Thursday, May 15, 2008

தனிநாட்டுக் கோரிக்கையைக் கிழக்கு மக்கள் நிராகரித்துவிட்டனர்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மூலம் கிழக்கு மக்கள் பிரபாகரனின் தனிநாட்டுக் கொள்கையை நிராகரித்துவிட்டனர் என்று அரசு நேற்றுத் தெரிவித்தது. இத் தேர்தல் முடிவுகள் கிழக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்கும் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டப் போராடும் சர்வதேசத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும் அரசு கூறியுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அரச பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் மூலம் முழுநாடும் வெற்றிபெற்றுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்கப்பாடுபடும் சர்வதேச சமூகத்திற்கும் இதன்மூலம் வெற்றி கிடைத்துள்ளது.

வடக்கு கிழக்குப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் நோக்கில் இந்த மாகாண சபை முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ள 13 ஆவது அரசமைப்புத் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், வடக்கு கிழக்குத் தவிர நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மாகாணசபை முறைமை வெற்றிகரமாகச் செயற்படுகிறது.

1987 இல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாகத் தற்காலிகமாக ஒருவருடத்திற்கு இணைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம்வரை ஒவ்வொரு வருடமும் வர்த்தமானி மூலம் இணைப்பு நீடிக்கப்பட்டு வந்தது.

கடந்த வருட நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இப்போது 20 வருடங்களின்பின் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமும் பிரபாகரனின் பிடியில் இருந்த கிழக்கு மக்கள் 20 வருடங்களுக்குப் பின் இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் மூலம் வாக்குரிமையை அனுபவித்துள்ளனர்.
சுமார் ஆறு லட்சம் கிழக்கு மக்கள் தங்கள் வாக்குரிமையை அனுபவிக்க எம்மால் ஏற்பாடு செய்துகொடுக்க முடிந்தது.

தேர்தல் ஒன்றில் வாக்களிக்க வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாத நிலையில் பிரபாகரனின் பிடியில் இருந்த மக்கள் இந்தத் தேர்தலில் சுதந்திரமாகத் தமது வீடுகளை விட்டு வெளியே வந்து தேர்தலில் வாக்களித்தனர்.

இத் தேர்தலில் பாரிய வாக்கு மோசடிகள், வன்முறைகள் இடம்பெற்றன என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அப்படி எவையும் நடக்கவில்லை. சிறுசிறு வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றன என்று முறைப்பாடுகள் கூறுகின்றன.
பாரிய மோசடிகள் இடம்பெற்றன என்று தெரிவித்து எதிர்க்கட்சிகள் சர்வதேச சமூகத்திற்கு முறைப்பாடு செய்யவுள்ளன என்றும் கூறப்படுகின்றது.

அது அக்கட்சிகளின் ஜனநாயக உரிமை. சர்வதேச சமூகத்திற்கு முறைப்பாடு செய்யும் அதேவேளை, தேர்தல் தினத்தன்று புலிகள் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாகவும் அக்கட்சிகள் முறைப்பாடு செய்யவேண்டும். அப்படி இல்லாவிடில் அது இக்கட்சிகள் இந்நாட்டுக்குச் செய்யும் பெரிய துரோகமாகும் என்றார்.

No comments: