Saturday, May 3, 2008

விலை வாசி

விஷமேறும் தலைக்கு....
"விறுவிறு" வென்று
விலை வாசியும் ஏறும்
விஷத்தைப் போல....

ஈழத்தீவிலும்
விலைவாசியின் ஏற்றமும்
விஷத்தைப் போலத்தான்!

விஷத்தின் வகைதான்
விளங்க வில்லை
ஆலகால விஷமா?
அணுத்துகள் விஷமா?
அல்ல... அல்ல...

"சயனைட்" டின்
சுவையும் அறியேன்
"சுரீர்" என ஏறும்
வேகமும் அறியேன்!
அறிந்து கொண்டேன்...
விலைவாசி மூலம்!

அரிசி விலைஏறியது
சீனி விலை ஏறியது
பெற்றோல் விலையும்
"பிசாசு" போல் ஏறியது..
முருங்கை மரத்தில்!

"மா" விலையும்
"மளமள" வென்று
ஏறிக்கொண்டேயிருக்கிறது
எல்லோரும் மௌனம்
"மௌனத்தைத் தவிர
வேறொன்றறியேன் பராபரமே"

என்று எண்ணியா
எல்லோரும் துயில்கிறார்!
அரசின் கடமை என்ன?
நாட்டில் சுபீட்சம்
பொருளாதார மேம்பாடு
வாழ்க்கைச் செலவைக் குறைத்தல்
எல்லோர்க்கும் இல்லம்
எல்லோருக்கும் உணவு
எல்லோருக்கும் நல்வாழ்வு!
இது இயலாதென்றால்
எதற்காம் அரசு!

எவனோ ஒரு புத்திசாலி
இப்படிச் சொன்னான்
"பொருட்களை வாங்கி
விற்பதற்கு அரசு எதற்கு...
வர்த்தகரே போதும்"
அவன் வாய்க்குப்
போடவேண்டும்... சர்க்கரை!"
சர்க்கரையும் நாட்டிலில்லை!

மாவையும் மண்ணெண்ணையையும்
நம்பி வாழும் குடும்பங்களெல்லாம்
நாடி இழந்து கிடக்கிறார்கள்!
அரசியல்வாதிகளோ...
தொழிற்சங்கங்களோ...
நியாயத்தைக் கேட்க
நாதியற்றுக் கிடக்கிறார்கள்!
பாவம்
போராட வக்கின்றி!
தட்டினால்தான் ஓசை!
ஆளும் அரசே!
மாவின் விலையையும்
மண்ணெண்ணையின் விலையையும் உடனே குறை!

கலைவாதி கலீல்

No comments: