மியன்மாரை தாக்கிய நர்கீஸ் புயலினால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 2 இலட்சத்திற்கும் அதிகமாக இருப்பதாக ஐ.நா.வின் ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
மியான்மாரை கடந்த 2 ஆம் திகதி இரவு நர்கீஸ் என்ற பயங்கர புயல் தாக்கியது. இதில் ஐராவதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் சமூக சேவை அமைப்பு ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வின்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை 63,290 இல் இருந்து 1,01,682 வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 2,20,000 வரை இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் வெளிநாட்டு உதவிக் குழுக்களை நாட்டுக்குள் அனுமதிக்க மறுப்பதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு உதவிக்குழுக்களுக்கு அனுமதி வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மியன்மார் அரசின் அனுமதியை எதிர்பாராமல் அந்நாட்டுக்குள் அதிரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பிரான்ஸ் யோசனை கூறியது. ஆனால், இதனை ஐ.நா. ஏற்கவில்லை.
இதற்கிடையே உலக நாடுகளின் கடும் கண்டனத்துக்கு மத்தியில், மியன்மார் அரசு ஏற்கனவே திட்டமிட்டபடி புதிய அரசியல் சாசனம் மீதான வாக்கெடுப்பை கடந்த சனிக்கிழமை நடத்தியது.
புயல் பாதித்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் வாக்குச்சாவடிகள் காலை முதலே திறந்து இருந்தன. இந்த அரசியல் சாசனத்துக்கு மக்களின் ஒப்புதல் கிடைத்துவிட்டால் இன்னும் 2 ஆண்டுகளில் ஜனநாயக அரசை அமைப்பதற்கான தேர்தல் நடைபெறும். எனவே, பொதுமக்கள் அனைவரும் வாக்குப் போட வேண்டும் என்று இராணுவ அரசு தெரிவித்துள்ளது. புயல் பாதித்த இடங்களில் மட்டும் தேர்தல் 2 வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவி ஆங்-சாங் சூகி தலைமையிலான தேசிய லீக் கட்சி இந்தத் தேர்தலை நிராகரித்து உள்ளது. இந்தத் தேர்தல் மூலம் இராணுவ அரசு தங்களை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நினைக்கிறது. எனவே, பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட 10 இலட்சம் மக்களுக்கு உதவும் வகையில் தேர்தலை தள்ளிப் போட வேண்டும் என்று அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே தேர்தல் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு இராணுவ அரசு தடை விதித்துள்ளது. மொத்த வாக்காளர்கள் எவ்வளவு என்று கூடத் தெரிவிக்கவில்லை. புத்ததுறவிகள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியினர் ஆகியோருக்கு வாக்குரிமை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதிலே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அது போதாது என்று பிரிட்டிஷ் அரசு கூறியுள்ளது.
இப்போது, கூடுதலான உதவிப்பொருள் விமானங்கள் வந்திறங்குகின்றன. அழிவுகளை மதிப்பிடும் குழுவொன்றையும் பிரிட்டன் அங்கு அனுப்பவுள்ளது.
ஆனால், இந்த சூறாவளி அனர்த்தம், இதிகாசங்களில் கண்ட மனிதப் பேரவல நிலைக்கு மாறி வந்து கொண்டிருக்கிறது என்று பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபான்ட் கூறியுள்ளார். அதேநேரம், பர்மிய இராணுவ ஆட்சியாளர்கள் காட்டியது அரக்கத்தனமான பாராமுகம் என்றும் அவர் கண்டித்துள்ளார்.
சுத்தமான தண்ணீரும் சுகாதாரமும் உடனடியாகக் கிடைக்காவிட்டால் பத்து இலட்சம் பேருக்கு ஆபத்து ஏற்படுமென்று உதவி அமைப்பொன்று எச்சரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment