ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியாக வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினியை பிரியங்கா காந்தி சந்தித்து பேசியமை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா அனுதாபமான கரிசனையை வெளிப்படுத்த வழிவகுக்குமென தான் நம்புவதாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் செயலை பாராட்டி அமைச்சர் சந்திரசேகரன் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பிரியங்கா காந்தியின் இந்த நடவடிக்கை இந்திய பெண் இனத்துக்கும் காந்தி குடும்பத்துக்கும் பெருமை சேர்க்கும் செயலாகும். இந்த நடவடிக்கை மனிதாபிமான சிந்தனைகளின் சிகரமாக அமைந்துள்ளது.
ராஜீவ் காந்தியின் மறைவு ஈழப்போராட்டம், இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் மிகப்பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருப்பினும் தற்போதைய பிரியங்காவின் அணுகுமுறை இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் இந்தியா அனுதாப வெளிப்பாட்டினை எடுப்பதற்கு வழிவகுக்குமாயின் இலங்கை தமிழர்கள் அனைவரும் அதற்காக என்றும் நன்றியுடையவராக இருப்பார்கள். இந்த சந்திப்பு ஒரு தற்செயல் சந்திப்பாக அமையாமல் அனைத்து இந்திய மக்களுக்கும் ஒரு புதிய தகவலை சொல்வதாகவும் அமைய வேண்டும்.
இப்படியான ஒரு நல்ல விளைவு இந்தியா மீதான விசுவாசத்தை அதிகரிக்கும். பிரியங்கா காந்தியின் இந்த நடவடிக்கைக்கு மலையக மக்களின் சார்பில் எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment