Thursday, May 15, 2008

செல்வி மகேஸ்வரி வேலாயுதத்தின் கொலையைக் கண்டிக்கிறது ஈ.பி.டி.பி


"மனித நேய முயற்சிகளில் முழுமையாகத் தம்மை அர்ப்பணித்து பணிபுரிந்த மகேஸ்வரி வேலாயுதத்தை புலிகள் படுகொலை செய்துள்ளனர். அவர்களது இத்தகைய நடவடிக்கைகளை சர்வதேச சமூகமும், மனித உரிமை ஆர்வலர்களும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்''
இவ்வாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
மனிதர்கள் மீதான நேசிப்பை தம்மகத்தே கொண்டிந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதத்தைப் படுகொலை செய்து புலிகள் தமது வீரத்தைக் காட்டியிருக்கின்றனர். தமிழ் மக்களுக்கான அரசியலுரிமைப் பிரச்சினைக்கு மாகாண சபை ஊடாக கட்டம் கட்டமாகத் தீர்வுகாண முடியும் என்ற எமது நீண்ட முயற்சி வெற்றியளிக்கும்போது, எம்மோடு மக்கள் பணியாற்றிய மகத்தான மக்கள் சேவகியை இன்று நாம் இழந்துள்ளது. இக்கொலையை அனைவரும் கண்டிக்க வேண்டும். நிராயுதபாணிகள் மீது புலிகள் தொடர்ச்சியாக நடத்திவரும் படுகொலைகளைச் சர்வதேச சமூகமும், மனித உரிமை ஆர்வலர்களும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

எமது அரசியல் தீர்வு முயற்சிகளின் முதற்கட்டமாகக் கருதப்படும் மாகாணத்துக்கான அபிவிருத்தி மற்றும் மீள் கட்டுமாணப் பணிகளைச் செய்யும் பாரிய மக்கள் சேவை ஆரம்பிக்கப்படுகின்ற நேரத்தில், அதைத் தனது இலட்சியமாகக் கொண்டிருந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம் மீதான படுகொலை எமக்கு கவலையளிக்கிறது. ஆனாலும், இந்தப் பணியைச் செவ்வனே செய்து முடிப்பதுவே அவருக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.
அவர் மீதான படுகொலையானது, எமது மக்கள் பணியையோ, அரசியல் செயற்பாடுகளையோ துளியளவும் பாதிக்காது. நிராயுதபாணியாக நின்றிருந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதத்தைப் படுகொலை செய்த புலிகள், எமது மக்கள் அரசியல் உரிமைகளை அனுபவிக்கும்போது, வெட்கித் தலைகுனியும் நாள் வெகுவிரைவில் உதயமாகும். செல்வி மகேஸ்வரி வேலாயுதத்தின் இழப்பு தந்திருக்கும் துயரைச் சுமந்துகொண்டு எமது மக்கள் பணி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: