிறை கண்காணிப்பு அதிகாரி உட்பட யாருமே அங்கு இல்லை. இருவருமே தனியாக சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சிறை விதிகளுக்கு முரணானது.

மேலும் இந்த சந்திப்பு மாநில அரசு அதிகாரிகளுக்கு கூட தெரியாத அளவில் நடைபெற்றுள்ளது. மாநில காவல் துறை அதிகாரியின் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறி விட்டு மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே பிரியங்காவுடன் சிறைக்கு
சென்றிருக்கிறார்கள். இதன் மூலம் மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் தவறிழைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பிரியங்கா வேலூர் வந்து விட்டு சென்ற பிறகுதான் தமிழக உளவுத்துறையினருக்கே இது பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. மேலிடத்து விவகாரம் என்பதால் அவர்கள் இதனை பெரிதுபடுத்தவில்லை.

நளினி கடிதம்

இந்த சந்திப்புக்கு முன்னதாக இது குறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் நளினியை சிறையில் சந்தித்து பிரியங்கா சந்திக்க விரும்புவது குறித்து கூறியிருக்கிறார். நளினி இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் கைப்படவும் ஒரு கடிதம் எழுதி கொடுத்திருக்கிறார்.
சந்திப்பு மர்மம் என்ன?

ராஜீவ் கொலையாளிகளில் ஒருவரான நளினியை பிரியங்கா சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து பெரும் யூகத்தை எழுப்பியுள்ளது. ராஜீவ் கொலையில் விடுதலைப் புலிகளை தவிர வேறு எவருக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்று கருதி அவர் அது குறித்த தகவலை தெரிந்து கொள்ளும் எண்ணத்தோடு வந்திருக்கலாம் என்று கூறப் படுகிறது.

ராஜீவ் கொலை சதி பற்றி விசாரித்த ஜெயின் கமிஷனில் பல்வேறு தகவல்கள் வெளியானதால் ராஜீவ் குடும்பத்தினருக்கு இது குறித்த சந்தேகம் எழுந்திருக்கலாம் என்றும், அதனை தெளிவுபடுத்திக் கொள்ள பிரியங்கா வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நளினி கூறிய பொய்

விடுதலைப்புலிகளுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நளினி பிரியங்காவிடம் கூறியிருக்கிறார். கொலை நடந்தபோது அந்த இடத்தில் தான் இருந்ததுதான் செய்த குற்றம் என்றும் அவர் பிரியங்காவிடம் கூறியிருக்கிறார். ஆனால் நளினியின் குடும்பத்திற்கு விடுதலைப்புலிகளோடு தொடர்பு இருந்தது என்று இந்த கொலை வழக்கில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.

நளினியின் சகோதரர் பாக்யநாதன் தனக்கு பேபி சுப்பிரமணியம் ஒரு அச்சகத்தை வைத்து கொடுத்ததாக கூறியிருக்கிறார். பேபி சுப்பிரமணியம் விடுதலைப்புலிகளின் போராளிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

நளினியின் தாயார் பத்மாவுக்கும் இது தெரியும். சிபிஐ விசாரணையின் போதே அவர்கள் இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆகவே விடுதலைப் புலிகளுக்கும், தங்களுக்கும் எந்ததொடர்பும் இல்லையென்று கூறுவது பொய் என காவல் துறையினர் தெரிவித்தனர். ´

Maalaisudar Wednesday, 16 April, 2008

No comments: