திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை தூற்றுவதை நிறுத்திவிட்டு சீனா அவருடன் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
தலாய் லாமாவுடன் பேச்சுகளை நடத்துவதற்கான வாய்ப்பை சீன அரசாங்கம் கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் கோன் நிக்ரோபெண்டே, தலாய்லாமாவை பகிரங்கமாகத் தூற்றுவது நிலைமையை சீராக்க உதவப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
செனட்டின் வெளியுறவுக்கான சபையில் விளக்கமளித்த நிக்ரோபெண்டே மேலும் தெரிவிக்கையில்;
"தலாய்லாமாவுடன் சீனா பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அமெரிக்கா செய்யும் முயற்சிகளுக்கு சீனா பதிலளிக்க வேண்டும். அத்துடன், இராஜதந்திரிகளையும் கண்காணிப்பாளர்களையும் திபெத்திற்குள் அனுமதிக்க வேண்டும். சீனா சுமார் 4000 திபெத்திய கைதிகளை தடுத்து வைத்திருப்பதுடன், அவர்களை உரிய முறையில் நடத்துவதில்லையென அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே திபெத்திற்குள் செல்வதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது.
தலாய்லாமாவுடன் பேச்சுகளை நடத்தாமல் பிராந்தியத்தில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்த சீனாவால் முடியாது. இதனால் சீனாவுக்கும் தலாய்லாமாவுக்குமிடையில் உண்மையான பேச்சுகள் நடைபெற வேண்டும். கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கான பாலங்களை உருவாக்கி நீண்டகால துயரங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உண்மையான சுயாட்சி அடையப்பட வேண்டு"மெனத் தெரிவித்துள்ளார்.
திபெத்திய கலவரங்களின் பின்னணியில் தலாய் லாமாவே இருப்பதாக சீனா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ள தலாய் லாமா, தாம் தனிநாட்டைக் கோரவில்லை திபெத்தின் சுயாட்சியையே கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment