வேலூர் சிறையில் கணவர் முருகனை சந்தித்து பேச நளினி மறுத்ததால் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த அவர்களது சந்திப்பு திடீரென ரத்துச் செய்யப்பட்டு விட்டது.
இனி இவர்களது மகள் அரித்ரா வந்த பின்னர் தான் இருவரும் சமரசம் ஆவார்களா என பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் உள்ள கணவன் மனைவியாகிய முருகனும் நளினியும் 15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமைகளில் சந்தித்துப் பேச 30 நிமிடங்கள் வரை அனுமதிக்கப்படுவதுண்டு.
இந்நிலையில் நேற்று முன்தினம் இடம் பெறவிருந்த முருகன் நளினி சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுவிட்டது. எனவே பொலிஸார் சிறைக்கு வரவேண்டியதில்லை என சிறைச் சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது நளினி விருப்பம் தெரிவிக்காததால் நளினி முருகன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதனால் அடுத்த சந்திப்பு எப்போது நடக்கும்? இனிவரும் சந்திப்புக்களின் போது இருவரும் பேசுவதை நிறுத்தி விடுவார்களா? இங்கிலாந்தில் உள்ள மகள் அரித்ரா வந்து தான் இவர்களை சமரசம் செய்து வைப்பாரா என்பது பரபரப்பான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த மார்ச் 19ஆம் திகதி ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் பெண்கள் சிறைக் குச் சென்று நளினியைச் சந்தித்து பேசியுள்ளார்.பிரியங்கா நளினி சந்திப்பு நடந்து 3 நாட்கள் கழித்து மார்ச் 22ஆம் திகதி நளினியும் முருகனும் பெண்கள் சிறையில் சந்தித்து பேசியபோது, பிரியங்கா தன்னை சந்தித்தது பற்றி முருகனிடம், நளினி கூறியுள்ளார்.
இதை எதிர்பாராத முருகன் நளினியிடம் தட்டிக்கேட்டதாகவும் அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த சந்திப்பு கடந்த 5ஆம் திகதி நடக்க இருந்தது. அன்று நளினி மீது கோபத்துடன் இருந்த முருகன் நளினியை சந்திக்க மறுத்து விட்டார்.இந்த நிலையில் நளினியும் முருகனும் 15 நாட்கள் கழித்து நேற்று முன்தினம் சனிக்கிழமை சந்திப்பதாக இருந்தது. ஏற்க னவே கடந்த 5ஆம் திகதி நடைபெற இருந்த சந்திப்பை முருகன் புறக்கணித்த நிலையில் அடுத்த முறை இருவரும் சந்திப்பார்கள் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று முன்தினம் காலை நிலைமை திடீரென மாறியது. நளினி விரும்பாததால் முருகனுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் இவர்களது சந்திப்பு அரித்ராவின் வருகையை அடுத்தே நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment