
இம்மாதம் முதலாம் திகதி முதல் 14 ஆம் திகதி (நேற்று)வரை இடம்பெற்ற படையினருக்கும், புலிகளுக்குமிடையிலான மோதல்களின்போது புலிகள் தரப்பில் 368 பேர் கொல்லப்பட்டும் 438 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல், முப்படையினரிலும், பொலிஸாரிலும் 41 பேர் கொல்லப்பட்டும் 155 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்றும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவே இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறியவை வருமாறு:
வடக்கில் புலிகளுக்கெதிரான படையினரின் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடம்பன் மடு போன்ற பகுதிகள் இப்போது படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.
இந்த மாதம் முதலம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற சண்டையின்போது புலிகள் தரப்பில் 368 பேர் கொல்லப்பட்டும் 438 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
படைத்தரப்பில் 41 பேர் கொல்லப்பட்டதோடு 155 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோல் சாதாரண பொதுமக்கள் 17 பேர் கொல்லப்பட்டும் 39 பேர் காயமடைந்துமுள்ளனர்.
அதுமாத்திரமின்றி இந்த மாதம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்த 358 பொதுமக்கள் பாதுகாப்பை நாடி படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
இதுதவிர கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் ஜி.சி.ஈ சாதாரண தரப் பரிட்சையில் சித்தியெய்தத் தவறிய மாணவர்களை புலிகள் தமது அமைப்பில் பலாத்காரமாகச் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன" என்றார்.

No comments:
Post a Comment