
ஈ.பி.டி.பியைச் சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் எனத் தெரிவித்து அதனை வன்மையாக கண்டித்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியிருப்பவை வருமாறு:
இது விடுதலைக்காக போராடுவதாக கூறுகின்ற பயங்கரவாத இயக்கத்தின் ஒரு மோசடித்தனமான செயலாகும்.
செல்வி மகேஸ்வரி வேலாயுதம் ஒரு சட்டத்தரணியும் , ஈ.பி.டி.பியின் முழுநேர செயற்பாட்டாளருமாவர். நான் அறிந்த வகையில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேல் சமூக சேவகியாக செயற்பட்டவர். தான் கற்ற சட்டத்துறையைக் கைவிட்டு அதிகப்படியான நேரத்தை இந்தியாவிலும், இலங்கையிலும் அகதிகள் மத்தியிலும் வாழ்க்கையில் மிகக் கஷ்டப்பட்டவர்கள் மத்தியிலும் அவர்களின் நன்மைக்காக உழைத்தவர். நான் நன்கு அறிந்த வகையில் அவரை ஓர் நேர்மையான,அமைதியான தன் நாட்டையும் அம்மக்களையும் நேசிக்கும் ஒரு பெண்மணியாக கருதுகிறேன். உடல் நலம் குன்றியிருந்த தனது தாயரை தன் சொந்த ஊரான கரவெட்டிக்குப் பார்க்க சென்றிருந்தபோது இப்படுகொலை நடந்துள்ளது.
மகேஸ்வரி வீரமிக்க ஒரு பெண்மணியாக ஏற்கப்பட வேண்டியவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்களில் திருமதி சரோஜினி யோகேஸ்வரன் போன்று தன்னை எதிர்நோக்கிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது அரசியலில் ஈடுபட்ட ஒரேயொரு பெண்மணி ஆவர்.
திருமதி சரோஜினி யோகேஸ்வரன் போன்று செல்வி மகேஸ்வரியும் நிராயுதபாணியாக பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லாத வேளையில் வீட்டில் வைத்தே சுடப்பட்டுள்ளார். சரித்திரத்தில் அவர் ஒரு வீராங்கணையாக இடம்பெற வேண்டியவர். அவர் ஓர் அப்பாவியும் ஒரு சிறந்த சமூக சேவகியுமாவர்.
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது தனது மக்களுக்கு சேவை செய்வதற்காக துணிந்து வெளிப்பட்டு செயலாற்றியவரின் சேவை தமிழ் மக்களுக்கு இச் சம்பவத்தால் மறுக்கப்பட்டுள்ளது. நிராயுதபாணியான இப் பெண்மணியை அநாகரிகமான முறையில் படுகொலை செய்தமை வெட்கித் தலைகுனிய வைக்கும் நடவடிக்கையாகும்.
எனது ஆழ்ந்த அனுதாபத்தை அவரின் பெற்றோருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் அவருடன் பல ஆண்டுகாலம் உழைத்த ஈ.பி.டி.பி.தோழர்களும் அவரை நேசித்து அவர் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.
உண்மைக்காக உழைக்கும் அத்தனை பேரும் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான உலக பிரசித்திப் பெற்ற ஈவிரக்கமற்ற கொடூரமான மனித உயிர்களின் பெறுமதி தெரியாத பயங்கரவாதிகளின் செயலை கண்டிக்க வேண்டும் என்று உள்ளது.

No comments:
Post a Comment