கிழக்கை வெற்றிகொண்டது போன்று வடக்கையும் பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்து அங்குள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவோம் என்று தென்மாகாண முதலமைச்சர் சான்விஜேலால் டி சில்வா தெரிவித்தார்.
தென்மாகாணத்தில் 10 தோட்டப் பாடசாலைகளுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 56 புதிய ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலியில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
விடுதலைப்புலிகளின் தலைவர் தனது பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்கி கல்விமானாக மாற்றிவருவதுடன், ஏனைய தமிழ்ப் பிள்ளைகளின் கரங்களில் ஆயுதங்களை பலாத்காரமாகத் திணித்து யுத்தத்திற்கு அனுப்பிவருகிறார்.
ஆனால் எமது அரசு தெற்கில் பாடசாலைப் பிள்ளைகளுக்கு சிறந்த புத்தகங்களை வழங்கி அவர்களை புத்திஜீவிகளாக மாற்றிவருகின்றது.
பயங்கரவாதம் யாழ். மேயர் துரையப்பாவின் படுகொலையுடன் ஆரம்பமாகி நாளுக்கு நாள் உச்சக்கட்டத்தையடைந்து இன்று 33 ஆண்டுகளாகின்றன.
ஆட்சிக்கு வந்த அனைத்துக் கட்சிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்போம் என சூளுரைத்து வந்தார்களே தவிர எந்தத் தீர்க்கமான முடிவையும் மேற்கொண்டதில்லை. எவ்வாறேனும் இந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இல்லாதுபோனால் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் வீணாக அழிக்கப்படும். எமது ஜனாதிபதி எந்த வழியிலாவது இந்த யுத்தத்திற்குத் தீர்வு கண்டே தீருவார்.
கிழக்குத் தேர்தலின்போது 56 வீதமானோர் வாக்களித்தமை பெரும் வெற்றியாகும். அதைவிட வாகரையை விடுவித்த பின்னர் 76 வீதமானோர் வாக்களித்தது அதைவிடப் பெரிய வெற்றியாகும்.
ஆசிரியத் தொழில் புனிதமான ஒன்றாகும். தெற்கில் நீண்டகாலமாகத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி சீர்குலைந்திருந்தது. ஆசிரியர் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணம்.
கடந்த வருடம் இச்சீர்குலைவுகளைச் சீர் படுத்த தென்மாகாண தோட்டப் பாடசாலைகளுக்கு 56 தமிழ்த் தொண்டர் ஆசிரியர்களை நியமித்தோம்.
தென்மாகாணத்தில் 2007ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டில் புலமைப்பரிசிலில் கூடுதல் புள்ளிகளைப் பெற்ற 69 மாணவர்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கொழும்பில் அவரது அலுவலகத்தில் பரிசு வழங்கிக் கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட கல்விப்பணிப்பாளர் எம்.சபாரஞ்சன், ஷ்ரீகாந்தன், ராஜேந்திரன் ஆகியோரும் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஜனாபா மதனியாகலீலும் உரையாற்றினர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment