இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகஇலங்கையரசுக்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு பின்னணியாகவிருந்து சோனியா காந்தி இயக்க, தமிழக முதலமைச்சர் கருணாநிதி திறம்பட நடித்துள்ளதாக இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல் பிரச்சினையில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி இரட்டை வேடம் போட்டு வருகின்றனர் என்று இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளதுடன் இலங்கை பிரச்சினைக்கு இந்திய அரசு இராணுவ உதவி கொடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் கடந்த சில நாட்களாக மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசி வருகிறார். கோவைக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
இலங்கை அரசுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு பின்புறமாக சோனியா காந்தி இயக்க, தமிழக முதல்வர் கருணாநிதி நடிகராகவிருந்தார். ராகுல் காந்தி கயிற்று கட்டிலில் தூங்குவதைவிட விலைவாசியை கயிற்றை கட்டி இறக்க வேண்டும்.
ஒகேனக்கல் பிரச்சினையில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. இரட்டை வேடம் போட்டு வருகிறது. இலங்கை பிரச்சினைக்கு இந்திய அரசு இராணுவ உதவி கொடுக்கக்கூடாது. நம் நாட்டில் பான்பராக் மற்றும் அண்டை மாநில அதிர்ஷ்டலாப சீட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அவைகள் கடைகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அதனை மாநில அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க வேண்டும்.
தமிழக அரசு ஜாதி ரீதியான கணக்கெடுப்பை பெரியாரின் கருத்துப்படி நடத்தினால், இடஒதுக்கீடு சீராக அமையும். கோவை விமான நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயர் வைக்க வேண்டும்.
கடந்த 25 ஆண்டுகளாக நான் செய்து வருகிறேன் ஜோதிட ஆராய்ச்சி. எனக்குத் தெரியும் அடுத்து வரப்போவது எந்த கட்சியின் ஆட்சி. நான் பொதுமக்களின் பிரச்சினைக்கு குரல் கொடுப்பதில் முதல்வனாக இருப்பவன்.
சில நாட்களாக 13 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியின் கொள்கைகளை விளக்கி வருகிறேன். கிராமம் முதல் நகரம் வரை இளைஞர், பெண்கள் என பாகுபாடின்றி அனைவரும் எனக்கு வரவேற்பளித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment