Wednesday, April 30, 2008

தவறுக்குத் தவறு விடையல்ல!

முறையான நீதிவிசாரணை இல்லாமல் யாரும் தண்டிக்கப்படக் கூடாது
என்பதுதான் மனித சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை.தூக்குத் தண்டனையே ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்து வரும் நேரமிது.

உலகமெல்லாம் மனித உரிமைக்கு முக்கியத்துவம் அதிகரித்துவரும் நேரத்தில், இந்தியாவில் அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் அதிகரித்துவரும் "என்கௌண்டர்" படுகொலைகள் அதிர்ச்சியளிக்கின்றன.குற்றவாளிகள்தான் என்றாலும்கூட, முறையான நீதிவிசாரணையோ, நீதிமன்றத் தீர்ப்போ இல்லாமல், காவல்துறையே அவர்களைத் தண்டிப்பது என்பது, மனித
உரிமை மீறல் என்பதைவிட அடிப்படை மனிதாபிமான உணர்வின்மை என்றுதான் கூற வேண்டும்.

இரண்டு நாள் முன்பு திருச்சியில் ஒரு "என்கௌண்டர்" படுகொலை, காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கொலை செய்யப்பட்டிருப்பது ஒரு பயங்கரமான குற்றவாளி என்பதாகவே இருக்கட்டும். அவர்கள் குற்றவாளிகளா, தீவிரவாதிகளா என்று தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றமே தவிர காவல்துறை அல்ல. காவல்து றையே குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்குத்தண்டனை வழங்குவது என்றால் நீதிமன்றங்களுக்குத் தேவையே இல்லையே!

சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை சாதகமாக்கி இந்தக் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள்; நீதிமன்றத்தில் இவர்களது குற்றங்களைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியாத அளவுக்கு இவர்கள் சாமர்த்தியமாகத் தவறுகள் செய்து தப்பித்து விடுகிறார்கள்; சாட்சி களைப் பயமுறுத்தித் தங்களது குற்றத்தை நிரூபிக்க வழியில்லாமல் செய்து
விடுகிறார்கள். இவையெல்லாம் இந்த "ரௌடி"கள் பற்றி காவல்துறையினர்
தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள்.

நீதிமன்றத்தில் நிறுத்தி இவர்களைத் தண்டிக்க வழியில்லாத நிலைமையில், சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நாங்கள் "என்கௌண்டர்" கொலைகளில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்பதுதான் காவல்துறையினர், இந்த போலி மோதல் மர ணங்களுக்குத் தெரிவிக்கும் காரணங்கள். அதாவது, குற்றத்தைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியாத தங்களது கையாலாகாத்தனத்துக்கு இவர்கள் தரும் வியாக்கியானங்களும், சப்பைக்கட்டுகளும் வேடிக்கையாக இருக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 68 பேர் காவல்து றையின் போலி என்கௌண்டருக்குப் பலியாகி இருக்கிறார்கள்.திமுக அரசு இந்த முறை ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மட்டும் 15 பேர் பலியாகி இருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகள் என்பதால் இந்தக் கொலைகள் எப்படி நியாயமாகி விடும் என்பது தான் கேள்வி.
இதுபோன்ற "என்கௌண்டர்" மரணங்கள் நடைபெறும்போது, அதை அரசு சாராத, பாரபட்சமற்ற அமைப்பின் மூலம் விசாரணை நடத்தி, தவறு காவல்துறை மீது இருப்பதாக அந்த அமைப்பு தீர்ப்பளித்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை தொடரப்பட வேண்டும் என்று தேசிய மனிதஉரிமைக் கமிஷன் வழிமுறைகள் வகுத்திருக்கிறது. ஆனால், அரசும் நிர்வாகமும் இதைப் பின்பற்றுவதே கிடையாது.

சமூக விரோதிகள் அதிகரித்து விட்டனர் என்பதும், இவர்களை ஒடுக்காமல்
விட்டால் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்ப தும், தாதாக்களின்
சாம்ராஜ்யம் நிறுவப்பட்டு விடும் அபாயம் நிலவு வதும் மறுக்கவே முடியாத
உண்மை. அதைவிட உண்மை, இந்த தாதாக்களும், ரௌடிகளும் பல்வேறு
அரசியல்கட்சித் தலைவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்கள்
என்பது. அதுமட்டு மல்ல, காவல்துறை அதிகாரிகள் பலருடன் நெருக்கமான
தொடர்பு டையவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.

தமிழகத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான சமூக விரோதிகள் இருப்பதாகவும், இவர்களில் சுமார் 800 பேர் சென்னையில் மட்டும் இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இவர்கள் இந்த அளவுக்கு செல்வாக்குப் பெற்று வளர்ந்ததற்கு, ரியல் எஸ் டேட் தொழிலும், "கட்டைப் பஞ்சாயத்து" என்று அழைக்கப்படும் மிரட்டல் நீதிமன்றங்களும்தான் அடிப்படைக் காரணம்.

போதாக்குறைக்கு, தனியார் வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்களின் வசூல் பிரிவு இவர்களைத் தங்களது அடியாள்களாக்கி அந்தஸ்து அளித்தது. அரசியல்வாதிகளின் ஆதரவும் கிடைத்தபோது, ரௌடிகள் சாம்ராஜ்யம் வளரத் தொடங்கியது. சமூக விரோதிகளுக்கு அரசி யல் தலைவர்கள் தரும் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டால், இந்த தாதாக்கள்
தைரியமாகச் செயல்பட முடியுமா என்பது சந்தேகம்தான்.சமூக விரோதிகள் வளரக்கூடாது என்பது மட்டுமல்ல, நடமாடவே கூடாது என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால், அவர்களை ஒடுக்குவதற்கு யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொல் லும் அதிகாரத்தை காவல்துறைக்கு அளிப்பது என்பது அதைவிட ஆபத்தானது.

தினமணி

No comments: