Thursday, April 17, 2008

ஒபாமாவை பாம்பு தைல வியாபாரியென வர்ணித்த எதிர்க்கட்சி எம்.பி. மன்னிப்பு கோரினார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராவதற்கு போட்டியிடும் செனட்டர் பராக் ஒபாமாவை தரக்குறைவாக பேசியதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டேவிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அங்குள்ள குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் தீவிர சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட கறுப்பினத்தை சேர்ந்த செனட்டர் பராக் ஒபாமா முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒபாமாவுக்கு பல இடங்களில் நல்ல ஆதரவு இருந்தாலும் அவரை அங்குள்ள வெள்ளையர்கள் சிலர் இன ரீதியாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி புஷ்ஷின் குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்.பி.ஜியோப் டேவிஸ் என்பவர் ஒபாமா பற்றி கூறுகையில், `பாம்பு தைலம் விற்பவன் போல் இருக்கும் ஒபாமாவா அமெரிக்காவை பாதுகாக்கப் போகிறார்?' என விமர்சித்துள்ளார். இந்தப் பேச்சு ஊடகங்களில் வெளியானதால் எம்.பி. டேவிஸுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரி கடிதம் எழுதியுள்ளார் டேவிஸ். அதில் `தரக்குறைவான வார்த்தைகளை நான் உபயோகித்தது வருத்தமளிக்கிறது. நான் உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. உங்களிடம் உண்மையாக மன்னிப்புக் கேட்கிறேன். மன்னித்து விடுங்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை ஒபாமா அலுவலகத்தில் எம்.பி.டேவிஸ் நேராக சென்று வழங்கினார் என அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

No comments: