Thursday, April 24, 2008

அசி்ன் மீது நடவடிக்கை


கர்நாடகாவை கண்டித்து தமிழ்த் திரையுலகம் சார்பில் ஏப்ரல் 4-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்க வேண்டும் என முன்பே உத்தரவிடப்பட்டது.

ஆனால், நடிகர்கள் கார்த்திக், ஆர்யா, நடிகைகள் அசின், சிம்ரன், நவ்யா நாயர், கோபிகா, பத்மப்ரியா, நிலா, இய்க்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் உட்பட பலர் கலந்து கொள்ளவில்லை.அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம் உட்பட அனைத்து சங்கத்தினரும் கலந்து கொண்டனர். அதில் உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர்கள், 15 நாட்களுக்குள் விளக்கம் அனுப்ப வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இன்றுடன் 15 நாள் கெடு முடிவடைகிறது.

இது குறித்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி கூறியதாவது :-


நடிகர் நடிகைகளில் 15 க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் அனைவருமே விளக்க கடிதம் அனுப்பிவிட்டனர். ஆனால், அசின் மட்டும் விளக்க கடிதம் அனுப்பவில்லை. நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத நடிகர், நடிகைகள் சிலர் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், அவர்கள்கூட எங்களுக்கு விளக்க கடிதம் அனுப்பியுள்ளனர். இது அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. ஆனால், உறுப்பினராக உள்ள அசின், விளக்கம் அளிக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுப்பதுதான் சரி.

இது தொடர்பாக முடிவு எடுக்க தயாரிப்பாளர் சங்கம் உட்பட அனைத்து சங்கத்தினருடனும் கலந்து பேசுவோம். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வெளியூரில் இருக்கிறார். அவர் சென்னை வந்ததும் இக்கூட்டம் நடைபெறும்.


இதனால் தமிழ்ப் படங்களில் நடிக்க அசினுக்கு தடை விதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

No comments: