இலங்கையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, அமைதியை நிலைநாட்டும் வகையில் சமாதான ஏற்பாட்டாளராக செயற்படத் தாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் ஆன்மிக குருவான ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தம்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் உலகில் நீண்ட ஆயுத மோதலை முடிவுக்கு கொண்டுவர எந்தவித அழைப்பும் தேவையில்லை என்றும் கூறினார்.
குறிப்பாக வீடொன்று தீப்பற்றிக் கொண்டால் நீங்கள் எவரது அழைப்பையும் எதிர்பார்க்க மாட்டீர்கள். ஆனால், உணர்வுபூர்வ மனிதர் ஒருவர் உடனே பாய்ந்து அதனை அணைக்கவே முயல்வார் என்றும் ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் விளக்கியுள்ளார். நோர்வேயிலிருந்து மின்னஞ்சல் ஊடாக ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர உங்களால் உதவ முடியுமா? இருதரப்பினரதும் நம்பிக்கைக்கு பாத்திரமானவரென நீங்கள் கருதுகிறீர்களா? என கேட்ட கேள்வியொன்றிற்கு, ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
நிச்சயமாக இருதரப்பினர் மத்தியிலும் நான் நம்பிக்கைக்கு பாத்திரமாகவே விளங்குகிறேன். எம்மிடம் அமைதியை உருவாக்குவதைத் தவிர எந்தவித நோக்கமும் கிடையாது என அவர்கள் நன்கு அறிவார்கள் என நான் நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த வாரம் வாழும் கலைப்பயிற்சி நிலையம் ஒழுங்கு செய்திருந்த அமைதி மாநாட்டை அடுத்து கருத்து வெளியிடுகையிலேயே ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் இவ்வாறு தெரிவித்தார். இந்த மாநாட்டில் இலங்கை, இந்தியா, நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பௌத்த மதகுருமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் விஷேடமாக இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வைகோ நோர்வே விஷேட பிரதிநிதி ஜோன் ஹென்சன்பவர் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
வாழும் கலைப்பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகரான ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகளுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் இலங்கைக்கு மூன்று தடவைகள் விஜயம் செய்துள்ளார். இறுதியாக 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment