சமாதான வலயமாக மடு ஆலய பகுதியினை பிரகடனப்படுத்தக் கோரி உண்ணாவிரதம்
மடு மாதா ஆலயப்பகுதியினை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்துமாறும் மத ஸ்தலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியும் நேற்று மன்னாரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. மன்னார் மாவட்ட சர்வ மதமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் மன்னார் புனித செபஸ்தியார் பேராலய வளவில் இடம்பெற்றது. காலை 9 மணி முதல் மாலை 3.30 மணிவரை நடை பெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட னர்.
தென்பகுதியிலிருந்து வருகை தந்த 8 பேர் கொண்ட சர்வமத தலைவர்கள், மன்னார் மறைமாவட்ட குரு ?தல்வர் அருட்பணி அ.விக்டர் சோசை, முன்னாள் மன்னார் மாவட்ட எம்.பி. சூசைதாசன், உட்பட பல முக்கியஸ்தர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு கோரிக்கையினை வலியுறுத்தினர்.
மன்னார் மறை மாவட்ட சர்வதேச அருட் பணி மையத்தினால் தயாரிக்கப்பட்ட மகஜர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் கையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கைவாழ் கத்தோலிக்க மக்களுக்கு மடுத்திருப்பதியானது வணக்கத்திற்கும், பக்திக்குமுரிய ஆன்மீகத் திருத்தலமாக விளங்குகிறது.
கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாது ஏனைய மதங்களைச் சார்ந்த மக்களுக்கும் மருதமடு தனித்துவமானதோர் அருட்தலமாகத் திகழ்ந்து, ஆன்மீக அருளைப் பொழிந்து வருகின்றது. பாதுகாப்பைத் தேடும் மக்களுக்கு மருதமடு ஓர் அடைக்கலப் பூமியாகவும், இடம் பெயர்ந்தோருக்கு புகலிடமாகவும் இருந்து வந்தது. அனைத்து இராணுவ அல்லது அரசியல் செயற்பாடுகளும் முற்று முழுதாக இங்கு தடை செய்யப்பட்டு வந்தன. கடந்து போன ஆண்டுகள் யுத்தகாலமாக இருந்தபோதிலும் மடுத்திருப்பதி தன் நிலையை இழக்க வில்லை. அன்றும் இன்றும் இப்புனித இடத்தில் கோவில் கொண்டிருக்கும் எம் அன்னை இலங்கையின் சகல பகுதிகளிலும் உள்ள எல்லோருக்கும் சகல வரங்களையும் அதிகமாய் வழங்கிக்கொண்டே வருகின்றார்.
மருதமடுத்தாயின் யூபிலி ஆண்டாகிய 2000ஆம் ஆண்டிலே, இலங்கை தேசம் முழுவதும் அன்னையின் திருச்சொரூபத்தைத் தாங்கிச் சென்ற போது இனம், மொழி, மதம் கடந்து அன்னையை பார்த்து சமாதானத்திற்காகக் கண்ணீர் வடித்த மக்களின் குரல் இன் றும் எம் இதயத்திற்கு கேட்கிறது. அன்னை தந்த அமைதி வாழ்வும், அவர் தந்த சமாதான நாட்களும் சிதைந்து இன்று எத்தனையோ மக்களின் அழுகுரல்கள் அமைதிக்காக செபித்துக்கொண்டே இருக்கின்றன.
மடுத்திருப்பதியைச் சமாதானப்பிராந்திய மாகப் பிரகடனப்படுத்தி போர் நடவடிக்கை கள், இராணுவ நடமாட்டங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டு இத்திருத்தலம் தனது அரிய பணியைத் தொடர ஆவன செய்துதர வேண்டுமென்று இலங்கை ஜனாதிபதியையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் பல தடவைகளில் மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப் ஆண்டகை விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஆயினும் இன்று மடுத்திருப்பதியில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால் இத்திருத்தலமும், அதன் புனிதத் துவமும், மாண்பும் சீர்குலைந்துள்ளதை யிட்டு எமது சர்வமத அருட்பணிமையமானது ஆழ்ந்த கவலை கொள்கின்றது. இந்த நெருக்கடியான நேரத்தில் கத்தோலிக்க மக்களுக்கும், மருதமடுத் தாயாரின் பக்தர்களான மற்றைய சமயங்களின் அன்பர்களுக்கும், இலங்கையின், மதத்தலைவர்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இத்திருத்தலத்தைப் பாதுகாக்குமாறு மன்னார் மறைமாவட்ட சர்வமத அமைப்பானது உருக்கமான வேண்டு கோளை முன்வைக்கின்றது. மருதமடுத் திருப்பதியையும், ஏனைய வழிபாட்டு ஸ்தலங்க ளையும், இராணுவ அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்று முழுதாக விடுவிக்க இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அனைத்து சர்வமத அன்பர்கள் சார்பாக மன்னார் மறைமாவட்ட சர்வமத அமைப்பானது வேண்டுகோள் விடுக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment