Sunday, April 20, 2008

'பிரிட்டிஷ் விதிப்படி பிரியங்கா-நளினி சந்திப்பு'

வேலூர் பெண்கள் சிறையில் நடந்த பிரியங்கா-நளினி ரகசிய சந்திப்பில், சிறை
விதிகள் அப்பட்டமாக மீறப்பட் டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால்,
"அப்படி எதுவும் விதி மீறப்படவில்லை' என்று கூறி, சிறைத் துறை
அதிகாரிகள், சமாளித்து வருகின்றனர்.ராஜிவ் கொலை வழக்கில்,
நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ராஜிவ் மகள் பிரியங்கா, கடந்த
மாதம் ரகசியமாக சென்று சந்தித்து பேசிய விவகாரம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.



இந்த சந்திப்பில், சிறைத் துறை
தொடர்புடைய அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.வேலூர் பெண்கள் சிறையில்,விசாரணை கைதிகளை திங்கள்,
புதன், வெள்ளிக் கிழமைகளிலும், தண்டனை கைதிகளை செவ்வாய், வியாழக்
கிழமைகளில் மட்டும் சந்திக்க முடியும்.ஞாயிற்றுக் கிழமை, தேசிய விடுமுறை
நாட்களில் எந்தக் கைதியையும் சந்திக்க முடியாது.கைதியை சந்திக்க
விரும்புவோர், நேர்காணல் விண்ணப்பம் பூர்த்தி செய்து தர வேண்டும். சந்திக்க
விரும்பும் கைதியின் பெயர், விசாரணை கைதியா, தண்டனை கைதியா, சந்திக்க
விரும்புவோர் பெயர், முழு முகவரி தெரிவிக்க வேண்டும்.இந்த விவரம்,
நேர்காணல் புத்தகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும், கைதியை சந்திக்க
விரும்புவோர் கையெழுத்து, நேர்காணல் புத்தகத்தில் இருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கைதியிடம் எழுத்து மூலமாக சம்மதம் பெற்ற பின் சந்திப்பு
நடக்க வேண்டும். வேலை நாட்களில் தினம் காலை 10 மணி முதல்
மாலை 4 மணி வரை மட்டும் சந்தித்துப் பேச வேண்டும். ரத்த சம்பந்தப்பட்ட
உறவு முறையினர் மட்டுமே கைதியை சந்தித்து பார்க்க அனுமதி உள்ளது.
நேர்காணல் விண்ணப்பம் தராமல் யாரையும் கைதிகளை சந்திக்க
அனுமதிக்கக் கூடாது.இந்த விதிகளில், பெரும்பாலானவை, 
நளினி-பிரியங்கா சந்திப்பில் மீறப்பட்டுள்ளன. நளினியை சந்தித்த பிரியங்கா

மனு எதுவும் கொடுக்கவில்லை.
கடந்த மாதம் 19ம் தேதி நேர்காணல் பதிவு புத்தகத்தில் 31 பேர் கையெழுத்து
உள்ளது. அதில் பிரியங்கா கையெழுத்து இல்லை.இது பற்றி விசாரித்தால்,
சிறைத் துறை அதிகாரிகள் சமாளிக்கின்றனர். ""சிறையில் இருக்கும் கைதியை
வி.வி.ஐ.பி.,க்கள் சந்திக்க விரும்பினால் நேர்காணல் பதிவு புத்தகத்தில் எழுதி
வைக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பமும் கொடுக்க
வேண்டியதில்லை. சிறை கண்காணிப்பாளர் தனியாக ஒரு பதிவேடு
வைத்துள்ளார். அதில், குறித்துக் கொண்டு கைதியை சந்திக்க அனுமதி
அளிக்கலாம். பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே இந்த நடைமுறை உள்ளது. அதை
பின்பற்றியே பிரியங்கா - நளினி சந்திப்பு நடந்தது. நளினி சம்மதத்துடனே
பிரியங்கா சந்தித்துச் சென்றுள்ளார். விதிமீறல் எதுவும் நடக்கவில்லை,''
என்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள்.பிரிட்டிஷ் விதிமுறைப்படி பிரியங்கா -
நளினி சந்திப்பை நடத்த சிறை அதிகாரிகள் உதவிய விவகாரம் மேலும்
பலவிவாதங்களை கிளப்பி விட்டுள்ளது.

No comments: