Monday, May 26, 2008

சொந்தமாக கரன்சி வெளியிட பிரிட்டன் நகரம் திட்டம்

பிரிட்டனில் உள்ள ஒரு நகரம், தங்கள் பரிமாற்றத்துக்கு தனி "Pound" கரன்சியை வெளியிட திட்டமிட்டுள்ளது. சசெக்ஸ் மாகாணத்தில் உள்ள லிவிஸ் என்ற நகரத்தில் உள்ள பிரபல தயாரிப்பாளர்கள், வியாபாரிகள், நிதி ஆலோசகர்கள், அரசியல் தலைவர்கள் சேர்ந்து இந்த திட்டத்தை தீட்டியுள்ளனர்.

உள்ளூரில் பொருட்களை வாங்க, பணப் பரிமாற்றம் செய்து கொள்ள மட்டும் இந்த கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம். தேவைப்படும் போது, இந்த கரன்சியை கொடுத்து, பிரிட்டனின் அதிகாரப்பூர்வ பவுண்ட் கரன்சியை பெற்றுக்கொள்ளலாம். இப்படி செய்தால், விலைவாசியை கட்டுப்படுத்த முடியும். குறைவான விலையில் பொருட்களை விற்க முடியும். மக்களுக்கும் விலையேற்ற பாதிப்பு இருக்காது. இந்த திட்டத்துக்கு பொதுமக்களில் சிலர் தயக்கம் காட்டினாலும், வியாபாரிகள், தொழிலதிபர்கள், நிதி ஆலோசகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

டேவன் மாகாணத்தில் உள்ள டாட்னஸ் என்ற நகரில் , முதன் முதலில், உள்ளூர் கரன்சி அச்சடித்து தரப்பட்டது. பிரிட்டன் அரசின் அதிகாரப்பூர்வ பவுண்ட் கரன்சியை தந்து, இந்த உள்ளூர் கரன்சியை மக்கள் பெற்றுக்கொள்கின்றனர். உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்கு மட்டும் இந்த உள்ளூர் கரன்சியை பயன்படுத்தி வருகின்றனர். வெற்றிகரமாக இந்தமுறை நடப்பதை அடுத்து, லிவிஸ் நகரத்தினரும் உள்ளூர் கரன்சி அச்சடித்து மக்களுக்கு வினியோகிக்கும் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த உள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்," நாட்டுக்கு எதிரான கரன்சி அல்ல இது. உள்ளூரில் உள்ளவர்கள் தங்களுக்குள் பரிமாற்றிக்கொள்ள உதவும் கரன்சி தான். இதனால், வெளி பொருட்களுக்கு மவுசு குறையும். எங்கள் தயாரிப்பு பொருட்களை மக்கள் வாங்குவர். விலையும் அதிகமாகாது' என்று தெரிவித்தனர்.

No comments: