Saturday, April 19, 2008

இந்திய ஜனாதிபதி மெக்சிகோவில் ஏற்படுத்திய பரபரப்பு

மெக்சிகோவில் நடந்த சம்பிரதாய வரவேற்பின்போது, கவனக்குறைவு காரணமாக ஜனாதிபதி பிரதிபா, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தாமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின், சுதாரித்துக் கொண்ட ஜனாதிபதி, மீண்டும் திரும்பி வந்து கொடிக்கு மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி பிரதிபா, மெக்சிகோ உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு, 13 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். மெக்சிகோ சென்ற அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் பெலிப் கால்ட்ரோன், ஜனாதிபதியை வரவேற்றார். பின், ஜனாதிபதிக்கு, மெக்சிகோ ராணுவத்தினரின் அணி வகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றவாறு, ஜனாதிபதி நடந்து வந்தார். அவர் அருகில், மெக்சிகோ அதிபரும் வந்தார். அந்த இடத்தில், மெக்சிகோ மற்றும் இந்திய தேசியக் கொடிகள் இருந்தன. அவற்றை கண்டதும், மெக்சிகோ அதிபர் பெலிப், சிறிது நேரம் நின்றார்.

ஜனாதிபதி பிரதிபா, இதை உணரவில்லை. கவனக்குறைவாக, இந்திய தேசியக் கொடியையும் கடந்து, நடந்து சென்றார். இதைக் கண்ட, மெக்சிகோ ராணுவ கமாண்டர், "மேடம் பிரசிடெண்ட்" என பணிவாக அழைத்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பிரதிபா, மீண்டும் திரும்ப வந்து, தேசியக் கொடிக்கு மரியாதை செய்தார். இந்த சம்பவத்தால், அணி வகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

No comments: