தாய்லாந்தின் பாங்கொங்க் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10 வயதுச் சிறுமியான தாரகா ஜெயபாலனும் அவரது தயாரும் அங்கு தாங்கள் அனுபவிக்கும் அவலங்கள் குறித்து விபரித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (15.04.08) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர்கள் வழங்கிய பேட்டி விபரம் வருமாறு:
தாரகா
எனக்கு 10 வயது. 10 மாதங்களாக இந்த முகாமுக்குள் தான் இருக்கின்றோம். நாங்கள் சாவகச்சேரியில் இருந்தோம். பிறகு இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு போய் அங்கே இருந்தோம். அதற்குப் பிறகு வெளிநாட்டிற்கு போவதற்கு கிளம்பி வந்து இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோம்.
நானும் அம்மாவும் 11 வயதில் ஒரு அக்காவும் 4 வயதில் தங்கச்சியும் ஒரு வயதில் ஒரு தம்பியும் இந்த முகாமில்தான் இருக்கின்றோம். படுப்பதற்கு கூட இடமில்லை. வேறு, வேறு ஆட்களை இப்போதும் பிடித்துக்கொண்டு வந்து போடுகின்றனர்.
சிலவேளை விடிய வரை படுக்க இடமில்லாமல் விழித்தவாறே இருப்போம். சரியான நித்திரை வரும். வேறு ஆட்களைக் கொண்டு வந்து போடும் போது அவர்களுக்கு நோய்கள் இருக்கின்றன.
சிறிய இடம் தான் இருக்கின்றது. அதில் படுக்க முடியாது. தள்ளி, தள்ளிப் படுங்கள் என்று சொல்வார்கள். அதனால் எம்மால் படுக்க முடியவில்லை. அக்கா, தங்கச்சி, தம்பி எல்லோருக்கும் அப்படித்தான்.
தாய்லாந்து சாப்பாடுதான் தருவார்கள். சாப்பாட்டை ஒழுங்காகச் சாப்பிட முடியாது. மணமடிக்கும், சத்தி வருகின்ற மாதிரி எல்லாம் இருக்கும். வெளியில் சாப்பாடு வாங்கி சாப்பிட எல்லாம் எம்மை விடமாட்டார்கள்.
மலசல கூடத்திற்குள் தண்ணீர் நின்றுவிடும். மலசலகூடம் கழிவுகளால் நிரம்பிவிடும். மலசலகூடம் எல்லாம் போக முடியாது. 400 பேருக்கு 2 மலசலகூடம்தான் இருக்கின்றன. இன்றும் தண்ணீர் வரவில்லை. நிறுத்தி விட்டனர்.
இன்று காலை சாப்பிடுவதற்கு எதனையும் தரவில்லை. மதியம் சோறு மட்டும் தான் தருவார்கள். கறி இல்லை. நேற்றிரவும் சோறுதான், கறி இல்லை.
விடிய எழும்பி இரவு வரும் வரை அப்படியே சும்மா இருப்பதுதான். இரவு படுக்க இடம் கிடைத்தால் படுப்போம் இல்லா விட்டால் இரவும் முழித்தவாறு இருப்போம்.
அப்பாவை இதுவரை 2 தடவைகள் சந்தித்தோம். அப்பாவிடம் 3 மணித்தியாலம் தான் கதைத்தோம்.
இடம்பெயர்ந்து வவுனியாவில் இருக்கும் போது பாடசாலை போனேன். வவுனியாவில் இருக்கும் போது 4 ஆம் ஆண்டு படித்தேன். இங்கும் படிக்க போவதற்கு விருப்பம். ஆனால் இங்கு படிக்க முடியாது. 10 மாதமாக சும்மா தான் இருக்கின்றோம்.
இங்கு இருக்க முடியாது. ஏதாவது ஒரு நாட்டிற்குப் போய் சந்தோசமாக நாங்கள் இருக்க வேண்டும். அப்பாவுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
திருமதி ஜெயபாலன்
கேள்வி: உங்கள் மகள் கூறியது போல் இரவு முழுக்க கண்விழித்து இருப்பதாக கூறியிருந்தார். ஒரு தாயாக நீங்கள் இந்த 3 பிள்ளைகளோடு எப்படிச் சமாளிக்கின்றீர்கள்?
பதில்: மூன்று பிள்ளைகள் இல்லை. நான்கு பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். பிள்ளைகளோடு இங்கு வந்து சரியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம்.
இரவில் கூட படுக்க இடமில்லை. தண்ணீர் இல்லை. பிள்ளைகளுக்கு வருத்தம் கடுமை என்று சொல்லி கதவைத் தட்டினால் கூட பிள்ளைகளை வந்து கொண்டு போக மாட்டார்கள். 10 மாதங்களாக பெரும் துன்பப்பட்டுக் கொண்டு தான் இதுவரைக்கும் இருந்து கொண்டிருக்கின்றோம். எந்த ஒரு பதிலையும் காணவில்லை.
கேள்வி: தாய்லாந்து உணவைத்தான் 3 வேளையும் தருவதாக தாரகா கூறியிருந்தார். உங்களின் ஒரு வயது மகன் அவருக்கு எவ்வாறான உணவுகளை கொடுக்கக்கூடியதாக இருக்கின்றது?
பதில்: மகனுக்கு பாண்தான் கொடுக்கின்றேன். வெளியில் 10 ரூபா என்றால் இங்கு 20 ரூபா. சோறு எடுத்து தண்ணி ஊத்திதான் மற்ற பிள்ளைகளுக்கு இவ்வளவு நாளும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன். இங்கு பாண் எல்லாம் இருமடங்கு விலை. வெளியில பாண் 21 ரூபா என்றால் இங்கு 40 ரூபா. சாப்பாடு எல்லாம் விலை கூட.
சாப்பாடு பிரச்சினை, நோய்களுக்கு மருந்தில்லை. இங்கு வேற்று நாட்டுக்காரர்கள் வந்து போவார்கள். இங்கு வந்து போகின்றவர்களால் பிரச்சினை. அவர்களால் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. வயிற்றோட்டம் காய்ச்சல் சொறி போன்ற நோய்கள் வருகின்றன. இன்றும் தண்ணீர் இல்லை. இப்படித்தான் இடைக்கிட தண்ணீரை நிறுத்துவார்கள்.
இரண்டு மலசலகூடங்கள் தான் இருக்கின்றன. 400 முதல் 500 பேர்களை கொண்டு வந்து போடுவார்கள். அதனால் அவசரத்துக்கு மலசலகூடம் போக முடியாது. குளியலறைக்குப் போக முடியாது. சிறிய பிள்ளைகள் மலசலகூடம் போனால் கூட தண்ணீர் இல்லை. இந்த நிலைமைகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
கேள்வி: நீங்கள் இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அறைக்குள்ளோ அல்லது அந்த இடத்திலோ கிட்டத்தட்ட எவ்வளவு பேர் இருக்கிறீர்கள்?
பதில்: வேற்று நாட்டுக்காரர்கள் எல்லாம் சேர்த்து 400 முதல் 500 பேர்களை அடைத்து வைத்திருக்கின்றனர்.
அங்கு படுப்பதற்குக்கூட இடமில்லை என்று கூறுகின்றீர்கள். நீங்கள் பெரியவர் ஒரளவிற்கு சமாளிக்கலாம். சின்னப் பிள்ளைகள் படுப்பதற்கு கஷ்டப்படும் போது உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்.
படுக்க முடியாமல் இருக்கும் போது சிலவேளை அழுது கொண்டு தான் இருப்பேன். ஒரு சின்ன இடத்தில் 4 பிள்ளைகளையும் படுக்கவிட்டிட்டு நான் இருப்பேன். சில நேரம் அந்த இடமும் கிடைக்காது. என்ன செய்வது. சரியா நெருங்கி நெருங்கி தான் படுக்கிறோம். எனது பிள்ளைகள் மிகவும் துன்பப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர்.
எனது 2 ஆவது மகளுக்கு கன்னம், கன்னமாக அடித்தும் போட்டார்கள். அவர்களுடன் ஒன்றும் கதைக்க முடியாது. எமக்கு தமிழ் மொழிதான் தெரியும். வேறு மொழி தெரியாது. வேறு நாட்டுக்காரரை கொஞ்சம் தள்ளியிரு என்று சொன்னதிற்கு எனது பிள்ளைக்கு அடித்தார்கள். நாங்கள் கதைக்க முடியாது. நாங்கள் கதைத்தாலும் அவர்களுக்கு ஒன்றும் விளங்காது.
கேள்வி: உங்களுக்கு உடுப்புகள் எந்த வகையில் கிடைக்கின்றன?
பதில்: 10 மாதங்கள் முடிந்து விட்டன. கொண்டு வந்த உடுப்பைத் தான் போடுகின்றோம். வேறு உடுப்புக்கள் எதுவும் இதுவரை தரவில்லை. எந்த ஒரு பதிலும் இல்லை. எந்த நாடும் எங்களை முன்வந்து எடுக்கவில்லை.
இன்று எனது மகனுக்கு வயிற்றோட்டம். ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கின்றது. வருத்தம் என்றால் பிள்ளைகளை பரிட்சீப்பதில்லை. எம்மை வைத்து பூட்டியிருக்கும் வெளியில் ஒரு ஓட்டை இருக்கிறது. அந்த ஓட்டைக்குள்ளால் என்ன வருத்தம். காய்ச்சலா, சத்தியா, வயிற்றோட்டமா, எத்தனை நாள் என்று அவ்வளவும்தான் கேட்பார்கள்.
மருத்துவர் உள்ளுக்குள் வந்து பார்க்க மாட்டார். அந்த கம்பியால் நாம் என்ன சொல்கிறோமோ அவ்வளவு தான். யாரும் வந்து மருந்து தந்தாலும் சரியாகப் பதில் சொல்வதில்லை.
அடுத்தது என்ன வருத்தம் என்று காலையில் வந்து கேட்டுவிட்டு போனார்கள என்றால் மாலையில்தான் மருந்து கொண்டு வந்து தருவார்கள். அதுவும் எங்களிடம் தருவதில்லை. சிறைச்சாலை அதிகாரியிடம்தான் கொண்டு வந்து கொடுத்து விட்டு போவார்கள். அவர்கள் மருந்தை கொண்டு வந்து இலக்கத்தினை எழுதி ஓட்டைக்குள் தள்ளிப் போட்டு போவார்கள்.
சிலவேளை எப்படி மருந்தினை கொடுப்பது என்று கூட தெரியாமல் இருக்கும். எப்படி போடுவது எதற்கு என்று ஒன்றும் தெரியாது. காய்ச்சல், வாந்தி, வயிற்றோட்டம் என்றால் மூன்றிற்கும் ஒரேயடியாக எழுதி போட்டுவிட்டு போனால் எந்த வருத்தத்திற்கு என்ன மருந்து என்று ஒன்றும் தெரியாது. அனைத்தையும் ஒன்றாகவே தருவார்கள்.
கேள்வி: இந்த 10 மாதங்களில் எப்போதாவது உங்களை இந்த அறையை விட்டு வெளியில் விட்டிருக்கின்றனரா?
பதில்: சிலவேளையில் கீழ இறக்கி கொண்டு போவார்கள். இப்போது அதுவும் இல்லை. முன்னர் மாதத்திற்கொரு தடவை இறக்கி விடுவார்கள். அந்த இடமும் அறை மாதிரி தான். பிள்ளைகளுடன் வேற்று நாட்டுக்காரர்கள் எல்லோரையும் இறக்கி விடுவார்கள். தற்போது அதுவும் இல்லை.
கேள்வி: உங்கள் கணவரை இரண்டு தடவைகள்தான் சந்திக்கக்கூடியதாக இருந்ததாக தாரகா கூறினார். எவ்வளவு நேரம் சந்திக்கக்கூடியதாக இருந்தது.
பதில்: 3 மணித்தியாலயங்கள் மட்டும் தான். 9:00 மணிக்கு இறக்கி 12:00 மணிக்கு இங்கே கொண்டு வந்து அடைத்துவிட்டனர்.
கேள்வி: உங்களின் குழந்தைகள் உங்களிடம் கேட்பார்களா எப்போது எமக்கு விடிவு வரும் எப்போது நாங்கள் வெளியில் போவோம் என்று ஏதாவது கேட்பார்களா?
பதில்: எனது மூன்று பிள்ளைகளும் அழாத நாளே இல்லை. எப்போது அம்மா அப்பாவிடம் போவோம் என்று ஒரே அழுது கொண்டு தான் இருப்பார்கள். இந்த 10 மாதமும் அழுது கொண்டு தான் இந்த சிறைக்குள் இருக்கின்றோம்.
கேள்வி: நீங்கள் ஒரு தாயாக 4 பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு 10 மாதமாக அவர்களுடன் இருக்கின்றீர்கள். இந்த நிகழ்ச்சிணைக் கேட்பவர்களுக்கு என்ன செய்தியினை நீங்கள் சொல்ல விரும்புகின்றீர்கள்?
பதில்: ஒரு நல்ல பதிலைத் தான் எதிர்பார்க்கின்றேன். எனது பிள்ளைகள் அப்பா எங்கே அம்மா அப்பாவிடம் எப்போது போவோம் என்று அடிக்கடி கேட்பார்கள். இதற்கு நீங்கள் தான் நல்ல பதிலைச் சொல்ல வேண்டும். ஒரு நாடாவது எங்களை முன்வந்து எடுக்க வேண்டும். நாங்கள் எங்கள் நாட்டுக்கு திரும்ப போய் உயிரோட வாழ முடியாது. அங்கு இருக்க முடியாமல் தான் இங்கு வந்தோம். எமக்கு நீங்கள் தான் ஒரு நல்ல பதிலைச் சொல்ல வேண்டும்.
சாவகச்சேரியிலிருந்து 98 ஆம் ஆண்டு வந்தோம். அங்கு இருக்கின்ற எமது வீட்டிற்கு என்ன நடந்தது என்று தெரியாது. வவுனியாவில் வந்து ஒரு காணியை வாங்கி வீடு கட்டி இருந்தோம். அங்கேயும் இருக்க முடியாது என்று சொல்லித் தான் தாய்லாந்திற்கு வந்தோம். தாய்லாந்து வந்தும் எனது பிள்ளைகள் சிறையில் இருக்க வேண்டி ஏற்பட்டு விட்டது. படிப்பும் இல்லை.
அம்மா படிப்பில்லை அம்மா, இப்படியே இருந்து என்ன செய்வது, எம்மை பூட்டி வைத்திருக்கின்றனர் என்றுகூறி மூன்று பெண் பிள்ளைகளும் ஒவ்வொரு நாளும் அழுவார்கள்.
இரவில் குளிப்பதற்கு தண்ணீர் இல்லாவிட்டால் அம்மா எம்மால் படுக்க முடியாமல் இருக்கிறது அம்மா, அவ்வளவு வெப்பமாக இருக்கிறது அம்மா, மணக்கிறது அம்மா எங்களால் இருக்க முடியாமல் இருக்கிறது அம்மா, குளிக்க வேண்டும் போல இருக்கின்றது அம்மா என்று சொல்வார்கள்.
குளிப்பதற்கு தண்ணீர் இல்லை, தண்ணீர் இருந்தாலும் எம்மை மற்றவர்கள் குளிக்கவிட மாட்டார்கள். எனது பிள்ளைகள் அழுது கொண்டுதான் இருப்பார்கள்.
முன்னர் படுக்கை விரிப்பை விரித்து படுத்தோம். இப்போது தண்ணீர் இல்லாதபடியால் தோய்க்க முடியாது. வெறும் நிலத்தில் தான் படுக்கின்றோம். எல்லோரும் அப்படித்தான நிலத்தில் தான் படுப்பார்கள்.
இங்கு தமிழர்கள் மொத்தம் 21 பேர் உள்ளனர். 12 பிள்ளைகளும் 9 பெரியவர்களும் உள்ளனர். நான் மட்டுமல்ல பொதுவாக எல்லோரும் இங்கு கஸ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றார் திருமதி ஜெயபாலன்.
[சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008, 06:17 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment