Monday, May 12, 2008

பெனாஸிர் பூட்டோவா??????

பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தான் வடகொரியாவுக்கு அணுசக்தி தொழில் நுட்பத்தை வழங்கினார் என பெனாசிரின் நெருங்கிய நண்பரொருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வடகொரியா யுரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டது. இது உலக அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அமெரிக்கா மற்றும் ஐ.நா.வின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த வடகொரியா ஒப்புக் கொண்டது.

முன்னதாக வட கொரியாவுக்கு, பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர்கான்தான் அணுசக்தி தொழில்நுட்பத்தை கடத்திச் சென்று வழங்கியதாக தகவல்கள் வெளியானது. மேலும் ஈரான், லிபியா போன்ற நாடுகளுக்கு அவர் அணு தொழில்நுட்பத்தை வழங்கியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவரை பாகிஸ்தான் அரசு கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது.

இந்த நிலையில் வட கொரியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கியது பாகிஸ்தானின் மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோதான் என்று அவரது நெருங்கிய நண்பர் ஷியாம் பாட்டியா திடுக்கிடும் தகவலை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள `குட்பை ஷாஹ்சாதி' என்ற புத்தகத்தில் தெரிவித்திருப்பதாவது;

1993 இல் பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் பிரதமராக இருந்தார். அப்போது வட கொரியாவிடம் இருந்து ஏவுகணை தொழில்நுட்பத்தை பெறுவது என்றும் பதிலுக்கு அந்நாட்டுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்குவது என்றும் அவர் முடிவு செய்தார்.

அந்த நேரத்தில் பாகிஸ்தானின் இராணுவ ஆராய்ச்சிகள் பற்றி இந்தியா, ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளின் இரகசிய புலனாய்வு அமைப்புகள் மிகவும் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தன. இதையடுத்து இந்த நாடுகளின் கண்களிலிருந்து தப்பும் வகையில், அணுசக்தி தொழில்நுட்பத்தை தானே நேரிடையாக எடுத்துச் சென்று வட கொரியாவிடம் கொடுத்து விட பெனாசிர் முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 1993 ஆம் ஆண்டின் கடைசியில் வடகொரியாவுக்கு பெனாசிர் சுற்றுப்பயணம் சென்றார். இஸ்லாமாபாத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் நீண்ட கோட் ஒன்றை அவர் வாங்கிக் கொண்டார். அதில் உட்புறத்தில் பெரிய இரகசியமான பை ஒன்று இருந்தது. அந்தப் பைக்குள் அணுசக்தி தொழில்நுட்பத் தகவல்கள் அடங்கிய இறுவட்டு (சி.டி.)க்களை வைத்து, பியாங்காங் (வட கொரிய தலைநகர்) சென்று, அந்நாட்டு தலைவர்களிடம் பெனாசிர் ஒப்படைத்தார். பெனாசிர் என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது, இந்தத் தகவல்களை தெரிவித்தார் என ஷியாம் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: