Saturday, May 3, 2008

கோரிக்கை விடுத்தோம் - ஆயர் கோரிக்கை கிடைக்கவில்லை - கோத்தபாய

மடு மாதா தேவாலயப் பகுதியை சமாதான வலயமாக பிரகடனப் படுத்துமாறு ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதியைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வருடம் பெப்ரவரி மாதம் இருபதாம் திகதியும் இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தேன் என மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

மடு மாதா தேவாலயப் பகுதியை யுத்த சூன்ய வலயமாகப் பிரகடனப் படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சிடம் எவரும் கோரிக்கை விடவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இது குறித்து ஆயரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

ஆயர் இது குறித்து மேலும் கூறியதாவது: மடுமாதா தேவாலயப் பகுதியை சமாதான வலயமாக்கும்படி கத்தோலிக்க ஆயர்களுடன் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். ஜனாதிபதியும் எமது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

மடுமாதா தேவாலயத்தைச் சூழவுள்ள இரண்டரை கிலோ மீற்றர் தூரத்தை யுத்த சூன்ய வலயமாகப் பிரகடனப்படுத்துமாறு நாம் பகிரங்கமாகவே மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.



மடுமாதா திருத்தல அமைதிவலயக் கோரிக்கை கிடைக்கவில்லை - கோத்தபாய

மடுமாதா திருத்தலத்தை சுற்றியுள்ள இரண்டரை கிலோமீற்றர் பிரதேசத்தை மோதல் தவிர்ப்பு பிரதேசமாக உருவாக்கும் கோரிக்கை எதுவும் பாதுகாப்பு அமைச்சுக்கு இதுவரை கிடைக் கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிங்கள வார இதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மடுமாதா திருத்தலத்தை சுற்றி யுள்ள இரண்டரை கிலோமீற்றர் பகுதியை அமைதிவலயமாக்கக் கோரும் தமது கோரிக்கைக்கு இதுவரை எதுவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி.வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்தெரிவித்திருப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, மடு தேவாலய பகுதியில் இருந்து புலிகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். அப் பகுதி தற்போது அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தலதாமாளிகை, ஜயஸ்ரீமா போதி ஆகிய மத வழிபாட்டு தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பே வரலாற்று புகழ் மிக்க மடுமாதா தேவாலயத்திற்கும் வழங்கப்படும். அரசின் தேவாலயங்களுக்கான பாதுகாப்பு கொள்கை அங்கு அமுல்செய்யப்படும்.

மடு தேவாலய பகுதியில் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு படையினரை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அங்கு பொலிஸார் பக்தர்களுக்கும், மதகுருமார்களுக்கும் தேவையான பாதுகாப்புகளை வழங்குவர்.

No comments: