Tuesday, May 20, 2008

ஜூனியர் விகடனில் தவறான செய்தி


தமிழகத்தில் இருந்து வெளிவரும் பிரபல்யமான வார ஏடான ஜூனியர் விகடன் கண்மூடித்தனமான தகவலை வழங்குவதன் மூலம் அது தனது தரத்தை தானாகவே குறைத்துக்கொள்கிறது. இதன் மூலம் அதன் வாசகர்கள் ஜூனியர் விகடனில் வெளிவரும் தகவல்கள் உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்று மறு ஆய்வு செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

சென்ற 11.05.2008 இல் வெளியான ஜூனியர் விகடனில், வலைப்பதிவில் (Blog) தமிழச்சி எனும் புனைப்பெயரில் எழுதிவரும் எழுத்தாளர்பற்றி தெரிவித்த தகவலில் இந்த தமிழச்சி என்பவர் ஒரு புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத்தமிழர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது முற்றிலும் ஒரு தவறான தகவல்.

தமிழச்சி ஒரு இலங்கை தமிழர் என்று எந்த அடிப்படையில் ஜூனியர் விகடன் இந்த தகவலை வெளியிட்டது? என்ன ஆதாரத்தைக்கொண்டு இப்படி ஒரு முடிவிற்கு வந்தார்கள்?

புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் ஏதேனும் ஒரு சம்பவத்தில் தமிழன், தமிழர், தமிழ், தமிழச்சி இப்படி ஒரு பெயர் கேள்விப்பட்டாலே போதும். என்ன ஏது என்று தீர விசாரிப்பது கிடையாது. உடனே அது புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழன் பற்றிய சம்பவம் என்ற முடிவிற்கு வந்துவிடுகிறார்கள் இந்த இந்திய பத்திரிகைகாரர்கள்.

இப்படியான நாளேடுகள், பத்திரிகைகள் இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கினால் சிறப்பாக இருக்கும். இலங்கையில் யாராவது ஒரு மந்திரியோ அல்லது அரசியல்வாதியோ வீதியால் நடந்து போகும்போது அவரது காலில் ஒரு கல்லு தடக்கிவிட்டால் போதும், உடனே என்ன ஏது என்று விசாரிக்காமலேயே "விடுதலைப்புலிகள் வீசிய கல்லினால் மந்திரி படுகாயம், இன்னும் பல புலிகள் கற்களுடன் வீதியில் உலாவி வருவதாக எமது புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது" என்று இலங்கை அரசு அறிக்கை வெளியிட்டு விடுவார்கள். அதைப்போலவேதான் இந்த ஜூனியர் விகடனும்.

உண்மையில் தமிழச்சி என்பவர் இந்திய தமிழர். பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் பாண்டிச்சேரி வம்சாவழி. அவர் இலங்கை தமிழ் பெண் அல்ல.

No comments: