"எனது மகன் நீரிழிவு நோயினால் 11 வயதில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சுகப்படுத்துவதற்காக நீர்கொழும்பு கிம்புலப்பிட்டியவில் உள்ள மதபோதகரிடம் கொண்டு சென்றேன். அவர் 13 இளநீர் குரும்பைகளை வெட்டி அவற்றின் இளநீருடன் பால் மற்றும் லெமன் ஜுஸையும் கலந்து ஒரு தூளையும் அதில் தூவி ஆசீர்வதித்து மகனுக்கு குடிக்கக் கொடுத்தார்.
இவ்வாறு கடந்த சனிக்கிழமை நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் மரணமான ரன்சிற (வயது 21) என்ற இளைஞனின் மரணவிசாரணையில் சாட்சியம் அளித்த அந்த இளைஞனின் தந்தை தெரிவித்தார்.
நீர்கொழும்பு மேலதிக நீதிவான் உப்புல் ராஜகருண முன்னிலையில் இந்த மரண விசாரணை நடைபெற்றது.
அங்கு சாட்சி மேலும் கூறியதாவது;
இந்தப் போதகர் நோய்களைக் குணமாக்கும் நிலையம் நடத்துவதாக அறிந்து சுகயீனமான எனது மகனை அங்கே கொண்டு சென்றோம்.
இளநீர் கலவையை மகனுக்கு பருகக் கொடுக்க, அவர் குடிக்க மறுத்தார். எனினும், குடிக்குமாறு வற்புறுத்தவே குடித்தார். அப்போது மகன் வாந்தியெடுத்து சுயநினைவு இழந்து விழுந்தார்.
அதன் பின்னர் மகனை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு வந்தோம். ஆனால், அவர் அங்கு இறந்து விட்டதாகத் வைத்தியர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி சன்னபெரேரா தனது பிரேத பரிசோதனை அறிக்கையில்;
இறந்தவரின் மூளையில் வீக்கம் ஏற்பட்டதுடன், நீர் உடலில் அதிகம் செலுத்தப்பட்டிருந்ததாகவும் இருதயத்தின் செயற்பாடும் அதிகரித்து அயடினும் உடலில் கூடியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சந்தேக நபரான மதபோதகர் முதியான்ச லாகே ரஞ்சித் பாலித (வயது 32) என்பவரை ஜுன் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment