
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் விரும்பவில்லை என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு (TMVP) கூறியுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, பிரபாகரனுக்கு எதிராக கருணா தலைமையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் பிள்ளையன் இது குறித்து கூறியதாவது: ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்வுகாணவே பிரபாகரன் விரும்புகிறார். அவருக்கு அமைதிப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை. இலங்கையில் ஒரு சிறு பகுதியாவது தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்று விரும்புவாரே தவிர பேச்சுவார்த்தைக்கு முன்வர மாட்டார் என்றார் பிள்ளையன். அடுத்த மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை முதல்வர் பதவிக்கான போட்டியாளர்களில் பிள்ளையனும் ஒருவர். இதற்கிடையே ஆயுதங்களை ஒப்படைக்க முன்வந்தால் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று இலங்கை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ரம்புக்வெல்லா கூறினார். எந்த வகையான வன்முறையையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எனவே அவர்கள் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார் அவர். இலங்கை கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தி முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் அங்கு ஜனநாயக முழுமையாக மலர்ந்துவிடும் என்று இலங்கை அரசு கருதுகிறது. இலங்கை கிழக்குப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து 2007-ம் ஆண்டு ஜூனில் விடுவிக்கப்பட்டது. அங்கு உள்ளாட்சித் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. தற்போது அங்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

No comments:
Post a Comment