Tuesday, April 29, 2008

இந்திய தண்ணீரை புறக்கணித்தேனா?


பட ஆடியோ விழாவுக்கு வந்தபோது, நான் இந்திய நடிகர்களைப் புறக்கணித்ததாகவும், இந்திய உணவு, இந்திய தண்ணீரைக் கூடக் குடிக்காமல் புறக்கணித்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் வேதனை தருவதாக நடிகர் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.

கடந்த 25ம் தேதி சென்னையில் நடந்த தசாவதாரம் பட ஆடியோ விழாவில் ஜாக்கி சான் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார்.

விழாவுக்கு வந்த சான், இந்திய உணவுகளை புறக்கணித்ததாகவும், தண்ணீர் கூட குடிக்கவில்லை, கூடவே கொண்டு வந்திருந்தார். நடிகர்களுடன் பேசவில்லை என்றும் செய்திகள் வெளியாகின.

இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் ஜாக்கி சான். இதுதொடர்பாக தனது இணையதளத்தில் மறுப்பு வெளியிட்டுள்ளார் ஜாக்கி.

அதில் ஜாக்கி சான் கூறியிருப்பதாவது:

என்னால் மறக்க முடியாத சென்னை பயணத்திற்கு பிறகு இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துள்ள 'தசாவதாரம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்றேன்.

ஆஸ்கார் பிலிம்ஸ் பற்றி நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக எனது படங்களை ஆஸ்கார் பிலிம்ஸ் இந்தியாவில் விநியோகம் செய்து வருகிறது. பேட்டில் க்ரீக் பிரால் படத்திலிருந்து அவர்கள் எனது படங்களை இந்தியாவில் விநியோகித்து வருகிறார்கள். அவர்களால்தான் நான் இந்தியாவில் பிரபலமானேன். அவர்கள் எனது பழைய நண்பர்கள்.

ஆஸ்கார் பிலிம்ஸ் ரமேஷ்பாபு, நடிகை மல்லிகா ஷெராவத்தின் சகோதரர் விக்ரம் லம்பா ஆகிய இருவரும் நேரடியாக ஹாங்காங் வந்து விழாவில் கலந்து கொள்ளும்படி அழைத்தனர்.

ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு எனக்கு ஏராளமான நிகழ்ச்சிகள் இருந்த போதிலும், அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு கலந்து கொள்ள ஒப்புக் கொண்டேன். எனது வருகைக்காக ஆஸ்கார் பிலிம்ஸ் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. நான் வருவது யாருக்கும் தெரியாது என நினைத்திருந்தேன்.

ஆனால் சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும் ஏராளமான ரசிகர்களும், நண்பர்களும் என்னை சூழ்ந்து கொண்ட போது நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன். விழா என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. ஏராளமான நட்பானவர்களையும், பிரபலமானவர்களையும் நான் அதில் பார்த்தேன்.

இந்தியாவின் புகழ் பெற்ற நட்சத்திரங்களை நான் பார்த்து தெரிந்து கொண்டேன். ஆனால் அவர்களது பெயர்களை உச்சரிக்க முடியவில்லை. பல பேர் என்னிடம் பேச ஆர்வமுடன் முன்வந்தனர். என்னால் யார் யாரிடமெல்லாம் பேச முடிந்ததோ அனைவரிடமும் பேசினேன். யாரையும் நான் புறக்கணித்து புண்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

'தசாவதாரம்' படம் நிச்சயம் பிரம்மிப்பாக இருக்கிறது. நவீன இந்தியா சினிமா பற்றிய எனது பார்வையை அது மாற்றியுள்ளது. இதற்கு முன்பும் இந்திய படங்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் இந்த படம் சிறப்பான ஒன்று.

ஹாங்காங் மற்றும் சீன இயக்குனர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த படத்தை நிச்சயம் பாருங்கள். முன்னை காட்டிலும் கடினமாக உழையுங்கள். ஏனெனில் விரைவில் உலக ரசிகர்களை இந்திய சினிமா தன் பக்கம் திருப்பும்.

எனக்கு இருந்த வேலைப்பளு காரணமாக அன்றைய இரவே சென்னையை விட்டு நான் கிளம்பி விட்டேன். மறுநாள் காலை பெய்ஜிங்கில் என்னை சந்தித்தவர்கள் உங்கள் பயணம் நன்றாக இல்லை என்று கேள்விப்பட்டோம். இப்போது எப்படி உணருகிறீர்கள் என்று கேட்டார்கள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறப்பான விழா நடந்திருக்கும் போது எதற்காக இப்படி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.

இணையதளத்தில் விழா குறித்த செய்திகளை படித்ததும் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒரு கட்டுரையில், நான் இந்திய குடிதண்ணீரை மறுத்ததாகவும், வெளிநாட்டிலிருந்து இதற்கென தண்ணீரை கொண்டு வந்திருந்ததாகவும், மேலும் எனது சமையல்காரர்களை உடன் அழைத்து சென்று அவர்கள் சமைத்ததையே சாப்பிட்டு இந்திய உணவை ஒதுக்கியதாகவும் எழுதியிருந்தது.

மேலும் இந்திய நட்சத்திரங்களுடன் நான் பேசாமல் அவர்களை புறக்கணித்ததாகவும் குறிப்பிட்டிருந்தது. அவர்களது பெயர் கூட எனக்கு தெரியாத போது அவர்களை நான் புறந்தள்ளினேன் என்று கூறுவது எப்படி என்று தெரியவில்லை.

நான் இந்திய உணவை சாப்பிடவில்லை என்று கூறுவது முற்றிலும் பொய். எனக்கு இந்திய உணவு பிடிக்கும். அன்றைய தினம் அந்த ஹோட்டலில் இரண்டு வேளை நான் இந்திய உணவையே சாப்பிட்டேன்.

இந்த கட்டுரையை யார் எழுதியிருந்தாலும் அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன், நான் வெளிநாட்டிலிருந்து நீரை கொண்டு வந்தேனா? அப்படியென்றால் அந்த குடிதண்ணீர் நிறுவனத்தின் பெயரை கூறுங்கள். ஹோட்டல் பணியாளர்களிடம் இதுபற்றி விசாரித்து பாருங்கள். அதே ஹோட்டல் பணியாளர்களிடம் ஆராய்ச்சி செய்து நான் எந்த உணவை சாப்பிட்டேன் என்பதை கேட்டுப் பாருங்கள்.

விருந்தினர்களை புறக்கணித்து எனது அறைக்குள்ளேயே நான் பூட்டிக் கொண்டிருந்தேனா? நேரத்தை செலவழித்து இந்தியா வந்த எனக்கு ஹோட்டல் ரூமுக்குள்ளே தான் இருப்பது வேலையா?

பல வருடங்களாக நான் பொதுமக்களை நேருக்கு நேராக சந்தித்து வருகிறேன். என்னைப் பற்றி என்னென்னவோ எழுதியுள்ளனர். ஆனால் இந்த கட்டுரை எனது மறக்க முடியாத சென்னை பயணத்தை சகிக்க ஒன்றாக மாற்றியுள்ளது. என்னை பற்றிய தவறான ஒரு கண்ணோட்டத்தை இது பொதுமக்களிடத்திலேயே கொண்டு சென்றுள்ளது.

அதனால் தான் இவ்வளவு பெரிய விளக்கத்தை உடனடியாக நான் தெரிவிக்கிறேன்.

எனது இந்திய நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் இந்த பயணம் நன்றாக இருந்தது என்பதை கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜாக்கி.

No comments: