Monday, May 12, 2008

இறந்த மூதாட்டியின் உடலுடன் இருமாதங்கள் வாழ்ந்த குடும்பம்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இறந்த மூதாட்டி ஒருவரின் உடலுடன் இரு குழந்தைகளும் தாயும் வாழ்ந்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மக்தலீன் ஆல்வினா மிடில்ஸ்வொர்த் என்ற 90 வயது மூதாட்டி இறந்தபின்னர் அவரை பிரார்த்தனை மூலம் உயிர்ப்பிக்கலாமென நினைத்தே உடலை 2 மாதங்கள் வரை கூடவே வைத்திருந்தனர்.

இம் மூதாட்டியிடமிருந்து நீண்டநாட்களாக தகவல் ஏதும் இல்லை. அவருக்கு என்ன ஆயிற்று என வீட்டில் சென்று பார்க்கும்படி 120 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வேறொரு நகரில் வசிக்கும் அவரது சகோதரி அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அதிகாரி ஒருவர் முகவரியைக் கண்டுபிடித்து மிடில்ஸ்வொர்த் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு லீவிஸ் என்ற பெண் இருந்திருக்கின்றார். மிடில்ஸ்வொர்த் விடுமுறையில் வெளியில் சென்றிருப்பதாகக் கூறி அதிகாரியைத் திருப்பியனுப்பிவிட லீவிஸ் முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் அவரைத் தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த அதிகாரி அங்கு நறுமணம் கமழ பக்திப்பரவசம் மிக்க பாடல்கள் ஒலித்துக்கொண்ருந்ததைக் கேட்டிருக்கிறார். வீட்டில் இருந்த 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியும் 12 வயது மதிக்கத் தக்க ஒரு சிறுவனும் அதிகாரியைப் பார்த்ததும் அழத்தொடங்கினர்.

வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் சோதனை செய்த அதிகாரி கடைசியாக கழிவறைக் கதவைத் திறந்ததும், ஏதோ சிதைந்த நிலையில் கிடந்த பொருளை பார்த்திருக்கிறார். இறுதியில் அதுதான் தான் தேடி வந்த மிடில்ஸ்வெர்த்தின் உடல் என்பதைக் கண்டறிந்திருக்கிறார். லீவிஸின் தாய் மிடில்ஸ்வொர்த் எனக் கூறப்படுகிறது.

லீவிஸிடம் நடத்திய விசாரணையில் மிடில்ஸ்வொர்த் 2 மாதங்களுக்கு முன்பே இறந்து விட்டதாகவும் . கடவுளிடம் மனமுருகப் பிரார்த்தித்தால் அவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அவரை கழிவறையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு மேல் தேவையென்றால் தமது குரு குஸேவிடம் கேட்குமாறும் அவர்தான் இறந்தவர் பிழைப்பார் என்ற கருத்தைக் கூறியதாகவும் லீவிஸ் தெரிவித்தார்.

இதையடுத்து குஸேவும் லீவிஸும் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் இருவரும் காப்பகத்தில் இருக்கின்றனர். விசாரணை தொடர்கிறது.

No comments: